இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்களையும், இந்திய அறிவியல் தினத்தையும் மறக்கலாமா?!

நம் மண்ணின் அறிவியலை நாம் வளர்த்திருந்தால், இந்த ஆங்கிலேயன் தனது ஆட்சியை நிறுவ நினைக்கும் சூழலில் அவர்களை எதிர்கொள்வதற்கு நமது அறிவியல் நமக்குப் பயன்பட்டிருக்கும்
இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்களையும், இந்திய அறிவியல் தினத்தையும் மறக்கலாமா?!

மகேந்திரலால் சர்க்கார் என்ற வங்காளத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் 1869-ஆம் ஆண்டு ’கல்கத்தா மருத்துவ சஞ்சிகை' என்ற இதழில் இந்தியர்களுக்கென்று ஓர் அறிவியல் அமைப்பு தேவையென்பதை வலியுறுத்தி ஒரு வலுவான கட்டுரை எழுதினார். அவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்படும் அறிவியல் அமைப்பு எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஒரு கனவு செயல்திட்டத்தை முன்வைத்து விளக்கமாகவும் விரிவாகவும் எழுதினார்.

அப்படிப் புதிதாகத் தொடங்கப்படக்கூடிய அறிவியல் அமைப்பு மக்கள் சார்ந்து செயல்பட வேண்டும் என்ற புதிய கருத்தை முன்வைத்தார். அடிக்கடி அறிவியல் மேதைகளை அழைத்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்ய வேண்டும் என்றும் அவ்வுரைகளைக் கேட்பதற்கு அறிவாளிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் வரவழைக்கப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தார். இவற்றையெல்லாம்விட வல்லுனர்கள் மட்டுமல்லாது யார் யாரெல்லாம் அறிவியல் தொடர்பாகப் பேச விரும்புகிறார்களோ அவர்கள் பாமரர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அவ்வமைப்பில் பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என எவரும் அப்போது சிந்தித்திராத புரட்சிகரமான புதிய கருத்தையும் முன்மொழிந்து எழுதினார்.

அறிவியல் அமைப்பின் அவசியம் குறித்து வேறு பல ஆங்கில மற்றும் வங்காள முன்னணி இதழ்களிலும் வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து எழுதி வந்தார். அவ்வாறு தொடர்ந்து எழுதுவதும் குரல் கொடுப்பதுமாக இருந்த டாக்டர் மகேந்திரலால், தானே செயலில் இறங்கினார்.

1870-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி வெளியான ’தி ஹிந்து பேட்ரியாட்' இதழில் தேசிய அறிவியல் வளர்ச்சிக் கழகம்(National institution for the cultivation of sciences)  என்ற அமைப்பை உருவாக்கப் போவதாகவும் அதற்கு ஆர்வம் உள்ளவர்கள் உதவவும் ஒத்துழைக்கவும் முன்வரலாம் என்றும் ஒரு விளம்பரம் வெளியிட்டார்.

வங்காளத்தின் புகழ்மிக்க படைப்பாளி பக்கிம் சந்திர சட்டர்ஜியிலிருந்து பலரும் இம்முயற்சியை வரவேற்றனர். பக்கிம் சந்திரர் தனது கட்டுரையில் நமது நாட்டை ஆங்கிலேயர்கள் தங்களது மிருக பலத்தால் படையெடுப்பு நடத்திக் கைப்பற்றினார்கள் என்று நம்மவர்களில் பலர் கருதுகிறோம். அந்நிய வியாபாரிகளான ஆங்கிலேயர்களுக்கு நம் மண்ணைக் கைப்பற்றுவதற்கு அறிவியலே அதிகம் கைகொடுத்திருக்கிறது.

நம் மண்ணின் அறிவியலை நாம் வளர்த்திருந்தால் இந்த ஆங்கிலேயன் தனது ஆட்சியை நிறுவ நினைக்கும் சூழலில் அவர்களை எதிர்கொள்வதற்கு நமது அறிவியல் நமக்குப் பயன்பட்டிருக்கும் என்று அழுத்தமாக எழுதினார். டாக்டர் மகேந்திரலாலின் அறிவியல் முயற்சிக்கு வங்காள பிரமுகர்கள் மனமுவந்து நன்கொடையளித்தனர். மகேந்திரலால் தனது பங்குக்கு முதலில் ரூ.1,000 வழங்கினார். மகாராஜாக்கள் சிலர் தலா ரூ.5,000 அளித்தனர்.

1876-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி ’தேசிய அறிவியல் வளர்ச்சிக் கழகம்' என்ற அமைப்பு அரசிடம் பெற்ற குத்தகை நிலத்தில் தொடங்கப்பட்டது. டாக்டர் மகேந்திரலால் அதன் முதல் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருபத்தெட்டாண்டு காலம் இந்த அறிவியல் அமைப்பின் செயலாளர் பொறுப்பில் இருந்து சிறப்பாக வழிநடத்தினார். 1904-ஆம் ஆண்டு மகேந்திரலால் மறைந்தார்.

1878 முதல் 1885 வரை ஏழாண்டுகளில் டாக்டர் மகேந்திரலால் 154 அறிவியல் சார்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். அறிவியல் மேதைகளான ஜகதீஸ் சந்திரபோஸ், பிரபுல்லா சந்திரராய், சுனிலால் பாஸ், அசுதோஷ் முகோபாத்தியாயா போன்றவர்களை அழைத்து ஏராளமான அறிவியல் சொற்பொழிவுகளை இவ்வமைப்பின் சார்பில் நிகழ்த்தச் செய்துள்ளார். ஜகதீஸ் சந்திரபோஸ் சொற்பொழிவுகளோடு ஏராளமான ஆய்வுச் செய்முறைகளையும் பார்வையாளர்களுக்கு நிகழ்த்திக்காட்டியுள்ளார்.

இவரிடம் சிகிச்சை பெற்ற செல்வந்தர்கள் சிலர் இந்த அறிவியல் அமைப்பிற்கு பெருந்தொகையை நன்கொடையாக வழங்கினர். அந்த முறையில் விஜயநகர மகாராஜா ரூ.40,000 நன்கொடையாக அளித்தார். அப்பெருந்தொகையைக் கொண்டு விஜயநகர ஆய்வுக்கூடம் என்ற பெயரில் தனி ஆய்வுக்கூடத்தையே நிறுவினார் மகேந்திரலால்.

இந்த அறிவியல் அமைப்பு வங்காளத்திலும் நாட்டின் வேறு சில பகுதிகளிலும் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றிகண்டபோதிலும் தான் எதிர்பார்த்த வெற்றியை அந்த அமைப்பு அடையவில்லை என்று மகேந்திரலால் கருதினார்.

ஆங்கிலேய மருத்துவமான அலோபதி மருத்துவத்தில் பட்ட, மேற்பட்ட படிப்புகளைப் படித்து கல்கத்தாவில் வெற்றிகரமான மருத்துவராக வளர்ந்த நிலையில் ஹோமியோபதி மருத்துவமுறைக்கு மகேந்திரலால் மாறினார். அங்குள்ள ஹோமியோபதி மருத்துவர்களில் தலைசிறந்த மருத்துவராகவும் உயர்ந்தார். சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஆஸ்தான மருத்துவராக விளங்கிய வரலாற்றுச் சிறப்பும் டாக்டர் மகேந்திரலாலுக்கு உண்டு.

ஆங்கிலேய கவர்னரால் உயர் விருதுகள் மகேந்திரலாலுக்கு அளிக்கப்பட்டதோடு 1887-ஆம் ஆண்டு வங்காள சட்டப்பேரவை உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார். கல்கத்தா நகரின் ஷெரீப், கெளரவ மேஜிஸ்ட்ரேட் போன்ற உயர்பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். கல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பதவியும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தருக்கு இணையான உயர் மதிப்புள்ள சிறப்புப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன. இவ்வாறு மருத்துவம், கல்வி, அறிவியல் ஆகிய மூன்று துறைகளிலும் இவர் ஆற்றிய தொண்டு மகத்தானதென்றாலும், அறிவியல் ஆய்விற்காகவும் இந்தியாவில் உலகப் புகழ்மிக்க அறிவியல் மேதைகள் உருவாக வேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்நாளையே அர்பணித்தவர் டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.

மகேந்திரலாலின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் அமிர்தலால் சர்க்கார் அந்த அமைப்பை வழிநடத்தினார். அந்தக் காலகட்டத்தில்தான் உயர் அரசு அலுவலராகப் பணியாற்றிய சி.வி. ராமன் கல்கத்தாவுக்கு மாறுதலாகியிருந்தார்.

ஒரு நாள் மாலை நேரத்தில் கல்கத்தாவில் டிராம் வண்டியில் சி.வி. ராமன் பயணித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக ’தேசிய அறிவியல் வளர்ச்சிக் கழகம்' என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தார். டிராம் வண்டியிலிருந்து இறங்கி அந்தக் கட்டடத்திற்குள் சென்று அங்கிருந்த அமிர்தலால் சர்க்காரைச் சந்தித்தார்.
சி.வி. ராமன் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே அறிவியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். திருச்சியில் பள்ளிப் படிப்பை முடித்து சென்னைக் கல்லூரியில் படிக்கிறபோது அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வதிலேயே மிகுந்த ஆர்வத்தேடு திகழ்ந்தவர். மேலும் ஆய்வுகளில் முழு கவனம் செலுத்த எண்ணியிருந்த ராமன் பெற்றோரின் விருப்பம் காரணமாக அரசு வேலையில் சேர்ந்திருந்தார்.

சி.வி. ராமன் கல்கத்தாவிலுள்ள அறிவியல் அமைப்பு குறித்து அறிந்து தனது வேலை நேரம் போக மீதி நேரமனைத்தையும் அங்கேயே ஆய்வுப் பணியில் கழித்தார். கல்கத்தாவிலிருந்து சி.வி. ராமனுக்கு நாகபுரிக்குப் பணி மாறுதல் கிடைத்தது. இந்த ஆய்வுக் கழகத்திலேயே ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள விரும்பிய ராமன் அரசுப் பணியை உதறிவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து அவரது ஆய்வை அதே ஆய்வுக் கழகத்தில் தொடர்ந்தார்.

மகேந்திரலாலின் ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்ட இடைவிடாத ஆராய்ச்சியின் விளைவாகவே ராமன் விளைவு என்ற பேருண்மையைக் கண்டுபிடித்தார். இதன் விளைவாகவே இவருக்கு இந்திய அரசால் சர் பட்டம் அளிக்கப்பட்டு சர் சி.வி. ராமன் என்ற உலகப் புகழ்மிக்க விஞ்ஞானியாக அறியபட்டார்.

1930-இல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1928-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாள். இதற்காகத்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது தான் இந்தியா பெற்ற அறிவியலுக்கான முதல் நோபல் பரிசு. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுவதன் மூலம் சர் சி.வி. ராமனுக்கும் அறிவியலுக்கும் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ராயல் சொசைட்டி என்ற உலகப்புகழ் மிக்க அறிவியல் கழகத்தைப்போல இந்த மண்ணில் ஓர் அறிவியல் கழகத்தை உருவாக்க எண்ணி மாபெரும் வெற்றிகண்ட டாக்டர் மகேந்திரலால் சர்க்காரும் அந்த அறிவியல் கழகத்தால் வாய்ப்பளிக்கப்பட்டு இந்தியாவில் இருந்தே இந்தியனாக இருந்தே ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றி பெறுவேன் என்று உறுதியுடன் கூறிவந்ததோடு அதில் மகத்தான வெற்றியும் பெற்ற சர் சி.வி. ராமனும் என்றென்றும் நினைத்துப் போற்றத்தக்கவர்கள்.

அறவியலும் அறிவியலும் இரண்டு கண்கள். அறம் சார்ந்த அறிவியலே இன்றைய காலத்திற்குத் தேவை.

கட்டுரையாளர்:
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com