எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே இல்லை! இத்தனைக்கும் நான் நல்லவன் எல்லாம் இல்லை! இப்படிச் சொன்னவர் யார்? (விடியோ)

எழுத்துச் சித்தர் என ரசிகர்கள் கொண்டாடும் எழுத்தாளர் பாலகுமாரன் தனது வெற்றியின் ரகசியமாக பத்து விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை
எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே இல்லை! இத்தனைக்கும் நான் நல்லவன் எல்லாம் இல்லை! இப்படிச் சொன்னவர் யார்? (விடியோ)

எழுத்துச் சித்தர் என ரசிகர்கள் கொண்டாடும் எழுத்தாளர் பாலகுமாரன் தனது வெற்றியின் ரகசியமாக பத்து விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை

1. என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சூரத்குமாரின் கலகல சிரிப்பு. அவர் முதுகில் அடிக்கும் அதிர்வு.  ஊடுருவி உற்றுப் பார்க்கின்ற அவர் மெüனம். அவர் முதுகு தடவும் விதம். இனிமையான குரலில் அவர்
சொல்லும் ராம நாமம்.

2. என் அம்மாவின் கம்ப இராமாயண விரிவுரை. பேச்சு நடையிலேயே அவர் கவிதைகளை சொல்லுகின்ற பாங்கு. விவரிக்கின்ற விதம். சொல்லும்போதே அவள் கரைந்து காணாமல் போகின்ற தன்மை. அவள் செய்யும் கத்தரிக்காய் காராமணி கூட்டு. எப்போதும் அவர் உடுத்தும்பட்டுப்புடவை.

மகாபாரதம். இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். என்ன அற்புதமான ஒரு நாவல். எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான மனோபாவனைகள், எத்தனை விதமான பிரச்னைகள். அதனோடு சொல்லப்
படுகின்ற தருமநெறி. பல மொழிகளில் மொழிபெயர்த்து உலகமெங்கும் அறியப்பட வேண்டிய மிகப் பெரிய காவியம் மகாபாரதம். இதைப் புரிந்து கொள்வது கடினம். குறை சொல்வது எளிது. மகாபாரதம் கதை அல்ல; அது ஒரு வாழ்வியல்; மனித சரித்திரம்.

3. என் வீடு. அதில் இருக்கும் தேவதைகளான என் இரண்டு மனைவியர். என் மனதை முற்றிலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற என் அன்பு மகளும், அருமை மகனும். அவர்கள் இரண்டு பேரும் பெற்றுத் தந்த ஆகாஷ், ஐயான் என்ற பேரக் குழந்தைகள். அவர்கள் என்னை தாத்தா என்று அழைப்பது.

4. நான் எழுதிய புத்தகங்கள். அட்டைகளை மிக கவனமாக தேர்ந்தெடுப்பது என்ற கடுமையான கொள்கைகளெல்லாம் இல்லை. உள்ளுக்குள் இருக்கின்ற விஷயம் கனமானதும், தெளிவானதும், திடமாய் எழுதப்பட்டதும் என்பதால் வெளிவடிவம், உள் வடிவம் என்பதில் நான் கவனம் கொள்வதில்லை. ஆயினும் சுற்றி பரப்பி வைத்துப் பார்த்தால் என்னைப் பற்றியே எனக்கு ஓர் ஆச்சரியம் வருகிறது. நான் உழைப்பாளிதான். ஆனால் இவ்வளவு உழைத்திருக்கிறேனா என்பது நிறைவாக இருக்கிறது. என் மரணத்தின் போது எனது நாலைந்து புத்தகங்களை தலைக்கு அடியில் வைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

5. துணிகள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாய் புடவைகள். மனிதனுடைய கண்டுபிடிப்பில் அவன் நாகரீகத்தை பறையறிவிக்கும் விஷயம் உடுப்பு. நான் உடுத்திக் கொள்ளுவது வெள்ளை என்றாலும் மனைவியருக்கும், மற்ற தோழியருக்கும் நான் புடவைகள் எடுப்பதில் வல்லவன். அம்மா என்கிற பொழுது எனக்கு அவள் புடவைதான் ஞாபகம்  வரும். பெண்களுக்கு புடவை பரிசளிப்பதை நான் ஒரு முக்கியமான விஷயமாக  கருதுகிறேன். நூறு புடவைகள் பரிசளித்தாலும் அடுத்து அந்தப் புடவை நன்றாக இருக்கிறது என்று நூற்றியொன்றை கை காட்டுகிற பெண்களின் குணம் எனக்கு சிரிப்பையும், மகிழ்ச்சியையும் தரும்.

6. என் மகளின் பாட்டு. அவளின் தெய்வீகக் குரல். என் மகனின் கதை சொல்லல். அதில் உண்டான அவன் தெளிவு. என்னைவிட என் மகன் தீர்க்கமான சிந்தனையாளர். அவர்கள் இருவரும் அவர்கள் துணையோடு செய்கின்ற குடித்தன பாங்கு. பேரர்களின் அட்டகாசம்.

7. கமல்ஹாசன். குறைகள் உள்ளவர்தான். முன்கோபிதான். ஆனாலும் கலை வியூக்தி என்கிறபோது கூர்மையான மனிதராக மாறிவிடுகிறார். இன்னும் இன்னும் என்ன சொல்வது என்று இடையறாது தவிக்கிறார்.இயல், இசை, நாட்டியம், பழங்கதைகள், சிற்பம், சரித்திரம் என்று பலதிலும் சினிமா என்ற ஒரே ஒரு விஷயத்துக்காக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் முனைப்பு எனக்கு பிடித்த விஷயம்.

8. காவிரி நதி பாயும் சோழ தேசம். முன்பிருந்த அந்த வளமை இப்பொழுது இல்லையாயினும் மறுபடியும் துளிர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆட்சி மாறும் போதும் காட்சியும் மாறும். சோழ மக்களின் சுறுசுறுப்பு. விரைவு நடை. பெண்கள் பேச்சு. கேலி சிரிப்பு. மண்ணில் சோழ மன்னர்கள் கட்டிய நூற்றுக்கணக்கான கற்றளிகள். அங்கிருக்கும் உயிர் ததும்பும் சிற்பங்கள். மனித நாகரீகம் உச்சம் தொட்ட இடம் சோழ தேசம். அது என் தேசம்.

குதிரைகள் எனக்குப் பிடிக்கும். வலிமையே குதிரை வேகம். அது படுத்து தூங்காத மிருகம். கொம்போ, விஷப்பற்களோ, சிறகோ, கூரிய அலகோ இல்லை. நகம் கூட இல்லை. வேகமும், சமாதானமும் கொண்ட மிருகம் குதிரை என்பது என் அபிப்ராயம். உழைக்கத் தயாராக இருக்கிற துடிப்பு. அது என்னுள்ளும் இருக்கிறது.

9. மகாகவி சுப்ரமண்ய பாரதி. இதுவரை படிக்க படிக்க பிரம்மிப்பாய், புதிது புதிதாய் தோன்றுகிறது. பாரதியை  மையமாக வைத்து அந்த காலத்து வாழ்வு முறையை ஓர் இளைஞன் மூலம் சொல்லுகின்ற நாவல் எழுதப்பட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. முடியுமா? என்ற பயமும் உண்டு. ஆயினும் பாரதியை நான் இன்னும் முழுக்க அறிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இன்னும் மீதமிருப்பதாகவே தோன்றுகிறது. பாரதி தமிழின் அடையாளம்.

10. தியானம். மிகத் துல்லியமாய் செய்தால் இது மரணம் போன்றது. ஆனால் பயமுறுத்தாது. ஓர் அனுபவம் தரும். ஒரு மரண பயம் தானாகப் போகும் என்பதை அந்த நேரம் அறிய முடியும். இங்கிருந்துதான் வாழ்க்கை துவங்குகிறது. நாலாபக்கமும் அலைகிறது. வாழ்வின் மையப்புள்ளி இது. ஒரு சலனத்தின் ஆரம்பம் இது. மனிதர் மட்டுமல்ல. உலகமே உள்ளிழுக்கப்பட்ட தியானத்தில் அடங்கும் காலம் உண்டு. அது பிரளயம் என்று பெயர். அந்த பிரளயம் ஒரு தனி மனிதனின் உள்ளுக்குள் நிகழப்பட வேண்டும். அதற்குப் பெயர்தான் தியானம். அதற்குப் பின் வரும் அமைதிதான் முக்தி. நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

அண்மையில் ஒரு விடியோவில் இதுவரை தனக்கு மன அழுத்தமே ஏற்பட்டத்தில்லை என ஸ்ட்ரெஸ் பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

நன்றி : நலம் / யூட்யூப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com