பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல!? சுவாரஸ்யப் பதிவு

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்
பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல!? சுவாரஸ்யப் பதிவு

வலைதளத்திலிருந்து...

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது சொலவடை. மாங்காய் எல்லா நேரத்திலும் கிடைக்குமா என்ன? மனிதனின் தீனிக் கண்டுபிடிப்பில் ஆகச் சிறந்தது பக்கோடா.

பக்கோடாவில் முந்திரிப்பருப்பு பக்கோடா, வேர்க்கடலை பக்கோடா, பனீர் பக்கோடா, காலி ஃப்ளவர் பக்கோடா என்று பல இருந்தாலும் மேட்டுக்குடி மனிதரிலிருந்து டாஸ்மாக் குடிமகன் வரை காற்றில் மிதந்து வரும் வெங்காயப் பக்கோடா மணத்துக்கு வாயில் வெள்ளம் பொங்காத மனித ஜந்து எதுவுமே இருக்க முடியாது.

பக்கோடா என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமலிருந்தால் தானே சமைக்கிறேன் என்ற பெயரில் வைக்கும் கலர் தண்ணீர் சோற்றை பேச்சிலர்கள் தின்றிருக்க முடியுமா?

ஏசி ரூமில் உட்கார்ந்து அள்ளிச் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய பின் விளைவுக்கு பயந்து கொறிப்பது முந்திரிப் பக்கோடாவாக இருக்கலாம். ஆனால் அது முழுமையான பக்கோடா ஆக முடியாது. தனியாகச் சாப்பிட்டாலும் பக்கோடாவாகச் சாப்பிட்டாலும் கடைசி கடலை சொத்தையாகவே அமைவது ஏன் என்பது எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியம் என்பதால்... சரக்கு கசப்பா சைட் டிஷ் கசப்பா என்றறிய முடியாத போதத்திலிருப்பவர்களுக்கான வேர்க்கடலைப் பக்கோடாவையும் பக்கோடா என்றேற்பதற்கில்லை.

'பல்லிருக்கவன் பகோடா திங்கான்' என்று தனக்காக ஒரு பழமொழியையே கொண்ட ஒரே தின்பண்டம் பக்கோடாதான்.

நன்றி - paamaranpakkangal

முக நூலிலிருந்து....
* என்ன படிக்கலாம்?
எங்கு படிக்கலாம்?
என்ன சாப்பிடலாம்? 
எங்கு சாப்பிடலாம்?
என்ன பார்க்கலாம்?
எங்கு போகலாம்?
எப்படிப் போகலாம்?
ஏராளம் வழிகாட்டிகள்...
ஆனால்
சொல்வது போல்
சுலபமில்லை...
வாழ்க்கை.
- துரை பாரதி

* பேருந்துக்கு வெளியே
பெய்த மழையை
ரசிக்கும் போதுதான்...
உள்ளிருந்து
தலைமேல் விழுந்த மழைக் கொத்து 
கணநேர பதட்டத்தை ஏற்படுத்தியது.
- நேசமிகு ராஜகுமாரன்

* நீ இழுக்கும் 
கோடுகளை வைத்துதான்... 
என்னால் முடிவு செய்ய இயலும்
உன் கைகளின் நீளத்தை!
- மானா பாஸ்கரன்

* கோணலோ திருகலோ,
திசைகளெங்கும் 
நிழல் பரப்பவே 
மரங்களின் விருப்பம்....
உத்திரம் பற்றிய
கனவிலிருக்கிற நாம்தான்...
கிளைகளைத் தரித்து
உச்சியில் ஒண்டியாய் உலவவிட்டு
வேடிக்கை பார்க்கிறோம்.
- கண்மணி குணசேகரன்

சுட்டுரையிலிருந்து...
* அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற
ஏடிஎம் மெஷின்ல
Select Language-ல English-னு
செலெக்ட் பண்ற நாமதான், 
"எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்'னு
சண்டை போடுறோம்.
- ஆர்.செந்தில்குமார்

* பக்கத்தில் நீ இருந்தால்...
பக்க விளைவுகள் 
அதிகம் வருகிறது.
பக்கத்தில் நீ இல்லையெனில்...
பக்கம்பக்கமாய் 
கவிதைகள் வருகிறது. 
- சூர்(ப்)பனகை

* பெருமரங்களையெல்லாம்...
வேரோடு சாய்த்ததாய்
கர்வப்பட்ட புயலின்
தோல்விக்கு...
தப்பிப் பிழைத்த புல்லே
சாட்சி. 
- ராஜி

* சாலை நெடுந்தூரம் 
வளைந்து நெளிந்து போனாலும்...
குழிகள் இல்லாமல் 
இருந்தால் தான் மதிப்பு.
- சோழநாட்டு விவசாயி

* பிரிவதை விட கடினமானது... மறக்க வேண்டும் என்பது.
மரத்தை வெட்டிய பின், வேர்களை அகற்றுவது போல.
- அனுபிரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com