வீட்டிலேயே செய்யலாம் ஈஸி நேச்சுரல் பெடிகியூர்...

இந்த வகை பெடிகியூரில் ரசாயன அழகு சாதனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை. இதனால் பாதங்களுக்கு எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது என்பது முக்கியமான விசயம்.
வீட்டிலேயே செய்யலாம் ஈஸி நேச்சுரல் பெடிகியூர்...

கூட்டமாக யோகா வகுப்பில் கலந்து கொள்ளும் போதும் சரி... டிராஃபிக் சிக்னலில் பிரேக்கிட்டு வண்டியை நிறுத்தி காத்திருக்கும் போதும் சரி... பெண்களாக இருந்தால் அவர்களது பெரும்பான்மை கவலை என்ன தெரியுமா? பின்னால் இருந்து நம்மைப் பார்ப்பவர்களுக்கு அப்போது நமது முகம் தெரியாது. பாதங்கள் தான் கண்ணில் படும். அந்தப் பாதங்கள் பிறர் கண்களுக்கு எப்படித் தோன்றுமோ? அடடா இத்தனை அழகான முகத்தைக் கொடுத்த ஆண்டவன்; ஏன் இந்தப் பெண்ணுக்கு இத்தனை அசிங்கமான பாதங்களைக் கொடுத்திருக்கிறான்? என்று யாராவது நம்மை ஏளனமாக நினைத்து விடுவார்களோ? என்ற ஒரு சின்னத் துணுக்குறல் உள்ளூர நம்மை அரித்துக் கொண்டே இருக்கும்.

பாதங்கள் அழுக்காக இருந்தால் கூடப் பரவாயில்லை, வீட்டுக்கு வந்து கழுவிக் கொள்ளலாம். ஆனால் பாலம், பாலமாய் வெடித்துப் பொலிவற்றுப் போய் சேற்றில் இறங்கி வேலை செய்து விட்டு வீடு திரும்பும் எஃபெக்டில் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான நேரங்களில் நிச்சயமாக நமது பாதங்களை பிறரது கண்ணிலிருந்து மறைக்கத் தான் நினைப்போம் இல்லையா? 

பிறகென்ன? பித்த வெடிப்புக்கான தொலைக்காட்சி விளம்பரங்கள் எல்லாம் அதைத் தானே நமக்கு போதிக்கின்றன. ஆமாம் பாதங்களை மறைத்துக் கொண்டு, விளம்பரங்கள் பரிந்துரைக்கும் பித்த வெடிப்புக்கான கிரீம்களைத் தொடர்ந்து தேய்த்துக் கொண்டு வந்தால் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெடிப்பு மறைந்து பாதம் பொன்னெழிலில் கண்களைப் பறிக்குமாம். யாருக்கெல்லாம் இப்படி கண்களைப் பறித்ததென்று தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்வி... இதெல்லாம் நிரந்தரத் தீர்வுக்கான வழியா என்ன?  

நிரந்தரமாய் நமது பாதங்கள் அதன் இயல்பான அழகையும், கம்பீரத்தையும் மீட்டெடுக்க பாதங்களுக்குத் தேவை கிரீம்கள் அல்ல, அதையும் தாண்டி வேறு ஒன்று! என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த வேறு ஒன்று என்ன என்றால்? அது தான் இயற்கை முறையிலான பாதப் பராமரிப்பு வழிகள்! இதோ இப்போது பாத அழகைப் பராமரிக்க இயற்கைப் பராமரிப்பு முறை ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். இது பார்லரில் வழங்கப்படும் பெடிகியூர் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதோடு எளிதானதும் கூட...

தேவையான பொருட்கள்:

பாதாம் எண்ணெய்: 1 டீஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு: 1
பன்னீர்: 1 டீஸ்பூன்
தேன்: 1 டீஸ்பூன்

செய்முறை:

குளிக்கச் செல்லும் முன்பாக மேலே சொல்லப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு பவுலில் கலந்து எடுத்துக் கொண்டு, இந்தக் கலவையை இரண்டு கால்களிலும் கணுக்கால் மற்றும் பாதப் பகுதியில் தடவி குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யவும்.

பாதாம் எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, இரண்டுமே மிகச் சிறந்த புரதப் பொருட்கள் என்பதோடு தோல் வறண்டு போகாமல் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ளவும் உதவக் கூடியவை. பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் தோலின் இறந்த செல்களை நீக்கி, புத்துணர்ச்சி அளிக்க உதவும். தேன் பாதத்தின் மிருதுத்தன்மைக்கு உத்திரவாதமளிக்கும். 

இந்த வகை பெடிகியூரில் ரசாயன அழகு சாதனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை. இதனால் பாதங்களுக்கு எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது என்பது முக்கியமான விசயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com