மொட்டைக் கடிதத்தின் நவீன வடிவமா சாராஹா?

எதற்கெல்லாம் ஆப் என்று சொல்லவே முடியாத அளவுக்கு ஆப்களின் எண்ணிக்கை
மொட்டைக் கடிதத்தின் நவீன வடிவமா சாராஹா?

எதற்கெல்லாம் ஆப் என்று சொல்லவே முடியாத அளவுக்கு ஆப்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  மெய் நிகர் உலகின் சமீபத்திய வரவுதான் இந்த சாராஹா (Sarahah). ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இந்த ஆப்பை தரவறக்கம் செய்து கொள்ள முடியும். ஃபேஸ்புக் தளத்தில் நம் டைம்லைனிலும் பார்க்க முடியும் ஒரு ஆப் இது. 

சாராஹா என்றால் நேர்மை என்று அர்த்தம். நம்மை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு கருத்தையோ எதிர்வினையையோ இணைய வெளியில் தெரிவிக்க, சாராஹா ஒரு தளமாக விளங்குகிறது. சாராஹாவில் உங்கள் காதலியிடம் நீங்கள் துணிவுடன் காதலை வெளிப்படுத்தலாம், சகிக்க முடியாத மேலதிகாரியைப் பற்றிய புரணியைக் கூறலாம், சமூகம் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இத்தளத்தைப் பயன்படுத்தலாம். எதுவாக இருந்த போதும் உள்ளத்தில் உள்ளதை வார்த்தைகளில் வடிக்கும் ஒரு புகலிடம் சாராஹா என்றால் மிகையில்லை. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. பாரத பிரதமருக்கோ பக்கத்து வீட்டில் இருக்கும் எதிரிக்கோ அல்லது அலுவலகத்தில் உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய நபருக்கோ என யாருக்கு வேண்டுமானாலும் மொட்டைக் கடிதாசி போடலாம். உங்களின் பெயரோ வேறு எந்த தகவலோ வெளியிடப்படுவதில்லை. சொற்களால் ஆன ஒரு போர்க்களம் இது. முகத்தை மறைக்க ஒரு கேடயம் இருப்பதால் விருப்பப்படி எழுதலாம். யாரை வேண்டுமானாலும் திட்டலாம். யாரையும் புகழலாம். இது ஒரு கட்டற்ற இணையச் சுதந்திர வெளி.

சுய முன்னேற்றத்துக்கான ஆப்பாக தொடங்கப்பட்ட சாராஹா வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்தியாவில்   வக்கிர மனம் கொண்ட சிலர் பெண்களிடம் அந்தரங்கமான கேள்விகளை கேட்கவும், அவர்கள் மீதான வெறுப்பை உமிழும் இடமாக சாராஹாவை பயன்படுத்துகிறார்கள். கடைசியில் சைக்காலஜி சைபர் இடமாக மாறும் நிலையில் உள்ளது. புதிய தொழில்நுட்பம் என்பது மாற்றத்துக்கான ஒரு மகத்தான திறவுகோல். அதைச் சரிவர உணர்ந்து வளர்ச்சிக்காக பயன்படுத்துவது புத்திசாலித்தனம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நினைவில் வைத்திருந்தால் ஒருபோதும் சாராஹாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எவ்வித பிரச்னைகளும் நம்மை நெருங்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com