நகை வடிவமைப்பு... தயாரிப்பு... படிக்கலாம் நீங்கள்!

இந்த பயிற்சிகள் ஒரு வாரத்தில் தொடங்கி, அதிகபட்சமாக 8 வாரங்கள் வரை நடைபெறும். இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகின்றன. 
நகை வடிவமைப்பு... தயாரிப்பு... படிக்கலாம் நீங்கள்!

வீட்டில் ஒரு குண்டுமணி அளவாவது தங்கம் இருக்க வேண்டும் என சாதாரண மக்கள் நினைப்பதும், வைரம், வைடூரியம் வைத்திருப்பதுதான் நம் அந்தஸ்துக்கு ஏற்றது என நினைக்கும் வசதிமிக்கவர்களும் ஏதேனும் ஒரு வகையில் நகைகளை வாங்கி சேர்த்து வைக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

அவ்வாறு சேர்த்து வைக்கும் இந்த நகைகள்தாம் சில சமயங்களில் வீட்டின் அவசரத் தேவைகளை மட்டுமல்ல, நாட்டின் அவசர பொருளாதாரத் தேவைகளையும் ஈடு செய்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, உலகில் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் ஆபரணங்கள், அவற்றுக்கு அடிப்படையான மூலப் பொருள்கள் குறித்த கல்வியை இளைஞர்கள் தேடிப் பயில்வது அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அவ்வகையில், நம் நாட்டில் இந்தியன் டைமண்ட் இன்ஸ்டிடியூட், ஜெ.கே. டைமண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெம்ஸ் & ஜூவல்லரி,  GOYAM DIMOND INSTITUTE PVT LTD, ஜி.ஐ.ஏ, இண்டர்நேசனல் ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட், ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் வைரம், நவரத்தினங்கள், தங்க நகைகள் குறித்த கல்வியை வழங்கி வருகின்றன.

இவற்றில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள இந்தியன் டைமண்ட் இன்ஸ்டிடியூட் கல்வி மற்றும் நவரத்தினவியல் ஆய்வக சேவையையும் குஜராத் மாநிலத்தின் இரு இடங்களில் அளித்து வருகிறது.  சூரத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய வைரத் தயாரிப்பு மையத்தில் வைரம், நவரத்தினம் மற்றும் நகை கல்வியை அளித்து வருகிறது இந்த நிறுவனம். 

இந்த நிறுவனம் குஜராத் மாநில அரசால், CENTRE OF EXCELLEENCE,  ANCHOR INSTITUTE FOR GEMS & JEWELLERY  எனவும், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் R&D  INSTITUTE எனவும், மத்திய அரசின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் சிறந்த வைர  தர ஆய்வகம் எனவும் அங்கீகரிக்கப்பட்டது.

இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இங்கு வளாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 500 முதல் 600 மாணவர்கள் வரை வளாகப் பயிற்சி பெறுகின்றனர். இதில் 65 நாடுகளைச் சேர்ந்த பிற மாணவர்களும் அடங்குவர். இந்த நிறுவனத்தில் 80  செய்முறை பயிற்சிகளும், 20 புத்தகப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்தியன் டைமண்ட் Higher Diploma in Jewellery Design & Manufacture (HDJDM), Graduate Jewellery Professional (GJP), Professional Dimond Grader (DGP), Professional Dimond Manufacture (DMP), Jewellery Design Professional (JDP), Jewellery Manufacturing Professional (JMP), Gemmology Professional (GP) என 7 விதமான படிப்புகள் உள்ளன.

இதில், HDJDM படிப்பு 3 ஆண்டுகள் ( 6 பருவம்) கொண்டது. அனைத்து துறை பட்டதாரிகளும் இதில் சேரலாம். குறைந்தபட்சம் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மீதமுள்ள தொழில்முறை டிப்ளமா படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்தவர்கள், பொறியியல் டிப்ளமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இவற்றுக்கான கால அளவு குறைந்தபட்சம் 16 வாரங்கள் தொடங்கி, அதிகபட்சமாக 36 வாரங்கள் வரை உள்ளது. 

இவை தவிர, வைரம், நவரத்தினம், நகை ஆகியவற்றில் தொழில்முறை பயிற்சிகள் எனப்படும் Grading, Planning, polishing, Bruting, Valuation, Bagging என்பவையும், அடிப்படை பயிற்சிகள் எனப்படும் Dimond Identification, Grading, sorting, planning, polishing, Bruiting, Laser Dimond Processing என்ற திட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. 

இந்த பயிற்சிகள் ஒரு வாரத்தில் தொடங்கி, அதிகபட்சமாக 8 வாரங்கள் வரை நடைபெறும். இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகின்றன. 

தொழில்முறை மற்றும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் மட்டும் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இந்த நிறுவனத்தில் தொடர்பில் உள்ள இந்தியாவின் 13-க்கும் அதிகமான மிகப்பெரிய நகை துறை சார்ந்த நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன.

தொழில்முனைவோர், பள்ளி, கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், சுயவேலைவாய்ப்பு நாடுவோர், நகை தொழிலில் ஈடுபட விரும்பும் அனைவரும் இந்தப் படிப்புகளைப் படித்துப் பயன் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com