பொதுப்பணித்துறை அமைச்சரின் வேலை கோட்டையில் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து ஃபைல் பார்ப்பது அல்ல!: துரை முருகன்

துறை சார்ந்த அனுபவம் இல்லாத அமைச்சர்களை மக்கள் ஏன் புறக்கணிக்கக் கூடாது? புறக்கணிப்பு என்பதைத் தாண்டி மக்கள் ஏன் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மேலும் அதிக அக்கறை காட்ட முயற்சிக்கக் கூடாது? என்றொர
பொதுப்பணித்துறை அமைச்சரின் வேலை கோட்டையில் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து ஃபைல் பார்ப்பது அல்ல!: துரை முருகன்

திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் தனியார் செய்தி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்த விவரம், தான் முதன் முறை பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, அந்தப் பதவியை தமக்கு ஒதுக்கிய திமுக தலைவரும் அப்போதைய தமிழக முதல்வருமாக இருந்த கலைஞர் ‘பொதுப்பணித்துறை அமைச்சர் என்றால் கோட்டையில் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து ஃபைல் பார்த்து வேலை முடிப்பது அல்ல. மக்களோடு மக்களாக தெருவில் இறங்கி நடையாய் நடந்து வேலை பார்க்க வேண்டும்’ என்று தன்னிடம் சொன்னதாகக் கூறினார். 

மேலும் தமிழ்நாட்டில் எந்த ஆறு எங்கிருந்து உற்பத்தியாகிறது? எந்தெந்த திசைகளில் எல்லாம் பாய்ந்தோடுகிறது, எங்கே எந்த ஆறு திசை மாறிச் செல்கிறது. இவை அத்தனையும் அந்த துறை அமைச்சர் அறிந்திருக்க வேண்டும். இப்போது அந்தத் துறை சார்ந்த பதவி வகிக்கும் அமைச்சருக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் தான் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது  தன்னுடைய பாதம் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அவர் நடந்தாரா இல்லையா? என்பது அவருக்கே வெளிச்சம். 

இது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால் அவர் தெரிவித்த விசயத்தில் மக்களுக்கான ஒரு செய்தி இருக்கிறது. மக்களது பொன்னான வாக்குகளைப் பெற்று, தேர்தலில் வெற்றி அடைந்து கட்சி சார்பாக ஆள்கிறார்களே அவர்கள் அத்தனை பேருமே அந்தந்த துறை சார்ந்த அனுபவங்களுடன் தான் தலைமை வகிக்கிறார்களா? 

கல்வி அமைச்சர் என்றால் தமிழ்நாட்டின் கல்விமுறை பற்றியும், ஒட்டுமொத்த கல்வி நிலையங்கள், நிறுவனங்கள் பற்றியும் முழுவதுமாக அறிந்திருக்காவிட்டாலும் கூட அறிந்து கொள்ளும் முயற்சியாவது உள்ள நபர்கள் தானே அமைச்சர்களாக வரவேண்டும். இதே போல மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சட்டம் ஒழுங்கு, காவல், சமூக நலம், வனத்துறை, கப்பல் துறை இத்யாதி... இத்யாதி...

துறை சார்ந்த அனுபவம் இல்லாத அமைச்சர்களை மக்கள் ஏன் புறக்கணிக்கக் கூடாது? புறக்கணிப்பு என்பதைத் தாண்டி மக்கள் ஏன் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மேலும் அதிக அக்கறை காட்ட முயற்சிக்கக் கூடாது? என்றொரு கேள்வி மக்களிடையே ஏன் வரவே இல்லை?

அப்படியே வந்தாலும் அந்த எண்ணங்கள் மேலெழத் தேவையான மன உறுதிக்கு எப்போதுமே அற்பாயுள் தானா!  
 
‘ஓட்டுக்கு துட்டு’ என்ற கொள்கையை விட்டு விட்டு தாங்கள் செய்த நலப்பணிகளைக் காட்டி அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வாக்குக் கேட்டு வரும் போதல்லவா மோடி கனவு காணும் ஊழலற்ற இந்தியா உருவாக முடியும். அதை விட்டு விட்டு அரசியல் என்றால் இப்படித் தான் இருக்கும். அரசியல்வாதிகள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் எனும் பொதுக் கண்ணோட்டத்தை விட்டு விட்டு மக்கள் முதலில் நல்ல அரசியல்வாதிகளை அடையாளம் காணவேண்டும். அதே போல தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் கட்சித் தலைமைகளும் தங்களுக்குள் துறைகளைப் பிரிக்கும் போது துறை சார்ந்த அனுவத்தையே முதன்மை அளவுகோளாக முன்னெடுக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com