நடிகை விஜய நிர்மலாவுக்கு மலேசியாவில் இன்று டாக்டர் பட்டம்!

தமிழ் ரசிகர்களில் விஜயநிர்மலாவை, விஜயலலிதா என நினைத்து ஏமாந்தவர்கள் கூட பலர் உண்டு.
நடிகை விஜய நிர்மலாவுக்கு மலேசியாவில் இன்று டாக்டர் பட்டம்!

நடிகை விஜய நிர்மலா 70 களில் தமிழிலும் கணிசமாக நடித்திருந்தாலும் அவரது திரைப்பங்களிப்புகள் தெலுங்கில் தான் அதிகம். தெலுங்கில் ‘பாண்டுரங்க மகாத்மியம்’ பக்தித்  திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயநிர்மலா பிறகு தமிழுக்கு வந்தார். தமிழ் ரசிகர்களில் விஜயநிர்மலாவை, விஜயலலிதா என நினைத்து ஏமாந்தவர்கள் கூட பலர் உண்டு. எழுத்தாளர் சுகாவின் வலைத்தளத்தில் அவரிட்ட பதிவுகளில் நடிகை விஜயநிர்மலா குறித்த பதிவு சுவாரஸ்யமானது. அவரது பதிவுகளில் சில ‘தாயார் சந்நிதி’ என்ற பெயரில் புத்தகமாகி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் விஜயநிர்மலா கட்டுரையை வாசித்துப் பாருங்கள். அந்தளவுக்கு 70 களில் பெரும்பான்மை ரசிகர்களைப் பெற்றிருந்த நடிகைகளில் விஜய நிர்மலாவும் ஒருவர்.  தமிழ் ரசிகர்களுக்கு சுருங்கச் சொல்வதென்றால் ‘பணமா பாசமா’ திரைப்படம் வாயிலாக பட்டி தொட்டியெங்கும் கொடி கட்டிப் பறந்த ‘எலந்தப் பயம்...எலந்தப் பயம்’  பாடலுக்குத் திரையில் தோன்றி ஆடிய நடிகை தான் விஜய நிர்மலா என்றால் சட்டென்று புரியும்.

அந்த விஜய நிர்மலா தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாது மீண்டும் தெலுங்கு தேசம் போய் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமின்றி திரைப்படங்களை இயக்கவும் தொடங்கினார். தானே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். அதோடு தெலுங்கில் அப்போதைய பிரபல நடிகரான கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியாகவும் ஆனார். கிருஷ்ணா வேறு யாருமல்ல இன்று தெலுங்கு தேசமே ’பிரின்ஸ்’ என்று கொண்டாடும்  ஸ்ரீமந்துடு மகேஷ் பாபுவின் அப்பா. அவரும், விஜய நிர்மலாவும் இணைந்து தான் திருமணத்துக்குப் பின் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்கள் என்கிறது தெலுங்கு தேசச் செய்திகள். தங்களது தயாரிப்பு பேனரில் விஜயநிர்மலா இதுவரை 44 திரைப்படங்களை இயக்கியதால் சிறந்த பெண் இயக்குனர் என்ற முறையில் அதிக படங்களை இயக்கிய கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

அது மட்டுமல்ல; லண்டனைச் சேர்ந்த ராயல் அகாதெமி ஆஃப் குளோபல் பீஸ் அமைப்பு விஜய நிர்மலாவுக்கு அவரது திரைச் சாதனைகளைப் பாராட்டி இன்று மலேசியாவில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கிறது. தமிழ் பட உலகில் எலந்தப் பயம் போன்ற அந்தக் கால குத்துப் பாட்டுக்கு நடனமாடிய விஜய நிர்மலா... சினிமாத்துறையில் தனக்கிருந்த பேரார்வத்தின் காரணமாக தெலுங்குப் பட உலகம் சென்று அங்கு சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதிகமான திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குனர் எனும் வகையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தி இன்று டாக்டர் பட்டமும் பெறுகிறார் எனில் அது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய விசயமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com