அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி சென்னை பெண்! ஷெபானி மந்தாகினி பாஸ்கர் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

அமெரிக்க  பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி  ஒரு இந்திய பெண். அதுவும் சென்னையில் படித்தவர்.
அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி சென்னை பெண்! ஷெபானி மந்தாகினி பாஸ்கர் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

அமெரிக்க  பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி  ஒரு இந்திய பெண். அதுவும் சென்னையில் படித்தவர். தமிழ்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்றவர்.  அவர்தான்  இருபத்தி மூன்று  வயது,  ஷெபானி மந்தாகினி பாஸ்கர்.   

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி 2011 -இல் பங்களாதேஷில் நடந்தது. களத்தில் அமெரிக்க அணி,  தொடர்ந்து தோல்விகளை  தழுவியது. இருந்தாலும் அதிசயமாக  அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. அமெரிக்க பெண்கள் அணி தோற்கடித்தது ஜிம்பாப்வே அணியை. இந்த ஆட்டத்தில்  சிறந்த  கிரிக்கெட்  வீராங்கனைக்கான விருது  பதினேழு வயதான ஷெபானிக்கு  கிடைத்தது. ஷெபானி சொல்கிறார்:

'ஜிம்ப்பாவே அணி  ஏழு பந்துகளில்  இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும். நான் பந்து வீச்சாளர். தொடர் தோல்வியிலிருந்து எனது அணியைக் காக்க அந்தப் பந்து வீச்சை  முழு  வேகத்துடன்  வீசினேன்.  எனது பந்து ஸ்டம்பை சாய்த்தது. ஜிம்ப்பாவே அணி  ஒரு  ரன்  வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இந்தப் பந்து வீச்சால்  நான் பலரின் கவனங்களைக் கவர்ந்தேன். எனது அணிக்கும் என் மேல் நம்பிக்கை உருவானது. தொடர்ந்து அமெரிக்க அணிக்காக ஆடி வந்தேன். இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்குத்  தலைவியாகியுள்ளேன். 

நான் பிறந்தது  அமெரிக்காவின் சிகாகோ நகரில் என்றாலும்  பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் படித்தேன். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் அன்னையார் நடத்தி வரும் பாலர் பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.  அடுத்தடுத்து பள்ளி படிப்பு பல நாடுகளில் தொடர்ந்தது. நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய போது எனக்கு வயது பதினொன்று. கொல்கத்தாவில் நாங்கள் 2005 -இல் வசித்தோம்.  அங்கே பதினாறு வயதுக்கு கீழ் பிரிவில் கிரிக்கெட் மேற்கு வங்க அணிக்காக  இடம் பெற்று ஆடினேன்.   2007 - இல் மும்பைக்கு   மாறினோம்.  மும்பையில் பல மைதானங்களில்

கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. 2008-இல் சென்னைக்குப் பயணமானேன். தமிழ்நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணியிலும் சேர்ந்து விளையாடி இருக்கிறேன். சென்னை பல்கலைக்கழக பெண்கள் கிரிக்கெட் அணி,  நான் படித்து வந்த எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி கிரிக்கெட் அணிக்கும் நான்கு ஆண்டுகள் தலைவியாக விளையாடியிருக்கிறேன். இந்திய தேசிய அணியில் இடம் பெற வேண்டுமானால் இந்திய பாஸ்போர்ட் இருக்க வேண்டும். என்னிடம் அமெரிக்கப் பாஸ்போர்ட் இருப்பதால் இந்திய தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர இயலவில்லை. ஆனால் அமெரிக்க பெண்கள் அணியில் இணையும்  வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் பதினேழு வயதில் பங்குபெறத்  தொடங்கினேன். 

வரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸில்  உலகக் கோப்பைக்கான  பெண்கள் கிரிக்கெட்  போட்டி நடக்கப் போகிறது. அதில் அமெரிக்க  பெண்கள் அணி பங்கு பெற இயலவில்லை. அடுத்து 2020 உலகக்  கோப்பைக்கான போட்டியில் அமெரிக்க  பெண்கள் அணியைப் பங்கு பெற வைக்க வேண்டும்  என்பதுதான் என் லட்சியம். அமெரிக்க அணியில் பங்கு பெற்றிருக்கும் பெண் வீராங்கனைகள் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்  நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பவர்கள்தான்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வலிமையுள்ள அணியாக மாறியுள்ளது. சமீபகால விளையாட்டுகளில் இந்திய பெண்கள் அணி  மிகச் சிறப்பாக ஆகியுள்ளது. உலகின் சிறந்த மூன்று அணிகளில்  ஒரு அணியாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உயர்ந்துள்ளது. கிரிக்கெட் தவிர கோல்ஃப், கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளிலும் விருப்பம் அதிகம். விளையாடியுமுள்ளேன்' என்கிறார்  ஷெபாணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com