அத்து மீறல்களும் அகால விபத்துக்களும்!

அத்து மீறல்களும் அகால விபத்துக்களும்!

எத்தனை பணமும் ஒரு மனித உயிருக்கும் அதனால் உரிமையுடையவர்களுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்வுக்கும் ஈடாக முடியுமா?

நேற்று மட்டும் இருவிதமான அத்துமீறல்கள். ஒரு புறம் பார்த்தால் தலைநகர் சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் அதி வேக கார் பந்தயப் போட்டியில் ஈடுபட இருந்ததாகக் கூறி 9 சொகுசுக்கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மறுபுறம் தமிழகத்தின் கடைக்கோடியான திருச்செந்தூர், மணப்பாட்டில் படகு கவிழ்ந்து 10 பேர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கிறார்கள். பலி எண்ணிக்கை குறித்து இன்னமும் தகவல்கள் உறுதிப்படுத்தப் படவில்லை எனும் நிலை.

இரண்டு செய்திகளிலுமே உள்ள ஒரு ஒற்றுமை. இரண்டுமே மனித மீறல்களினால் நிகழ்ந்தவை என்று சொன்னால் அதில் மிகையில்லை.

சொகுசுக் கார் பந்தய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் மீதான விசாரணையின் போது, விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே பிடிபட்ட நபர்களை எச்சரித்து விட்டு அனுப்பும்படியாகவும், தேவைப்பட்டால் சாதாரண முறையில் வழக்குப் பதியும்படியாகவும் முக்கியப் பிரமுகர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் விடுமுறை நாட்களில்
இது போன்ற கார் மற்றும் இரு சக்கர வாகனப் பந்தயங்கள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கத்துடனும் தான் காவல்துறை இந்த ஒழுங்கு நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. அதற்கும் இடையூறு செய்தால் இம்மாதிரியான பந்தயங்களை எப்படிக் குறைக்க முடியும்? 

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் மையப்பகுதியான நுங்கம் பாக்கத்தில் ஆடம்பர போர்ச் கார் மோதி திருத்தணியைச் சேர்ந்த ஆறுமுகம் எனும் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவத்தை நாம் மறந்து விடக் கூடாது. மனைவி இறந்த நிலையில் தனது ஒரே பெண் குழந்தையின் எதிர்கால வளத்துக்காக பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்து இங்கே ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவர் ஆறுமுகம். சம்பவ தினத்தன்று அதிகாலை மூன்று மணிக்கு சாலையோரம் பிளாட்ஃபாரத்தில் தனது ஆட்டோவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆறுமுகம் தனக்கு நேர்ந்தது என்னவென்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பின்றி ஆடம்பர போர்ச் கார் விபத்தில் காலமானார்.

இரவு முழுதும் பார்ட்டி, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு முட்டக் குடித்த ஒரு பணக்கார இளைஞன் அதி வேகமாக தனது சொகுஷுக் காரை இயக்கியதால் தான் ஆறுமுகத்தின் உயிர் பறி போனது. இந்த வழக்கிலும் குற்றவாளி இப்போது சிறையில் இருக்க வாய்ப்பில்லை. பணம் படைத்தவர்களின் பணம் அவர்களுக்கு சகல தண்டனைகளில் இருந்தும் விடுப்பு அளித்து விடுகிறதே! அப்படியே ஆறுமுகத்தை கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டக்கல்லூரி இளைஞர் விகாஸ் விஜயானந்தும் இப்போது ஜாமீனில் வெளி வந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆறுமுகத்தின் மகளுக்கு குறிப்பிடத் தக்க அளவில் நஷ்ட ஈடு வழங்கப் பட்டதாக நாளிதழ்களில் வாசிக்க நேர்ந்தது. ஆனால் எத்தனை பணமும் ஒரு மனித உயிருக்கும் அதனால் உரிமையுடையவர்களுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்வுக்கும் ஈடாக முடியுமா?

முதலில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் இம்மாதிரியான கார் மற்றும் இரு சக்கர வாகனப் பந்தயங்கள் நடத்தப்படுவது தவறு எனும் பொறுப்புணர்வு சம்பந்தப் பட்டவர்களுக்கு வர வேண்டும். ஆனால் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் பொறுப்புணர்வுக்குப் பதிலாக அதிகார துஷ்பிரயோகம் தான் வெளிப்படுவதாகத் தெரிகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டே சட்டம் தன் கடமையச் செய்ய முடியுமென்றால், பிறகெப்படி குற்றங்கள் குறையும்?

இரண்டாவது சம்பவம் திருச்செந்தூர் படகு விபத்து,  7 பேர் மட்டுமே பயணிக்கத் தோதான ஒரு படகில் முன் யோசனையோ, பாதுகாப்பு உணர்வுகளோ எதுவுமே இன்றி 25 க்கும் அதிகமான நபர்களை ஏற்றிச் செல்ல வைத்தது எது? மனிதனுக்கு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு உணர்வு கூடவா மறந்து போகும்! கடலுக்குள்ளோ அல்லது ஆழமான ஏரிகளிலோ படகுப் பயணம் மேற்கொள்ளும்
போது லைஃப் ஜாக்கெட்டுகள் அணிய வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறைகளில் ஒன்று. நேற்று மணப்பாட்டு விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட லைஃப் ஜாக்கெட் அணியவில்லை என்று செய்திச் சேனல்களில் கூறப்படுகிறது. எத்தனை முறை தான் சுற்றுலாப் பயணிகள் இப்படி அசட்டையாக இருந்து தமது உயிரை மாய்த்துக் கொள்வார்களோ தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன் தேக்கடியில் படகு மூழ்கிய விபத்திலும் இதே காரணங்கள் தான் சொல்லப்பட்டது. குறைந்த நபர்களே பயணிக்கும் திறனுடைய படகுகளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏன் ஏற வேண்டும்? அதோடு குறைந்த பட்ச பாதுகாப்பு உணர்வு கூட இன்றி லைஃப் ஜாக்கெட்டுகளை புறக்கணித்து அப்படி என்ன சுற்றுலா வேண்டி இருக்கிறது? சில சுற்றுலாத் தளங்களில் படகுகளை இயக்குபவர்கள் வற்புறுத்தியும் கூட சில பயணிகள் லைஃப் ஜாக்கெட்டுகளைப் புறக்கணித்து வெறுமே பயணிப்பதை கண் கூடாகக் காண முடிகிறது. காரணம் பெரும்பாலான படகுகளில் இந்த லைஃப் ஜாக்கெட்டுகளை படகுகளுக்குச் சொந்தக்காரர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில்லை. சுற்றுலா செல்வோர் தங்களை அழகான அலங்கரித்துக் கொண்டு விதம் விதமாக செல்ஃபி எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்களே தவிர உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட்டுகளை முற்றிலும் புறக்கணித்து விடுகிறார்கள். இதில் குறிப்பிடத் தக்க மற்றொரு விசயம், ஒழுங்காகப் பராமரிக்கப்படாத லைஃப் ஜாக்கெட்டுகள் எந்த விதத்தில் உயிரை காக்கப் பயன்படும் என்பதையும் யோசித்தே ஆக வேண்டும்.

மேலே கண்ட இரண்டு சம்பவங்களிலும் இயற்கையையோ, விதியையோ குற்றம் சொல்வதைக் காட்டிலும் மனித அத்துமீறல்களைத் தான் முதல் குற்றவாளியாகக் கருத வேண்டும். மக்கள் தங்களது பொறுப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உணர்வு இரண்டின் மீதான அக்கறையை உணர்ந்து செயல்படுபவர்களாக இருந்தால் மட்டுமே இது போன்ற அகால விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

கடந்த வாரம் சென்னையில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவர்கள் மூவர் அகாலமாக உயிரிழந்த சம்பவத்தையும் இவற்றோடு சேர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து மின் ரயிலில் பயணிப்போர்க்கு எந்த இடத்தில் ரயில்வே சிக் நல் கம்பங்கள் வரும் என்பது நிச்சயமாகத் தெர்ந்தே இருக்கக் கூடும். அப்படித் தெரிந்திருந்தும் கூட அலட்சியத்தாலும், அஞ்ச வேண்டிய விசயங்களுக்கு அஞ்ச மறந்த தனி மனித அத்து மீறல்களினாலும் தான் அந்த விபத்து நேர்ந்தது எனலாம்.

ஒன்றல்ல இரண்டல்ல இது போன்ற உதாரண அசம்பாவிதங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பட்டியிலிட்டாலோ தண்டித்தாலோ மாத்திரம் இவை குறைந்து விடப் போவதில்லை. தனி மனித பொறுப்புணர்வு தான் இதைத் தடுத்து இல்லாமலாக்கக் கூடிய ஒரே மந்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com