நீங்கள் அண்மையில் போட்ட கோலத்தின் புள்ளிகள் நினைவில் உள்ளதா?

மற்ற தினங்களில் எப்படியோ மார்கழி மாதத்திலும், அதைத் தொடர்ந்து புத்தாண்டு
நீங்கள் அண்மையில் போட்ட கோலத்தின் புள்ளிகள் நினைவில் உள்ளதா?

மற்ற தினங்களில் எப்படியோ மார்கழி மாதத்திலும், அதைத் தொடர்ந்து புத்தாண்டு பொங்கல் தினங்களில் மனம் பழைய விஷயங்கள் சிலவற்றை அசை போட ஆரம்பித்துவிடும். நான் பிறந்த தொண்ணூறுகளில் கூட தெருக்களில் பெண்கள் கோலம் போடும் காட்சியைப் பார்க்க முடிந்தது. ஆனால் இன்றைய சுருங்கிவிட்ட வாழ்நிலை சூழலில் பண்டிகை தினங்களில் மட்டும் ஓரளவு பெரிய கோலங்களைப் போட்டுக் கொண்டிருந்த பெண்கள், சமீப காலமாக அதிலும் சிரத்தை காட்டுவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசனை குறைவாக சில கோலங்கள் தென்படுவதுண்டு. மிகச் சிலரே ரசித்து அழகியலுடன் ஆத்மார்த்தமாக கோலம் போட்டுள்ளதை காண முடிந்தது. அவர்களில் பெரும்பாலும் முந்தைய தலைமுறையினர் என்பது சர்வ நிச்சயம்.

முன்பெல்லாம் பல வீட்டு வாசல்களில் பெரிய கோலங்களும், வண்ணங்களும் நிறைந்து அத்தெருவே மங்களகரமாக இருக்கும். யார் போட்ட கோலம் மிகவும் அழகாக உள்ளது என்ற அறிவிக்கப்படாத போட்டி பல இல்லத்தரசிகளிடையே நிகழும். வாசலிலே பூசணிப்பூ வைச்சுப்புட்டா வைசுப்புட்டா போன்ற பாடல்களை மனத்துக்குள் பாடியபடி தனது நேசத்துக்குரியவள் கோலத்தில் தனக்கு வைத்துள்ள குறுஞ்செய்தி என்னவென்று கண்டடைய இளைஞர்கள் அத்தெருக்களில் கோலங்களை வெறித்தபடி அலைந்து திரிவார்கள். கடைசி வரை விஷ் யூ ஹாப்பி பொங்கல் என்ற வரியைத் தவிர வேறொன்றையும அவர்கள் கண்டடைவதில்லை என்பது வேறு விஷயம். நகை முரண்களைத் தவிர்த்து யோசித்துப் பார்த்தால் பண்டிகைகள் அதன் உற்சாகங்களை பெருவாரியாக இழந்துவருவதை கண்கூடாக காணலாம். அதிலொன்றுதான் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் கோலங்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் எதையெல்லாம் கற்றுக் கொடுத்துள்ளோம் என்று யோசித்தால் இந்த தலைமுறை ஒரு அரைவேக்காடு நிலையில் இருப்பது புரியும்.

காரணம் பொங்கலை இந்துத் திருவிழா என்று குறுக்கிவிடுகின்ற மனநிலையை சமீபத்தில் காண முடிகிறது. அது தமிழர் திருவிழாவாக இருப்பதால் தான் இத்தனை ஆண்டு காலம் தாண்டியும் அந்த பாரம்பரியம் மாறாமல் உள்ளது.  இத்திருழா ஒரு நன்றி அறிவித்தல் விழாவாகும். சூரியனை, உழவர்களை, இப்புவியை நம்மை வாழ வைக்கும் இயற்கை என எல்லாவற்றுகும் நாம் நன்றி தெரிவிக்கும் விதமாக் அமைக்கப்பட்டது இத்திருவிழா. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உழவர்களைப் பொருத்தவரை சத்தியமான உண்மை. பருவநிலை உகந்ததாக இருக்கும் இக்காலகட்டத்தில் அவர்கள் தங்களுக்கு விருப்பான பயிரை விதைப்பார்கள். எல்லாமே விஞ்ஞானபூர்வமாக நம் ஆதி மக்களால் துல்லியமாக கடைபிடிக்கப் பட்டுவந்தது. இத்தகைய கொண்டாட்டங்களை விரும்பி, இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர். கொண்டாட்டத்தை மட்டுமல்லாமல் கொள்கைகளையும் அவர்களுக்கு நாம்தான் விதைக்க வேண்டும். முந்தைய தலைமுறையினர் வாசலில் கோலம் போட்டனர், நவீன யுவதிகள் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் போடுகிறார்கள். அல்லது ஃப்ளாட் வாசலில் போட்ட கோலத்தை ஒரு ஸ்னாப் ஷாட் எடுத்து பட்டி டிங்கரிங் வேலைகள் எடிட்டிங் செய்து சமூக வலைத்தளங்களில் உலவ விடுகின்றனர். நேரம் இன்மையும் அவசர யுகமும் தான் இதற்குக் காரணம். நம் ரசனைக்கு ஏற்றபடி நம் வாழ்வியலை அமைத்துக் கொள்ள என்ன தடை? கோலம் ரசனை சார்ந்த விஷயம். 

இன்னும் எத்தனை காலம் தான் பெண்களை கோலம், சமையல் என்று வீட்டுக்குள் முடக்கப் பார்க்கிறீர்கள் என தவறாக புரிந்து கொண்டவர்கள் உள்ளனர். கோலம் போடுவதும், சமைப்பதும், வீட்டு வேலைகள் செய்வதும் பெண் அடிமைத்தனம் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை மறக்க வேண்டாம். அது நம்முடைய வீட்டு வேலை நம்முடைய வாழ்தலுக்கான வேலைகள்தானே? முந்தைய தலைமுறையில் சமையல் அறையிலேயே முடக்கப்பட்ட பெண்கள் இருந்தனர் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக நம்முடைய குடும்பப் பொறுப்புக்களைத் துறப்பது பெண் சுதந்திரம் ஆகாது. நம்முடைய வீட்டை அழகியலுடன் பராமரிப்பதும், நமது குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு தயாரிப்பதும் அன்பு சார்ந்த விஷயம். கணவன், மகன், மகள் என்று வீட்டில் உள்ள அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்தால் எவ்வித சிரமும் இருக்காது. ஒருவர் தலைமீதே ஒட்டுமொத்த குடும்பமும் பாரம் வைத்தால்தான் அங்கே பிரச்னை தொடங்குகிறது. 

தற்போதுள்ள ந்யூக்ளியர் குடும்ப முறையில், வேலைக்குச் செல்லும் இளம் பெண்களுக்கு நேரம் என்பதே குதிரைக்கொம்புதான். பொங்கலுக்கு என்ன கோலம் போட்டீர்கள் என்று தோழிகள் சிலரிடம் கேட்டபோது அதிர்ச்சியான பதில்தான் வந்தது. சின்னதா ஒரு ஸ்டார் கோலம், மீடியம் சைஸ் ரங்கோலி போட்டு கலர்  அடித்துவிட்டோம், குழந்தைகள் தான் ஏதோ போட்டார்கள், எங்கள் வீட்டில்  வேலை செய்யும் பெண் போட்ட கோலம் பிரமாதம் அதை போட்டோ எடுத்து அனுப்பறேன்...இப்படியான பதில்களே வந்தன. இவர்கள் எல்லாம் என்னுடன் படித்தவர்கள் என்னுடன் வளர்ந்தவர்கள். (நான் மட்டுமென்ன பெரிய கோலங்கள் போடத் தெரிந்தும், விதவிதமான ரங்கோலிகளை கல்லூரி நாட்களில் போட்டுக் கலக்கியவள் என்றாலும அவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தாமரைக் கோலத்தை வட்ட வட்டமாக நிரப்பி கலர் அடித்திதுக் கொண்டிருக்கிறேன்). ஒரு பக்கம் பத்திரிகையாளராக இருந்தாலும், விஞ்ஞானியாக இருந்தாலும், ஐடியில் பணிபுரிந்தாலும், நம் வாழ்க்கை என்பது வீட்டிலிருந்து தானே துவங்குகிறது. குடும்பம் என்ற ஒரு அமைப்புக்குள் சென்றுவிட்டால் அது கோரும் கடமைகளை கட்டாயம் செய்தே தீர வேண்டும். மேலும் கோலம் போடுவது, வீட்டு வேலைகள் செய்வது எல்லாம் ஒருவித உடல் மற்றும் மனப் பயிற்சி. காலையில் கோலம் போடுவது சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும்.

சரி கோலம்தான் போடவில்லை பொங்கலாவது பொங்கினீர்களா என்று கேட்டதற்கு, அதெல்லாம் சூப்பரா செஞ்சுட்டோம். இன்னிக்கு ஹோட்டல்களுக்கு லீவ்.. வேறு வழி இல்லாம குக் பண்ணோம் என்று சொல்லியவர்களும் உண்டு. இன்றைய பெண்கள் பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதும், உணவுக் கடைகளுக்கு சென்று சாப்பிடுவதையுமே விரும்புகிறார்கள். அல்லது பாதி சமையல் செய்தபின், மீதியை ஆர்டர் செய்துவிடுகிறார்கள். இது சுலபம் தானே எதற்குச் சமையல் செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் பதிலாகச் சொல்ல ஒன்றுதான் உள்ளது. யாராவது விலை கொடுத்து வியாதியை வாங்குவார்களா? இந்தத் தலைமுறையினர் தான் அப்படிச் செய்யத் துணிகிறார்கள். வேலைக்காரன் படம் இதைத் தான் கருப்பொருளாகச் சொல்கிறது. சூப்பர் சைஸ் மீ என்ற ஆங்கில ஆவணப்படமும் உரைப்பது இதுதான். ஆன்லைன் உணவுகளில் உள்ள விஷத்தன்மையால் செரிமானப் பிரச்னைகள் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வித்திடும் என்று அபாய எச்சரிக்கை விடுக்கிறது. நம்முடைய தயாரிப்பில் செய்த உணவுகளுக்கு ருசி மட்டுமல்லாமல் சத்தும் ஆரோக்கியமும் அதிகம் இருக்கும் என்ற உண்மையை உணர வேண்டும். 

தமிழரின் பெருமை உலகறிந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழராகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? மேற்குலகை காப்பி அடிப்பதும், வெட்டிப் பெருமை பேசிக் கொண்டும் காலம் கடத்துகிறோம். நமது தொன்மையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுத்து நமக்கான முன்னோர்கள் ஏற்படுத்திவைத்துப் போன அடையாளத்தை காப்பாற்றுவோம். நம்மால் அத்தகைய அடையாளம் எதுவொன்றையும் உருவாக்க முடியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை உள்ளதை மாற்றாமல் அதை அப்படியே அதன் நிறம் குணம் பண்போடு அடுத்த
தலைமுறையினருக்கு கடத்துவோம். அதுவே நாம் செய்யவேண்டிய முக்கியமான பங்களிப்பு. அண்மையில் தினமணி டாட் காம் கோலப்போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மகிழ்வளிக்கும் ஒரு விஷயம். பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தானே. கோலம் போட்டு மகிழ்வோம். வாருங்கள் தோழியரே! மேலதிக விபரங்களுக்கு  https://goo.gl/zAm39r

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com