கல்யாணம் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?

பத்திரிகைகளில், வலைதளங்களில், மீம்ஸுகளில் என கல்யாணத்தைப் பற்றிய காமெடிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு
கல்யாணம் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?

பத்திரிகைகளில், வலைதளங்களில், மீம்ஸுகளில் என கல்யாணத்தைப் பற்றிய காமெடிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. கல்யாண பத்திரிகையை ஒருவர் தந்துவிட்டால் போதும், உடனே நல்லா மாடிக்கிட்டே மாம்ஸ் என்று கேலி செய்யும் நண்பர்கள் சூழ் உலகம் இது. இது நாள் வரை ஆண்களிடையே தான் இத்தகைய கிண்டல்கள் இருந்து வந்தது. இப்போது பெண்களும் கூட கல்யாணமா! எனக்கா! அதுக்குள்ளயா! என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மண வாழ்க்கை, குடும்பம், பொறுப்புக்கள் இவற்றை எல்லாம் சுமக்க இருவருக்கும் சமீப காலமாக தயக்கம். அதன் காரணமாக தாமதமான திருமணங்கள் நடந்து வருகின்றன. இது குறுத்து சுவாரஸ்யமான ஆய்வொன்றை ஆஸ்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.

திருமணத்தால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட முக்கியமாக தம்பதியரின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது என்கிறது அந்த ஆய்வு. திருமணம் செய்து கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது, அது ஒருவருக்கு உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், ஆயுளை நீட்டிக்கும் என்பதை கண்டறிந்தனர். இந்த ஆராய்ச்சியில் இந்திய வம்சாவளி ஆய்வாளர் ராகுல் பொட்லூரியும் பங்கேற்றார் என்பதும் சுவாரஸ்யமான தகவல்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட பத்து லட்சம் நபர்களை வைத்து இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினர். அவர்களுடைய ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு போன்றவற்றை பரிசோதித்தனர். தொடர்ந்து பல வருடங்கள் அவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். மேற்சொன்ன பரிசோதனை முடிவுகளையும் அடிக்கடி பரிசீலித்தனர். கொழுப்புப் பிரச்னையால் அவதியுற்ற திருமணமாகாத நபர்களை விட திருமணமான நபர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தார்கள்.

ஒப்பீட்டளவில் திருமணமாகாமல் தனியாக வாழும் நபர்களை விட திருமணமானவர்கள் நோயுற்றவர்களாக இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்பதே இந்த ஆய்வின் முடிவு. அதற்குக் காரணம் திருமணமானவர்கள் தங்கள் மீது சுய அக்கறை கொண்டு மாத்திரை மருந்துகளை ஒழுங்காக உட்கொண்டு தங்கள் உடல் நலத்தை பேணுகிறார்கள். ஆனால் தனியாக வாழ்பவர்கள் அவ்வாறு செய்வதில்லை. குடும்பஸ்தர்களின் வாழ்க்கைமுறையும் சீராக இருக்கும். அவர்கள் தம் குடும்ப பொறுப்பை உணர்ந்து ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். இணையதளங்களில் அதிகமான அளவில் கேலிப் பொருளாக திருமணம் என்கிற விஷயம் இருந்தாலும், உண்மையில் அதுவே ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com