மைக்ரோவேவ் ஓவன் குறிப்புகள்

மைக்ரோவேவ் அடுப்பு (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும்
மைக்ரோவேவ் ஓவன் குறிப்புகள்

'மைக்ரோவேவ் அடுப்பு (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா கெட்டதா?

'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?

  • மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது'
  • காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.
  • மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது.

அமெரிக்கா, ஓரிகான் மாகாணத்தில், அட்லாண்டிஸ் ரைஸிங் எஷுகேஷனல் செண்டர் என்ற மையம், ரஷ்ய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த மைக்ரோவேவ் ஓவன் பயன்பாடு குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக்க்கூடியது.

மைக்ரோவேவ் தீமைகள்

உணவுப் பொருட்களின் சத்து குறைகிறது. மாறுபட்ட மூலக்கூறுகளுக்கு நம் உடல் பரிச்சயப்படாததால், அவற்றை ஜீரணிக்க முடியாமல், அவை உடலிலேயே தங்குகின்றன. இதனால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

  • ரத்தத்தில் ஹீமோகுளோபன் அளவு குறைகிறது.
  • உடலுக்கு நன்மை விளைவிக்கும் எச்.டி. எல்., கொழுப்பு குறைகிறது.
  • ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும், ரத்த வெள்ளை அணுவில் காணப்படும், லிம்போஸைட் குறைகிறது.
  • ரேடியோ கதிர்கள் ஊடுருவிய உணவுப் பொருட்களைச் சாப்பட நேர்கிறது. இதனால் புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.
  • ஆண்/ பெண் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது.
  • வயிறு, குடல் புற்றுநோய் உருவாகிறது. ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் வளர வழி வகுக்கிறது.
  • நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. நினைவுத் திறன், கவனம், மன வலிமை, சாதுர்யம் ஆகியவை குறைகின்றன.

மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள்  மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது.

சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.

மேலும் சில டிப்ஸ்

  • மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் உணவுப் பொருள்கள் மென்மையாக இருக்க மூடி வைத்து சமைக்க வேண்டும்.
  • உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், தக்காளி போன்றவற்றை கத்தியால் அல்லது ஃபோர்க்கால் துவாரமிட்டு குத்திவிட்டு வேகவிட வேண்டும்.
  • சாதம், பிரியாணி வகைகளை சூடு செய்யும்போது சிறிதளவு தண்ணீர் தெளித்து அதிக வெப்பத்தில் இரண்டு நிமிடம் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும்.
  • முந்திரி, பிஸ்தா, பாதாம், வேர்க்கடலையை ஓவனில் வைத்து அதிக சூட்டில் நான்கு நிமிடம் வைத்தால் நன்கு வறுபடும்.
  • ஓவனை ஆஃப் செய்த பிறகும் உணவுப் பொருட்கள் வெந்து கொண்டிருக்கும். அதனால் பாத்திரத்தை சிறிது நேரம் கழித்தே வெளியில் எடுக்க வேண்டும். 
  • பாப்கார்ன் செய்யும்போது பாத்திரத்தில் சோளமணிகளோடு இரண்டு மேசைக்கரண்டி நெய்விட்டு தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து மூடிபோட்டு  மூன்று நிமிடம் அதிக வெப்பத்தில் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும்.
  • அப்பளம் செய்யும்போது ஓவனில் முப்பது நொடிகள் ஒரு பக்கமும் திருப்பிப் போட்டு அடுத்தமுப்பது நொடிகள் மற்றொரு பக்கமும் வேக வைத்தால் கரகர அப்பளம் கிடைக்கும்.
  • மைக்ரோவேவ் ஓவனின் உட்புறத்தை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிய வேண்டும். இதனை ஓவனில் இரண்டு நிமிடம் வைக்க வேண்டும். பிசுக்கு தன்மையை நீராவி எடுத்துவிடும். பின்னர், ஒரு சுத்தமான துணியால் துடைத்து விடவேண்டும்.
  • புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றை மிதமான சூட்டில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து பொடி செய்து கொள்ளலாம்.
  • பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஓவனில்  முப்பது நொடிகள் வைத்து எடுத்தால் எளிதாக உரிக்க முடியும்.
  • காபி, டீ இவற்றை ஓவனில் ஒரு நிமிடம் வைத்தால் விரைவில் கொதித்துவிடும்.

மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:

  • மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.
  • குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
  • முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.
  • வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்
  • தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com