பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் சிறை தண்டனை!

Say No To Plastic என்ற பிரச்சாரம் உலகெங்கும் நடந்துவரும் நிலையில் பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் சிறை தண்டனை!

Say No To Plastic என்ற பிரச்சாரம் உலகெங்கும் நடந்துவரும் நிலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு சில நாடுகள் தடை விதிக்கத் தொடங்கியுள்ளது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிப்பதால் உலகையே அச்சுறுத்தும் பிரச்னையாக இது உள்ளது. நெகிழி எனப்படும் இந்த பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழல் மாசு, கடல் வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மண் வளம், விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. கடலில் கலப்பதால், கடல் வாழ் உயிரனங்கள் பாதிக்கப்படுகின்றன. திமிங்கலம், மீன், ஆமை, பறவை போன்றவை பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 50 வருடங்களில் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் எச்சரித்துள்ளது. இது போன்ற பிரச்னைகளால் கடலுணவு இல்லாமல் போனால் மனதனின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும். உலக நாடுகள் இது குறித்த விழிப்புணர்வு பெறவில்லை என்றால் வரும் காலங்களில் மனித இனம் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.

சமீபத்தில் கென்யாவில் பிளாஸ்டி பை விற்பனைக்குத் தடை விதிப்புச் சட்டம் அமலுக்கு வந்ததுள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு கடுமையான சட்டத்தைக் கென்யா அமல்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் மக்க பல ஆண்டுகளாகும். மழை நீர் மண்ணில் புக முடியாமல் போவதோடு, நிலத்தடி நீர் ஊற்றுக் கண்களை மறைத்து, தாவரங்கள் வளராமல் தடுப்பதற்கும், மழை இன்மைக்கும் காரணமாகிறது. எனவே அவற்றின் பயன்பாட்டை எதிர்த்து பத்து ஆண்டு போராட்டத்துக்குப் பின் கென்யாவில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இதுபோன்ற சட்டங்கள் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டால் பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான சூழலை மீண்டும் உருவாக்க முடியும். இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கு தடை உத்தரவு மட்டும் போட்டுவிட்டு அதை அமல்படுத்தாமல் உள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகி பூமிப் பந்தை அசுத்தமாக்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, அவை கடலுக்குள் செல்லும் போது மீன் உட்பட கடல்வாழ் உயினங்கள் அதை விழுங்கி இறக்கிறது. கடல் நீரும் மாசடைகிறது. சுற்றுச் சூழல் பாதிப்பு, நோய்கள் அதிகரிப்பு என பிளாஸ்டிக்கால் பல பிரச்னைகள் இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் இன்னும் போதிய அளவுக்கு ஏற்படவில்லை என்பது உண்மை.

சில உணவகங்களில் மெல்லிய பாலிதீன் தாள்களில் உணவு வழங்கப்படுகிறது. இதில் சாப்பிடுவோர் ஒவ்வாமை, வயிற்றுப் போக்கால் அவதிப்படுகின்றனர். சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் எடுத்துச் செல்லும்போது, சூடு மற்றும் எண்ணெய் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான வேதிப் பொருள்கள் உணவு பொருள்களுடன் கலந்து அவை புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் தைராய்டு நோய் ஏற்படவும் காரணமாகிறது என்று கட்டுரைகளில் படித்திருந்தும் படித்ததை மறந்துவிட்டு பிளாஸ்டிக்கைத் தொடர்ந்து பயன்படுத்துவோர்தான் நம்மில் அதிகம்.

பள்ளிகளில் பிளாஸ்டி மற்றும் பாலிதீன் ஏற்படுத்தும் தீமைகளைக் கற்றுத் தர வேண்டும். அரசும் மக்களிடையே இன்னும் தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும், பிளாஸ்டிக் பொருள்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான கடுமையான சட்டங்களை கென்யாவைப் போல் இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com