இனி 'அலைபாயுதே’ படத்தைப் போல பதிவுத் திருமணம் செய்யத் தடா! பெற்றோரின் அனுமதி வேண்டும்!

இந்திய திருமணச் சட்டத்தின் படி திருமணத்தன்று ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
இனி 'அலைபாயுதே’ படத்தைப் போல பதிவுத் திருமணம் செய்யத் தடா! பெற்றோரின் அனுமதி வேண்டும்!

இந்திய திருமணச் சட்டத்தின் படி திருமணத்தன்று ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும். உரிய வயது வருவதற்கு முன்னால் நடத்தி வைக்கப்பட்டும் திருமணங்களைத் தடுக்கவும் ஏற்கெனவே நடந்த திருமணங்களை மறைப்பதைத் தடுக்கவும் திருமணப் பதிவை அரசாங்கம் கட்டாயமாக்கியது. தமிழ்நாடு திருமணச் சட்டம் 2009 கூறுவதன்படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவாளர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும், பதிவு செய்ய 60 நாள்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 150 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோர் மீது வழக்குப் போடவும் சட்டத்தால் முடியும்.

திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், கோயில், சர்ச், பள்ளிவாசல் ஆகிய நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாகக் கொடுக்கும் ஆவணம், நோட்டரி அபிடிவிட் போன்ற ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும். இது பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் எனில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் காதல் திருமணங்களைப் பதிவு செய்வது இனி சுலபமில்லை. இந்து திருமண சட்டத்தின்படி, இந்துக்களின் திருமணம் பதிவு செய்யப்படுகிறது. திருமண வயது நிறம்பிய ஆணோ, பெண்ணோ தங்கள் மனம் கவர்ந்தவர்களை திருமண செய்து கொள்ளலாம், இதற்கு பெற்றோர் மற்றும் உறவினரின் சம்மதமும் தேவை என குறிப்பிட்டிருக்கவில்லை. ஆண் பெண் இருவரும் அவரவர்க்குரிய ஆவணங்களுடன் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டின் இறுதியில் திருமணத்தைப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை சுற்றறிக்கை மூலம் அனுப்பியது திருமணப் பதிவுத் துறை. 

அந்தப் பட்டியலில் இடம்பெற்றவை :

  • திருமணம் செய்யவிருக்கும் ஆண் பெண் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வயதுக்கான சான்றிதழாகப் பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மணமக்கள் தலா நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கென உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பத்தில், குறிப்பிட்டுள்ள பெற்றோர் மற்றும் சாட்சியாளர்கள் ஆகியோரது அசல் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும். பெற்றோரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் திருமணப் பதிவு நடக்கும்.

விண்ணப்பத்தில், ஒரு வேளை பெற்றோர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், புகைப்படத்துடன் அவர்களது அசல் இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதில் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என்பதை நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை என்றாலும், பெற்றோரின் அசல் அடையாள அட்டை இல்லாமலோ அல்லது பெற்றோர் உயிரிழந்திருந்தால் அவர்களது அசல் இறப்புச் சான்றிதழ் இல்லாமலோ எந்தவொரு திருமணத்தையும் இனி பதிவு செய்ய முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com