சட்டத்தின் பெயரால் அடித்துக் கொல்லுங்கள்  அந்த மனித மிருகங்களை!

தயவு செய்து காருண்யம் என்ற பெயரிலும், சட்டப்படி தான் என்ற போர்வையிலும் நந்தினியையும், ஹாசினியையும் கொடூரமாகக் கொன்றவர்களை மீண்டும் சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டு விட வேண்டாம்.
சட்டத்தின் பெயரால் அடித்துக் கொல்லுங்கள்  அந்த மனித மிருகங்களை!

ஞாயிறன்று இரவில் தொலைக்காட்சி செய்திகளைக் கொண்டிருந்த போது, இடையிட்ட ஒரு செய்தி சட்டெனத் துணுக்குறச் செய்தது. பிறந்து சில தினங்களே ஆன சிசுவொன்று டெல்லியில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இரவெல்லாம் அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அழுகுரலால் தொல்லைக்கு உள்ளான அதன் பாதுகாவலனான ஒரு ஆண், இரவில் தூக்கம் கெடுகிறதென்று எரிச்சல் மிகுதியில் அந்தக் குழந்தையின் இடது காலை உடைத்து விட்டான் என்பதே அந்தச் செய்தி.

இதை வீடியோ ஆதாரத்துடன் ஒளிபரப்பினார்கள். அதைப் பார்த்த மாத்திரத்தில், அத்தகைய இழிசெயலில் ஈடுபட்ட அந்த ஆணின் மனநிலையை நினைத்து ஆத்திரம், ஆத்திரமாக வந்தது. இன்றில்லா விட்டால் நாளையோ, மறுநாளோ அதற்குப் பின்னரோ அவனால் நிம்மதியாக உறங்கி விட முடியும். ஆனால் ஒருவேளை இடது கால் முடமாகி விட்டால், பின்னர் அந்தக் குழந்தை வாழ்நாள் முழுமைக்கும் எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை அனுபவிக்கவேண்டுமோ! இதென்ன பைத்தியக்காரத்தனம்?! இந்த மாதிரி சுயநலம் மிக்க இழிபிறவிகளை என்ன செய்வது? என்று இயலாக் கோபம் கனன்று கொண்டே இருந்தது. மனிதர்களின் மனநலன் இத்தனை கேடு கெட்டுப் போக எதைத்தான் காரணமாக்கித் தொலைவது? எதைக் காரணமாக்கினாலும் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முன் அது நீர்த்துப் போகும்.

கடந்த வாரம் முழுக்க அரியலூர் சிறுமி நந்தினியின் கொலை விவகாரம் ஒரு பாடு தூக்கம் தொலைக்க வைத்ததென்றால் இந்த வாரத் தொடக்கத்திலேயே அனைவரையும் மன உளைச்சலில் ஆழ்த்த வந்திருக்கிறது பசும் பிஞ்சுக் குழந்தை ஹாசினியின் கொடூர மரணம்! தொடர்ந்து குழந்தைகளுக்கும், அறியாச் சிறுமிகளுக்கும் எதிராக நிகழ்த்தப் படும் இந்த வன்முறைகளின் பின்புலமென்ன?

குற்றவாளிகளின் மனநலன் தாண்டியும் தயவு செய்து சிந்தியுங்கள். குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது ஏன் அலட்சியப்படுத்தப் பட்டது? என்று நமக்குள் நாமே ஒரு முறை கேள்வி கேட்டுக் கொள்வது நல்லது. சக மனிதர்களின் மீதான நம்பிக்கை என்பதன் எல்லைக்கோட்டை நாம் ஏன் உணராமல் போனோம்? அதையே ஏன் நமது குழந்தைகளுக்கும் உணர்த்தாமல் போனோம்? இழப்பின் பின் வருந்தி என்ன பயன்? பெற்றோர்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமான தண்டனை அல்லவா இது? குற்றம் இழைத்தவனுக்கு எப்போதுமே தவறை நினைத்து வருந்தி அழ மனசாட்சி இருப்பதில்லை. அடுத்த
கட்டமாக அவன் எப்பாடுபட்டாவது தேடிக் கண்டடைய முயல்வது, தனது குற்றத்திலிருந்து தப்புவிக்கச் செய்யும் விடுதலை. ஆனால் உண்மையில் தண்டனை அனுபவிப்பவர்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தான் இல்லையா?

அயல்நாடுகளில் எல்லாம் தெருவிலோ, சாலைகளிலோ வாக்கிங் செல்கையில் தென்படும் குழந்தைகளைக் கொஞ்சுவதற்கு கூட பெரும்பாலான நாட்டுச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. சட்டப்படி அது குற்றம். இன்னார் என் குழந்தையை தவறான உள்நோக்கத்துடன் கொஞ்சினார் என்று கூறி அவர்கள் மீது வழக்குப் போட வழி இருக்கிறது அங்கு. ஆனால் நம் நாட்டில் அப்படியான சட்டங்கள் இல்லை. தவறான உள்நோக்கத்துடன் குழந்தைகளையும், சிறுமிகளையும் அணுகுபவர்கள் கூட வயதைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளும் வகையில் தான் இப்போதும் நமது சட்டங்கள் இருக்கின்றன. இத்தகைய சூழலில் பெற்றோர்கள் மேலும் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இழப்பின் பின்னும் நாம் உணர்ந்தாக வேண்டி இருக்கிறது. 

ஆகவே, பெற்றோர்களே தயவு செய்து நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் இருக்கவியலாத தருணங்களில் அவர்களின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த பாதுகாப்பை ஒன்றுக்குப் பலமுறை யோசித்து திருப்தியுற்ற பின்னரே பிறரது உதவியை நாடுவது எனும் தார்மீக முடிவில் எப்போதும் இளக்கம் காட்டவே காட்டாதீர்கள். சில இடங்களுக்கு குழந்தைகளை உடனழைத்துச் செல்வது அலுப்பும், சலிப்புமான வேலை என்று நினைத்து உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள், அக்கம் பக்கத்தினர் என எவரையும் உடனடியாக நம்பி ஒப்படைத்து பல நேரங்களில் அவர்களுக்கான பாதுகாப்பை நிராகரித்து விடாதீர்கள்.

அதற்காக யாரையுமே நம்பக் கூடாது என்று பொருளில்லை. நம்பிக்கை என்பது எளிதில் கண்டடைந்து விடக் கூடிய விசயம் அல்ல! என்பதை உணர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதே இதன் எளிமையான அர்த்தம்.

ஒரு குற்றவாளி நினைத்துப் பார்க்க அஞ்சும் கொடூரத்தை நிகழ்த்தி விட்டு, தொலைந்த குழந்தையை தேடுவது முதற்கொண்டு காவல்துறை விசாரணைகள் வரை சிறிதும் பதட்டமின்றி உடனிருக்க முடியுமென்றால், பெற்றோர்கள் ஏமாற்றப் படுவதற்கான வாசல்கள் இந்தச் சமூகத்தின் பல திக்குகளிலும் திறந்திருக்கின்றன என்றே கொள்ள வேண்டும். இதில் குக்கிராமம், சிற்றூர், பேரூர், நகரம் என்ற வேறுபாடுகள் எல்லாம் இல்லை.

பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப் படும் வன்முறைகளை விட இன்று குழந்தைகளுக்கு எதிராக திட்டமிட்டும், திட்டமிடப்படாமலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகள் ஏராளம். அதற்கான சாட்சிகளை நாம் வேறெங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவை நம் வீட்டின் வரவேற்பறை மேஜைகளில் இரைந்து கிடக்கும் செய்தித்தாள்களாகவும், கண நேரமும் நாம் பிரியாதிருக்க விரும்பும் ஸ்மார்ட் ஃபோனில் ஃப்ளாஷ் ஆகும் செய்திகளாகவும் விரல் நுனியில் காத்திருக்கின்றன. சாட்சிகள் இருந்தும் நீதி கிடைக்காத நிலை தான் இங்கெப்போதும் நீடிக்கிறது. ஆனால் இம்முறை அப்படி நிகழ வேண்டாமே!

சிலவருடங்களுக்கு முன்பு கோவையில் பள்ளி வேன் டிரைவர் என்ற போர்வையில் ஒரு மனித மிருகம் பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் அக்கா, தம்பியென இரட்டைக் கொலை செய்து இரு அரும்புகளை சிதைத்தது. மிடில் ஸ்கூலில் கூட அடியெடுத்து வைக்காத அந்தச் சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அன்று தமிழ்நாட்டில் அனல் கிளப்பிய விவகாரம். அந்த வழக்கில் விரைவாகவே குற்றவாளி பிடிபட்டான். ஆனால் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினரை தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றதாக அவனை  காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். சட்டத்தின் முன் வேண்டுமானால் அது என்கவுன்டர் ஆக இருக்கலாம். ஆனால் மக்கள்  மன்றத்தில் குற்றவாளிக்கான மிகச் சரியான தண்டனையாகவே அவ்விசயம் அணுகப் பட்டது. 

மும்பை நிர்பயா பாலியல் வன்முறைச் சம்பவத்திலும் கூட இத்தகைய அணுகுமுறையை காவல்துறை கையாண்டிருந்தால் நிர்பயாவின் (ஜோதி சிங்) பெற்றோருக்கு மகளது கொடூர மரணத்திற்கு நீதி கிடைத்த குறைந்த பட்ச நிம்மதியாவது கிட்டியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அதில் அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லை. குற்றவாளிகளில் ஒருவன் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தாலும், மிச்சமுள்ளோரில் ஒருவன் மைனர் என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான். வயது வருமுன்னே கிஞ்சித்தும் மனிதத் தன்மையற்ற ஒரு கொடூரத்தை அரங்கேற்றியதில் உடன்பட்டிருந்த ஒருவனை மைனர் என்ற அடிப்படையில் விடுதலை செய்தது எந்த நியாய, தர்மத்தின் அடிப்படையில் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்முறைகளை நிகழ்த்துபவர்களை தண்டிக்கும் உரிமையை இந்த அரசு பெற்றோர்கள் கையில் ஒப்படைக்குமானால் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கருணைக்கு இடமின்றி இத்தகையவர்களை உடனடியாக தூக்கில் இடலாம். அல்லது அரபு நாடுகளைப் போல கல்லால் அடித்துக் கொள்ளலாம். அவர்களை உய்விக்க வேறு மார்க்கங்கள் தேவையில்லை. அவர்கள் வாழத்தகுதியற்றவர்கள்! 

தமிழகத்தில் நீதி செத்துப் போகவில்லை என்பதை நிரூபிக்கத் தான் நந்தினிகளும், ஹாசினிகளும் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்களோ என்னவோ? தயவு செய்து காருண்யம் என்ற பெயரிலும், சட்டப்படி தான் என்ற போர்வையிலும் நந்தினியையும், ஹாசினியையும் கொடூரமாகக் கொன்றவர்களை மீண்டும் சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டு விட வேண்டாம்.

ஒரு பெண்ணை சக உயிராகப் பாவிக்கத் தவறிய, ஒரு சிறுமியை சிறுமியாக ரசிக்கத் தவறிய, ஒரு குழந்தையை குழந்தையாகப் பார்க்கத் தோன்றாத, மனித மிருகங்கள் உயிருடன் இருந்தென்ன சாதிக்கப் போகிறார்கள்?! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com