சர்க்கரையில் பிளாஸ்டிக் கலப்படம் என்பது உண்மையா?

சர்க்கரையில் பிளாஸ்டிக் கலப்படம் என்பது உண்மையா?

அரிசியில் கலப்படம், பிளாஸ்டிக் அரிசி வந்து விட்டது என்றார்கள், முட்டையில் பிளாஸ்டிக் முட்டை வந்து விட்டது என்றார்கள். அதற்கெல்லாம் உச்சகட்டமாக இப்போது சர்க்கரையிலும் பிளாஸ்டிக் கலப்படம்

அரிசியில் கலப்படம், கள்ளச் சந்தையில் புதிதாக பிளாஸ்டிக் அரிசி வந்து விட்டது என்றார்கள், முட்டையில் பிளாஸ்டிக் முட்டை வந்து விட்டது என்றார்கள். அதற்கெல்லாம் உச்சகட்டமாக இப்போது சர்க்கரையிலும் பிளாஸ்டிக் கலப்படம் என்றொரு செய்தி உணவுச் சந்தையில் அனல் கிளப்ப வந்திருக்கிறது. சர்க்கரை குறிப்பாக வெள்ளைச் சர்க்கரை இந்திய உணவு வகைகளில் எத்தகைய அத்யாவஸியமான இடம் பெற்றிருக்கிறது என்பதற்கு அதற்கான பெருந்தேவையே அத்தாட்சி! 

இப்படிப் பட்ட சூழலில் நேற்று கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியிலுள்ள கிராமத்தில் ஒருபெண்மணி வழக்கமாக மளிகைப் பொருட்கள் வாங்கும் கடையில் சர்க்கரை வாங்கி இருக்கிறார். அந்தச் சர்க்கரையை பாகாக காய்ச்சும் போது அதிகப் புகை வந்ததோடு கருப்பாக பாகின் மீது பிளாஸ்டிக் போன்ற பொருள் படியத் தொடங்கியதும் பயந்து போன அந்தப் பெண்மணி எஞ்சிய சர்க்கரையை உணவுப் பாதுகாப்பு துறையின் ஆய்வுக்கு அனுப்புமாறு கிராம அதிகாரிகளிடம் கோரியிருக்கிறார். இது இன்று காலை செய்தி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான செய்தி.  

இது வரை சர்க்கரையில் சாக்பீஸ் துகள்கள் மற்றும் ரவையைத் தான் கலப்படம் செய்வார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரையிலும் பிளாஸ்டிக் கலப்படம் செய்வார்களா? என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாக இருக்கிறது. பொது மக்கள் சர்க்கரை வாங்கிப் பயன்படுத்தும் போது ஒவ்வொருமுறையும் அதை நீரில் கரைத்தோ அல்லது சூடு படுத்திப் பார்த்தோ அது கலப்படமற்ற உண்ணத் தகுந்த சர்க்கரை தானா? என எப்படி ஆராய முடியும். தென்னிந்தியாவில் உப்புமா, வாழைப்பழம், பழச்சாறுகள், காஃபீ, டீ உள்ளிட்ட சில உணவுகளில் சர்க்கரையை அப்படியே நேரடியாகச் சேர்த்து உண்ணும் வழக்கம் இருக்கிறது. அப்படியான சமயங்களில் அந்தச் சர்க்கரையில் பிளாஸ்டிக் கலப்படம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? அல்லது பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்பது போல இதுவும் வதந்தியா? உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து ஆராயும் மத்திய அமைச்சகம் தான் இதற்கு சரியான பதிலைக் கூற வேண்டும். மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் இம்மாதிரியான செய்திகள் உண்ணும் பழக்கம் குறித்த பயத்தை ஏற்படுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com