சைனா கெய்ரெற்சியின் குழந்தைப் போராளி

‘அவர்கள் என்னிடமிருந்து அம்மாவைப் பறித்துக் கொண்டு எனது கைகளில் துப்பாக்கியைத் தந்தார்கள்...’
சைனா கெய்ரெற்சியின் குழந்தைப் போராளி

‘அவர்கள் என்னிடமிருந்து அம்மாவைப் பறித்துக் கொண்டு எனது கைகளில் துப்பாக்கியைத் தந்தார்கள்...’ என்ற உலுக்கும் வரிகளுடன் துவங்கும் சைனா கெய்ரெற்சியின் குழந்தைப் போராளி எனும் தன் வரலாற்று நூலை வாசித்து முடித்தேன். இடி அமீனுக்கு பிறகான உகாண்டாவில் நிலவிய அரசுக்கும் - புரட்சியாளர்களுக்கும் இடையிலான போராட்டத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு, பல்வேறு சித்திரவதைகளால் துண்டாடப்பட்ட தனது வலி மிகுந்த வாழ்க்கையை சைனா விவரித்திருக்கிறார்.

மோசமான தந்தை ஒருவனுக்கு பிறந்தவிட்ட பாவத்தால், தனது ஒன்பதாவது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறும் சைனா, எதிர்பாராவிதமாக போராளி குழு ஒன்றுடன் இணைந்துவிடுகிறாள். அரசுக்கு எதிரான அப்போராளி குழுவின் பழிவாங்கல் நடவடிக்கைகள் அனைத்திலும் சைனாவும், அவளைப் போன்ற சிறுமிகளுமே முன்னிறுத்தப்படுகிறார்கள். இதனால் மரணம் தொடர்ந்து சைனாவை மிரட்டியப்படியே இருக்கிறது.

அதேபோல தனக்கு மேலுள்ள பல்வேறு அதிகாரிகளாலும் சைனா ஈவிரக்கமின்றி வேட்டையாடப் படுகிறாள். மிகச்சிறிய வயதிலேயே அவளது உடலும் மனமும் உருத்தெரியாமல் சிதைந்துவிடுகிறது. பலவருட போராட்டத்திற்கு பிறகு உகாண்டாவின் கலவரச் சூழலிலிருந்து தப்பும் சைனா, நிம்மதியைத் தேடி கென்யா, தென் ஆப்பாரிக்கா என்று இடமாறிக்கொண்டே இருக்கிறாள். எனினும் அவளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. 

ஒரு வழியாக, டென்மார்க்கிற்கு அகதியாக செல்லும் சைனா, தற்போது தன்போன்று வழி தவறிய குழந்தைப் போராளிகளுக்கான மறுவாழ்வு மையமொன்றை அங்கேயே நடத்தி வருகிறாள். களவாடப்பட்ட குழந்தை பருவம், குழந்தைப் போராளி, ஓடு சைனா ஓடு எனும் மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ள இந்நூலில் சைனாவின் அழுகைகளும், ஓலங்களும் தொடர்ந்து நம்மை துரத்தியபடியே இருக்கின்றது. கைவிடப்பட்ட ஒரு சிறுமியின் வாழ்தலுக்கான கெஞ்சல் நிச்சயம் நம்மை கலங்கடித்துவிடும். அவசியம் வாசிக்கக்கூடாத நூல் என்றுதான் இதனை சொல்லத் தோன்றுகிறது. அந்தளவுக்கு வன்முறையும், மனிதநேயமற்றதன்மையும் வரிக்கு வரிக்கு நீண்டு மனதில் குருதி வழியச் செய்கிறது.

குழந்தைப் போராளி
சைனா கெய்ரெற்சி
தமிழில்:தேவா
வெளியீடு: கருப்புப்பிரதிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com