டூர் செல்லும் இடங்களில் இப்படி எல்லாம் ஏமாந்து விடாதீர்கள்!

விருப்பமிருப்பவர்கள் தங்களது டூரில் ஏமாந்த அனுபவங்களை இங்கே பதியலாம். நிச்சயம் அதனால் பிறர் பலன் அடைவர். இது கூட ஒரு வகையில் சமூக சேவை தான்.
டூர் செல்லும் இடங்களில் இப்படி எல்லாம் ஏமாந்து விடாதீர்கள்!

கடந்த வாரம் மூணாறு டூர் சென்றிருந்தோம். அங்கே ‘லொக்கார்ட் டீ ஃபேக்டரி’ யைப் பார்வையிடச் சென்ற போது ஃபேக்டரி அவுட்லெட்டின் வெளியே ஒரு பெண்மணி மெகந்தி கடை விரித்திருந்தார். டூர் வந்த வட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அவரிடம் மெகந்தி இட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு கியூ. என் மகள்களுக்கும் மெகந்தி இட்டுக் கொள்ள ஆசை! சரி நீங்கள் கியூவில் காத்திருந்து மெகந்தி போட்டுக் கொள்ளுங்கள் என்று அவர்களது பாட்டியை துணைக்கு வைத்து விட்டு நாங்கள் ஃபேக்டரி அவுட்லெட்டில் டீத்தூள் பாக்கெட்டுகள் வாங்கச் சென்றோம். அப்போதாவது மெகந்தி இடக் கட்டணம் எவ்வளவு என்று நாங்கள் விசாரித்திருக்க வேண்டும். என்ன மிஞ்சிப் போனால் 100, 200 ரூபாய்களுக்குள் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நாங்கள் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வகை வகையாக டீத்தூள் பாக்கெட்டுகள் வாங்கச் சென்று விட்டோம். திரும்பி வந்து பார்த்தால் அந்தப் பெண்மணி என் இரண்டு மகள்களுக்கும் கைகளில் சின்னதாக மெகந்தி இட்டு முடித்திருந்தார். 

இதில் பெரியவள்  ‘பாகுபலி’ அவந்திகா போல டாட்டூ கேட்டு வைக்க அந்தம்மாள் அவருக்குத் தெரிந்த வகையில் அவளது வலது புறங்கையில் மயிலின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியையும் இடது புறங்கையில் மயிற்தோகையையும் வரைந்து வண்ணமடித்திருந்தார். இரண்டு கைகைகளையும் சேர்த்து வைத்துப் பார்க்கையில் மயில் தோகை விரித்து ஆடுவதைப் போலிருக்க வேண்டும்! ஆனால்... அது அப்படித் தோற்றமளிக்கவில்லை. கந்தசாமி படத்தில் வடிவேலு சேவல் வேஷம் போட்டுக் கொண்டு வருவாரே! அப்படி ஒரு கேவலமான சேவல் வடிவத்தில் இருந்தது மெகந்தி டாட்டூ. மகள் அழமாட்டாக் குறையாக எங்களிடம் அதைக் காண்பித்து விட்டு முகம் திருப்பிக் கொண்டாள். ஏதாவது சொன்னால் அழுது விடுவாளோ! என்றிருந்தது. சரி போனால் போகிறது இது ஒன்று தானா? அடுத்த முறை அழகாக மெகந்தி போட்டு விடுபவர்களிடம் சென்று போட்டுக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது. சின்னவளுக்கு புறங்கையில் சும்மா வெறுமனே குட்டி குட்டியாக சில நட்சத்திரங்களை கருப்பு வண்ணத்தில் அந்தப் பெண்மணி வரைந்திருந்தார். இவ்வளவு தான் மெகந்தி. இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? முழுதாக 500 ரூபாய்.

கூசாமல் 500 ரூபாய் என்று சொன்னதும் கோபம் உச்சிக்கு ஏறத்தான் செய்தது. ஆனால் இடம், பொருள், ஏவல் என்ற ஒன்றிருக்கிறதே! முதலிலேயே கட்டணத்தை விசாரிக்காமல் மெகந்தி போட்டுக் கொள்ள ஒத்துக் கொண்டது எங்கள் தவறு. என்னம்மா, இது அதிகமாக வண்ணங்களைக் கூடப் பயன்படுத்தவில்லை இதற்குப் பெயர் மயிலா? இந்த டாட்டூவுக்கு இத்தனை விலையா? என்றால்; மேடம் சின்ன பாப்பாவுக்கு போட்ட மெகந்திக்கு நான் காசே கேட்கலை. இந்த மயில் டாட்டூவுக்கு மட்டும் தான் இந்த ரேட். இதுக்கே இப்படிச் சொன்னீங்கன்னா எப்படி? இது டூரிஸ்ட் பிளேஸ் பாருங்க. இங்க எல்லாம் ரேட் இப்படித் தான் இருக்கும். இதே மூணாறில் இருக்கும் என் பியூட்டி பார்லருக்கு வந்தீங்கன்னா... இதை விட ரேட் அதிகம் வாங்கி இருப்பேன் நான் என்று ஒரே போடாகப் போட்டார். அவரது பதில் எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் அந்தம்மாளோடு சண்டை போட்டு டூரில் கிட்டிய சந்தோசத்தை இழக்க விரும்பாததால் பணத்தைக் கொடுத்து விட்டு மகள்களை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தோம்.

வந்த பிறகு மறக்காமல் இனிமேல் எங்கு எதற்காக காசு செலவளிப்பதானாலும் முன்பே ஒன்றிற்கு இருமுறை சரியாக விசாரித்து உறுதி செய்து கொள்ளாமல் எந்த விசயத்திலும் இறங்கக் கூடாது என மொத்தக் குடும்பத்தினரும் எங்களுக்கு நாங்களே வகுப்பு எடுத்துக் கொண்டோம். இப்படி வகுப்பு எடுத்துக் கொள்வது இது எத்தனையாவது முறை எனக் கவனமில்லை. அடிக்கடி இப்படி நிகழ்வதுண்டு என்றாலும் இப்படி அநியாயமாக 500 ரூபாய் தண்டம் அழுதது கொஞ்சம் அதிகப்படியே! அதிலும் மயில் என்று ஆசைப்பட்டு மயிலும் இல்லாமல் சேவலும் இல்லாமல் கர்ண கடூரமாக ஒரு நோஞ்சான் பறவை வடிவம்... அதன் கொஞ்ச நஞ்ச வண்ணங்களும் கரைந்து காணாமல் போய் புறங்கையில் மிஞ்சி நிற்கிறது. இதை ஆசையாக நண்பர்களிடம் காட்ட முடியவில்லை என்பதோடு இப்படி ஏமாந்த கதையைச் சொல்லவும் பெருத்த யோசனையாகவே இருக்கிறது. ஆதலால் டூர் செல்வோர் அதிலும் மூணாறுக்கு டூர் செல்வோர் இந்த மெகந்தி விசயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

இது இந்த வருட டூரில் எங்களுக்கு கிட்டிய மோசமான அனுபவம். இப்படி பலருக்கும் பலவிதமாக டூரில் ஏமாந்த அனுபவங்கள் இருக்கலாம். உறவுகளிடம் கூட பகிர முடியாதவையாக சில இருக்கலாம். இங்கே கமெண்ட் பாக்ஸில் அப்படியான அனுபவங்களைப் பகிர்ந்தால் பின்னாட்களில் அதே இடங்களுக்கு டூர் செல்லக் கூடியவர்கள் நம்மைப் போல ஏமாறாமலிருக்க அவை உதவும். எனவே விருப்பமிருப்பவர்கள் தங்களது டூரில் ஏமாந்த அனுபவங்களை இங்கே பதியலாம். நிச்சயம் அதனால் பிறர் பலன் அடைவர். இது கூட ஒரு வகையில் சமூக சேவை தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com