சீரியல் மட்டுமில்லை சீரியஸாகவும் ஒரு கை பார்ப்போம்: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இல்லத்தரசிகள்!

இல்லத்தரசிகள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒழிந்த நேரங்களில் எல்லா சேனல்களிலும் ஒரு சீரியல் விடாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எனும் வெகு ஜன நோக்கை ஜல்லிக்கட்டு போராட்டம்  அடித்துத் தூள் தூளாக்கி இரு
சீரியல் மட்டுமில்லை சீரியஸாகவும் ஒரு கை பார்ப்போம்: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இல்லத்தரசிகள்!

தமிழகம் மட்டுமல்ல, மொத்த இந்தியாவும் பார்த்து அதிசயிக்கும் வகையிலான ஒரு போராட்டமாக மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் பரிணமித்திருக்கிறது. மாணவர்களின் இந்த அறவழிப்போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் நேற்று இரவில் காவல்துறையினர் அடக்குமுறையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இன்று காலையில் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ‘மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அடக்குமுறைக்கு அங்கு எந்தத் தேவையும் இல்லை. காவல்துறையினர் மாணவர்கள் போராட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தான் தங்களது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். என்று தெரிவித்ததோடு கட்டுக்கோப்பான போராட்டம் நடத்துகிறார்கள் மாணவர்களுக்குப் பாராட்டுதலும் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை மாநிலங்களிலும் இது போன்ற போராட்டங்கள் வெடித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சூழ்நிலைகள் பலமுறை நிகழ்ந்துள்ளது. அப்போதெல்லாம் அங்கு வன்முறையும், அடக்குமுறையும் கூட சரி பங்கு வகித்தது. அவற்றோடு ஒப்பு நோக்கும் போது  தமிழகத்தில் இன்று ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகத் திரண்ட வரலாறு காணாத மாபெரும் கட்டுக்கோப்பான பெருங்கூட்டத்தை போன்றதொரு கண்ணியமான போராட்ட களத்தை மொத்த இந்தியாவிலும் இதுவரை எவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பிற அனைத்திலுமே ஏதாவது ஒரு வகையில் அரசியல்வாதிகள், மற்றும், சினிமாக்காரர்களின் தலையீடும், அதனால் போராட்ட இடங்கள் ரத்தக் களறியான சம்பவங்களும் இடம் பெற்றிருக்கும், எல்லாவற்றையும் விட பெண்களின் பங்களிப்பு என்பது அங்கெலாம் மிகக் குறைவாகவே இருக்கும். குழந்தைகளைப் போராட்டக் களங்களில் காண்பது என்பது அதை விட அரிதானது. ஆனால் இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து குடும்பங்களுமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாணவப் போராட்டத்தில் தங்களது பங்களிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதன் வெளிப்பாடு தான் இப்போது போராட்டக் களங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பெருந்திரளான பெண்கள் கூட்டம்.

பெண்கள் பெருவாரியாக போராட்டத்தில் பங்கேற்பதால் அவர்களின் பாதுகாப்பை, அத்யாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தரும் பொறுப்பும் இப்போது மாணவர்களுக்கு இருப்பதால் அவர்களது பொறுப்புணர்வு மேலும் அதிகரித்திருக்கிறது. ஆகவே வழக்கமான போராட்டக் களங்களைப் போல இல்லாமல் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் இடங்களில் மாணவர்கள், பெண்களின் பாதுகாப்பை, போராட்டக் களத்தில் சுற்றுப்புற சுத்தத்தை, எல்லாவற்றையும் கனிவுடன் கவனித்துச் செயல்படுவதோடு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்காத அளவில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி தங்களது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

மாணவிகள் மட்டுமல்ல, அவர்களின் அம்மாக்களும், அக்காக்களும், அண்ணிகளும், அவர் தம் குழந்தைகளும் கூட இந்தப் போராட்டத்தில் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டிருக்கிறார்கள், இன்று போராட்டத்தின் நான்காம் நாள். ஆனால் தொடங்கிய நாள் தொட்டு ஜல்லிக்கட்டு போராட்டக் களங்களில் போராட்டக் காரர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறதே தவிர குறைவதற்கு வழியே இல்லை. இத்தனை நாட்கள் இல்லத்தரசிகள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒழிந்த நேரங்களில் எல்லா சேனல்களிலும் ஒரு சீரியல் விடாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எனும் வெகு ஜன நோக்கை ஜல்லிக்கட்டு போராட்டம்  அடித்துத் தூள் தூளாக்கி இருக்கிறது. இல்லத்தரசிகளுக்கும் நாட்டு நடப்பை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் போராட்டக் களத்தில் ஒரு பார்ப்பவர்கள் என்பது தெளிவாகி இருக்கிறது.

நண்பர் ஒருவரின் முகநூல் பதிவில் தெரிவித்திருந்தபடி கோவையில் போராட்ட களத்திற்கு நேரடியாகச் சென்று தங்களது பங்களிப்பைச் செய்ய முடியாத பெண்களும், குடும்பத் தலைவிகளும் கூட்டு வீடுகளில் மொத்தமாகச் சமைத்து உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து களத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம். சென்னை, கோவை மட்டுமல்ல இன்று தமிழகம் முழுவதுமே நடந்து கொண்டிருப்பது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இப்படியான அணுகுமுறைகள் தான். இதையெல்லாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்வோர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இப்படி ஒரு போராட்டத்தின் வாயிலாக தமிழகம் இனி இந்தியா மட்டுமல்ல உலக அளவில் எங்கு இம்மாதிரியான உரிமைப் போராட்டங்கள் நிகழ்ந்தாலும் அதற்கொரு முன்னுதாரணமாக விளங்கும் எனும் நம்பிக்கை அனைத்து தமிழர்கள் மனதிலும் வேரூன்றி விட்டது.

இன்று தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இல்லத்தரசியுமே, இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வாயிலாக தங்களை நினைத்தும், தங்களது மகன், மகள்களைக் குறித்தும் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய இனிதான தருணம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com