மெகந்தி மோகத்தை ஓவர்டேக் செய்யுமா நெயில் ஆர்ட்!

மாடர்ன் யுவதிகளின் வண்ண மயமான லெக்கிங்ஸ், டைட்ஸ் மோகத்துக்கு மெகந்தி பொருந்தாத போது நெயில் ஆர்ட் தான் ஆபத்பாந்தவன்.
மெகந்தி மோகத்தை ஓவர்டேக் செய்யுமா நெயில் ஆர்ட்!

ஷாப்பிங் மால்கள், திருமண வைபவங்கள், கம்யூனிட்டி விழாக்கள் இங்கெல்லாம் மக்கள் புழக்கம் கணிசமாக இருக்கும் என்பதால் பெண்களை ஈர்க்கும் விதத்தில் இவ்விடங்களில் முன்பு மெகந்தி இட்டு விடும் யுவதிகளின் தரிசனம் சகஜமாகக்  காணக் கிடைக்கும். மெகந்தி எல்லாம் பழைய காலம் என்பதாக இப்போதெல்லாம் இப்படியான இடங்களில்  நெயில் ஆர்ட்  ஆர்ட்டிஸ்டுகள் பெருகி வருகிறார்கள். சென்னை, கோவை, உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் கூட்டமாக காணக் கிடைக்கும் இடங்களில் நிச்சயமாக நெயில் ஆர்டிஸ்டுகள் தரிசனம் நமக்கு கிட்டியே தீரும்.  மெகந்தியோடு ஒப்பிட்டால் நெயில் ஆர்ட் சின்னப் பிள்ளைகளின் டிராயிங் விளையாட்டு போலத்தான் எண்ணத் தோன்றுகிறது, ஆனாலும் இதையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.  மாடர்ன் யுவதிகளின் வண்ண மயமான லெக்கிங்ஸ், டைட்ஸ் மோகத்துக்கு மெகந்தி பொருந்தாத போது நெயில் ஆர்ட் தான் ஆபத்பாந்தவன். உடைகளுக்கு மேட்ச்சாக எல்லா விதமான மெட்டாலிக் வண்ணங்களிலும் நெயில் ஆர்ட் செய்து கொள்ளலாம் என்றால் எல்லோரும் இதை வரவேற்கத் தானே செய்வார்கள்.

இந்த நெயில் ஆர்ட் பற்றி சுவையான சில தகவல்கள்:

நெயில் ஆர்ட் முதன் முதலாக எங்கு யாரால் அறிமுகப் படுத்தப்பட்டது என்பதற்கான துல்லியமான தகவல்கள் எதுவும் வரலாற்றில் இல்லை. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தில் மக்களிடையே தங்களது சமூகத் தகுதியை பறைசாற்ற வெவ்வேறு வண்ணங்களில் நகத்தில் சாயமேற்றிக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கிறது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழும் மக்கள் அடர் நிறங்களில் தங்கள் நகங்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தனர், வருமானம் குறைந்து சமூக அந்தஸ்தில் கீழ் நிலையில் இருந்த மக்கள் வெளிர் வண்ணங்கள் அல்லது நியூட்ரல் நிறங்களில் தங்களது நகங்களில் சாயமிட்டுக் கொண்டனராம். அறிவு ஜீவிகள் கருப்பு நிறத்திலும், சாதாரண பொதுஜனங்கள் பச்சை நிறத்திலும் நகங்களைச் சாயமேற்றிக் கொண்டமைக்கு எகிப்திய ஓவிய நிரூபணங்கள் உண்டு.

யானைத்தந்தம் பார்த்திருப்பீர்கள் பேரரசர்களின் யானைகளின் தந்தங்கள் தங்கப் பூணிடப்பட்டு படு கம்பீரமாக காட்சியளிக்கும். சீனாவின் மிங் வம்ச அரசர்கள் தங்களது அசாதாரண அளவிலான நீளமான நகங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியால் பூணிட்டு பாதுகாக்கும் அல்லது அலங்கரிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி வந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை நெயில் ஆர்ட் எனும் கலையை அறியாமலே அதை போற்றி வளர்த்த புரவலர்கள் என்று பாராட்டினாலும் தவறே இல்லை.

நெயில் ஆர்ட் போட்டுக் கொள்வதில் அவரவர் சொந்தக் கற்பனை வளமே பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் அடர் வண்ணத்தில் நெயில் பாலிஷ் போட்டு அதன் மீது வெள்ளை பாலிஷ் பயன்படுத்தி நெயில் ஆர்ட் வரையப்படுகிறது. நெயில் ஆர்ட் போட்டுக் கொள்வதற்கு என்று தனியாக பாலிஷ்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றனவாம். நாம் ரெகுலராகப் பயன்படுத்தும் நெயில் பாலிஷ்கள் நெயில் ஆர்ட் செய்து கொள்ள உகந்தவை இல்லையாம். 

நெயில் ஆர்ட் கற்றுக் கொள்ள இந்த விடியோ இணைப்பைப் பாருங்கள்;

வெறுமே மனம் போன போக்கில் நெயில் ஆர்ட் செய்து கொள்வதை விட சிறப்பு நாட்களுக்க்கென்று சில சிறப்பான தீம்களை உருவாக்கி அதனடிப்படையில் நெயில் ஆர்ட் செய்து கொள்வது இப்போது கல்லூரிப் பெண்களிடையே பரவலாகி வருகிறது. சிறப்பு நாட்கள் என்றால் வேலண்டைன்ஸ் டே, ஃப்ரெண்ட்ஸ் டே, பழைய நண்பர்களைச் சந்திக்கும் அலும்னி டே, சம்மர், வின்டர், ரெயினி டேஸ்  இப்படி எல்லா நாட்களுக்கும் பொருத்தமாக தனித் தனியாக தீம்களை உருவாக்கி நெயில் ஆர்ட் இட்டுக் கொள்ளலாம். தீம் நெயில் ஆர்ட் மூலம் விடுகதைகளைக் கூட உருவாக்கி விடையளிக்க முடியும் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ அதற்கான விடியோ இணைப்பு கீழே; 

சிலருக்கு பொறுமையாக மெகந்தி இட்டுக் கொள்ளவோ அல்லது நெயில் ஆர்ட் வரைந்து கொள்ளவோ சோம்பேறித் தனமாக இருக்கும். அப்படியானவர்களும் கவலைப் படத் தேவை இல்லை. நெயில் ஆர்ட் செய்யப்பட்ட ரெடிமேட் நகங்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு நமது நகங்களின் நுனியில் கவர்  செய்து கொள்ளலாம். 

இனி வரும் காலத்தில் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று தான் நெயில் ஆர்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லாமல் ஹேர் ஸ்டைலிஸ்ட்,  மெகந்தி ஸ்பெஷலிஸ்ட் வரிசையில் நெயில் ஆர்ட் டிஸைனர்கள் உருவாகி பியூட்டிஸியன்களைப் போலவே இவர்களும் தவிர்க்க முடியாத நபர்களாகி விடுவார்கள். முன்னேறத் துடிக்கும் திறமையான பெண்களுக்கும், ஆண்களுக்கும் இதுவும் ஒரு அருமையான தொழில் வாய்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com