26 வார கால மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதா, பெண்களின் வேலைவாய்ப்பை பாதிக்குமா?

“பெண்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் இந்த சட்ட மசோதாவால் பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியே! ஆனால் முதலாளிகளுக்கு இது மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதே நிஜம்!”
26 வார கால மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதா, பெண்களின் வேலைவாய்ப்பை பாதிக்குமா?

வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என வியாழன் அன்று மக்களவையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. முந்தைய வருடங்களில் மகப்பேறுக்காக அளிக்கப்பட்ட 12 வார விடுமுறையின் இருமடங்கைக் காட்டிலும் இது அதிகம். இதனால் இந்த மாற்றம் நிச்சயமாக சிறு மற்றும் குறு நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய பெண்களின் வேலை வாய்ப்பில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஏனெனில் பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால விடுப்பு என்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது. இதனால் இத்தகைய நிறுவனங்களில் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும் போது அவர்கள் பெண்களை விட ஆண்களுக்கே அதிக முன்னுரிமை அளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘அஸ்செண்ட்’ நிறுவனத்தின் மனிதவள தலைமை நிர்வாகியான எஸ். சுப்ரமண்யம், இது குறித்துப் பேசுகையில், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களால் முழுமையான சம்பளத்துடன் கூடிய இத்தகைய அதிகப்படியான விடுப்பை தனது பெண் ஊழியர்களுக்கு வழங்க முடியாது. இதனால் நாளடைவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதம் படிப்படியாக குறைய நிறைய வாய்ப்புகள் உண்டு. என்கிறார்.

சுமார் 1500 ஊழியர்கள் பணிபுரியும் சுப்ரமண்யத்தின் நிறுவனத்தில் தற்போது 37 % பேர் பெண்களே! அரசின் திருத்தப்பட்ட மகப்பேறு விடுப்புச் சட்டத்தின் படி பணிபுரியும் பெண்கள் பிரசவ விடுப்பில் செல்லும் போது, பிறக்கும் குழந்தையின் மனம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசு மேற்கூறிய 6 மாத காலத்துக்கும் அதிகமான விடுப்பை அறிவித்துள்ளது. இந்தக் கால தாமதம் பிற்காலத்தில் இவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களின் சதவிகிதத்தில் மேலும் மாற்றங்களைக் கொண்டு வரலாம். அதாவது பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் திட்டமிட்டுக் குறைக்கப்படலாம்.


2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'அசோசேம் சிந்தனை இலாப ஆராய்ச்சி' ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் 10 % தொடர் வீழ்ச்சியே கணக்கிடப்பட்டுள்ளது. எது எப்படியாயினும்.. பெண் மற்றும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை அரசின் இந்த மகப்பேறு சட்டத் திருத்தம் மிகவும் வரவேற்கக் கூடிய மாற்றமாகவே கருதப் படுகிறது. இதனால் பெண்களின் வேலைவாய்ப்புகள் குறைந்தாலுமே அதை பெண்களால் வெகு விரைவில் மீட்டெடுக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

மாநிலப் பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர், வி, வசந்தி தேவி, இது குறித்துப் பேசும் போது, திருத்தப்பட்ட மகப்பேறு விடுப்புச் சட்டத்தால், முதலாளிகள் நிச்சயமாகத் தங்களது நிறுவன வேலை வாய்ப்புகளில் பெண் ஊழியர்களைப் புறக்கணித்து விட்டு ஆண் ஊழியர்களுக்கு முன்னுரிமை தர அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் இந்தச் சட்டம் பெண்களின் வேலை வாய்ப்பில் பின்னடைவைத் தந்தாலும், அனைத்து நிறுவனங்களும் அதே முறையப் பின்பற்றும் என்று உறுதியாகக் கூற முடியாது. முழுமையாக லாப நோக்கை மட்டும் கணக்கில் கொள்ளாமல் தொழிலாளர் நலன் கருதி நியாயமாக நடந்து கொள்ளும் வியாபார, தொழில் நிறுவனங்களும் நமது நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அத்தகைய நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு இந்தச் சட்டம் ஒரு வரப்பிரசாதம் தானே! என்றார்.

2016 ல் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட மகப்பேறு விடுப்புச் சட்டத்தின் படி 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை மட்டுமல்லாது, 50 க்கும் அதிகமான பெண் ஊழியர்கள் பணி புரியும் நிறுவனங்கள், தங்களது பெண் ஊழியர்களின் குழந்தைகள் நலனைக் கணக்கில் கொண்டு,  நிறுவன வளாகத்தினுள் குறிப்பிட்ட தொலைவுக்குள் கிரீச் வசதி செய்து தர வேண்டும் என்றும், நாளொன்றுக்கு 4 முறைகள் அங்கே சென்று குழந்தைகளைப் பார்த்து வர பெண் ஊழியர்கள் அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் அந்த சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஜி. கெளரி தனது முதல்பிரசவத்திற்கு முன்பு வரை 200 ஊழியர்கள் கொண்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பிரசவத்தின் போது 3 மாத கால மகப்பேறு விடுப்பின் பின் மேலும் ஒரு மாத கால விடுமுறை நீட்டிப்பு கேட்டதற்கு, திருத்தப்பட்ட மகப்பேறு சட்ட விதிகளின் படி அவருக்கு அதற்குரிய உரிமைகள் இருந்த போதிலும், தான் பணிபுரிந்த நிறுவனத் தலைமையால் கட்டாயப்படுத்தப் பட்டு,  வேலையில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறினார்.

 கெளரியைப் பொறுத்தவரை, வேலைக்கான தேடலை அவர்  மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். 6 மாத கால விடுப்புக்குப் பின்  தனக்கான புது வேலையைத் தேடிக் கொள்ளும் திறன் தனக்கு இருப்பதாக அவர் நம்புகிறார். அதனால் இந்த சட்ட திருத்தத்தை கெளரி போன்ற பெண்கள், தங்களுக்கான வரவேற்கத் தக்க நிவாரணமாகவே கருதுகிறார்கள்.

“பெண்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் இந்த சட்ட மசோதாவால் பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியே! ஆனால் முதலாளிகளுக்கு இது மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதே நிஜம்!”

ஏனெனில் மகப்பேறு விடுப்பு கால சம்பளம் மொத்தத்தையும் அவர்கள் விடுப்பில் செல்லும் பெண் ஊழியர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என அந்த மசோதா உத்தரவிட்டுள்ளதால் அவர்களது நிலை திருப்தியாக இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com