மக்களின் ‘ஹோட்டல் சாப்பாடு’ ஆர்வத்தைக் குறைக்க வருகிறது புதிய ஜிஎஸ்டி வரி உயர்வு!

மத்திய அரசு அமல் செய்த ஜிஎஸ்டி வரி உயர்வால் கூடிய விரைவில் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட்டுகளில் உணவுகள் அனைத்தும் விலையேற்றம் காணவிருக்கின்றன.
மக்களின் ‘ஹோட்டல் சாப்பாடு’ ஆர்வத்தைக் குறைக்க வருகிறது புதிய ஜிஎஸ்டி வரி உயர்வு!

உங்களுக்கு வாரம் தவறாமல் அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் உண்டா? அப்படியென்றால் ஹோட்டல் உரிமையாளர்களுடன் சேர்ந்து நீங்களும் கவலைப் பட்டுக் கொள்ள வேண்டியது தான். ஏனெனில் மத்திய அரசு அமல் செய்த ஜிஎஸ்டி வரி உயர்வால் கூடிய விரைவில் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட்டுகளில் உணவுகள் அனைத்தும் விலையேற்றம் காணவிருக்கின்றன. இதனால் தங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விடுமோ என ஹோட்டல் உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் சிறு ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்கள் இதுவரை 1% மட்டுமே வரி செலுத்தி வந்தன. இந்த சிறு ஹோட்டல்களால் கூடுதல் வரி செலுத்த முடியாத நிலையில் இவை எந்த கட்டமைப்பிலும் கூட்டாக இல்லாத காரணத்தால் தனித்தனியாக இவை ஒவ்வொன்றும் 5 % உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை செலுத்தும் நிலையிலும் இல்லை. எனவே இந்தச் சிறு ஹோட்டல் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து தங்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வில் தளர்வை ஏற்படுத்த முடியுமா? என முயன்று வருகிறார்கள்.

வருடத்திற்கு 50 லட்சத்துக்குட்பட்டு நிகர லாபம் அடையக் கூடிய ஹோட்டல்கள் அனைத்தும் மத்திய அரசின் இந்த வரி உயர்வு வரம்புக்குள் வருகின்றன. மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறதாம்.

மதுரை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைப் பொறுத்தவரை நடுத்தர வசதிகளுடன் கூடிய சிறு ஹோட்டல்களை நடத்துவதற்கான செலவுகள் அதிகம். ஹோட்டல் நடத்த தேவையான இடத்துக்கான வாடகை, குடிநீர் வசதிக் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள், சமையல் மாஸ்டர்கள் மற்றும் கேட்டரிங் ஊழியர்களுக்கான சம்பளம், சமையல் மூலப்பொருட்களுக்கான விலையேற்றம் இப்படி சிறு ஹோட்டல் உரிமையாளர்களைக் கவலையில் ஆழ்த்த ஏற்கனவே பல விசயங்கள் இருக்கின்றன. அவற்றோடு இப்போது உயர்த்தப் பட்ட ஜிஎஸ்டி வரியும் சேர்ந்து கொண்டு ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் குரல் வளையையும் நெரிக்க இருப்பது அந்த இரு தரப்பினரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்டார் அந்தஸ்து கொண்ட ஹோட்டல்களுக்கு மட்டும் இந்த வரி உயர்வை அமல் படுத்தி விட்டு சிறு குறு ஹோட்டல்களை விடிவித்தால் நல்லது என குறிப்பிட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். 

இந்த வரி உயர்வால் வாடிக்கையாளர்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது என அறிந்து கொள்ள முற்படுகையில், நாங்கள் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு முன்பாகவே வாட் வரி, சேவை வரி, என்று நாங்கள் உண்ணும் உணவு வகைகளைத்  தாண்டியும் அதிமாகவே ஒவ்வொரு முறை ஹோட்டல் செல்லும் போதும் செலவளித்துக் கொண்டிருக்கிறோம். இனி இந்த்அப் புதிய ஜிஎஸ்டி வரி உயர்வு அமல்படுத்தப் படுமானால் ஹோட்டலுக்குச் சென்று உணவருந்தும் எங்களது ஆர்வமும், ஆசையும் நாளடைவில் படிப்படையாகக் குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை எனப் பலர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com