ஒரு கதை சொல்றேன், கேளுங்க!

மகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள், படைகள் என எல்லாம் உண்டு.
ஒரு கதை சொல்றேன், கேளுங்க!

மகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள், படைகள் என எல்லாம் உண்டு. மனைவியர், மகிழ்ச்சியூட்ட விதூசகர்கள் எனவும் இருந்தனர். 

மந்திரிகள், ஆலோசகர்கள் மன்னர் வாயை திறக்கும் முன் பதில் ரெடியாக வைத்திருப்பார்கள். அதேபோன்று படையினரும், வெற்றி மேல் வெற்றியை கொண்டு வந்தனர். இவ்வளவு வசதிகள் இருந்தும் மன்னர் ஏனோ துக்கமாக காட்சி தந்தார்.

இது ராணிக்கு பொறுக்கவில்லை. 'மன்னனை, ஏதாவது ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று, அவர் ஆலோசனையை பெற்று, அதன்படி அவரை மகிழ்விக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என மந்திரியிடம் கூறினார்.

மந்திரிக்கு, ஒரு புதுசாமியார். ஊருக்கு வெளியே முகாமிட்டிருப்பது தெரியும். 
அவரிடம் மன்னரை அழைத்துச் சென்று, ஆலோசனை பெறத் தீர்மானித்தார். மன்னரும் அதற்கு சம்மதித்தார்.

சாமியாரிடம், மன்னரும் மந்திரியும் சென்றனர்.

மன்னனின் துக்க மனதை கூறி, 'அவரை மகிழ்விக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்' என்றார் மந்திரி.

'ஊரிலேயே மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு பிடித்து அழைத்து வந்து காரணம் கேட்டு, அதனை மன்னரிடம் கூறுங்கள். மனம் மாறிவிடுவார்'' என்றார் சாமியார்.

இதனால் அடுத்த நாளிலிருந்து மகிழ்ச்சியோடு இருப்பவனை தேடி அலைந்தது மன்னரின் படை.

மகிழ்ச்சியாய் இருப்பதாக தெரிந்து அருகில் நெருங்கினால், என் கவலைகளை மறக்க சிரிக்கிறேன். மற்றபடி மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி நழுவி விடுவர் பலர்.

இந்த நிலையில் ஒரு குளத்தில் தண்ணீரில் எருமை மாட்டின் மீது அமர்ந்து ஒருவன் பாடிக் கொண்டிருந்தான். அவன் மகிழ்ச்சியில் இருந்தான்.

இதனால் மந்திரியின் ஆலோசகர் அவனை நெருங்கி, 'மகிழ்ச்சியாக இருக்கிறாயே.. எப்படி?'  எனக் கேட்டார்.

'என்னிடம் இருப்பது இந்த ஒரு எருமை மாடுதான். இதற்கு தீவனம் வைக்கிறேன்.

நன்றாக பால் கறக்கிறது. தினமும் குளிப்பாட்டி, நானும் குளிப்பேன்' என்றான்.

'இதில் எப்படி மகிழ்ச்சி வந்தது?'

'இது பால் கறப்பதால் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும், அதனால் இந்த வருமானம் போதுமென்று நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்'

'ஆக , போதுமென்ற மனமே மகிழ்ச்சியை தரும் என்கிறாய்'

'நிச்சயம். போதும் என எண்ணுபவர்களுக்கு துக்கமில்லை'

'நல்லது' என்று விடை பெற்ற மந்திரியின் ஆலோசகர்.

அடுத்தநாள், அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.

மன்னர், வந்தவனிடம் பேசினார்.

'நீ ஏன் மாடு மேய்த்து கஷ்டப்படுகிறாய், என் மகளை தருகிறேன். பொன்னும், பொருளும் தருகிறேன். அதை வைத்து நிம்மதியாக வாழ்வாயாக' என்றார். 
'மன்னிக்கணும் மாட்டை மேய்ப்பதை விட, மனைவியை மேய்ப்பது கஷ்டம்'

'சுகமாக வைத்துக் கொள்ள கஷ்டம் என்றுதானே கூறுகிறாய். மேலும், 10000 பொற்காசுகள் தருகிறேன்.

மேலும் பல எருமை மாடுகளை வாங்கி பண்ணை போல் நடத்தேன்'

'அதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கவில்லை'

'பிறகு நீ என்னதான் விரும்புகிறாய்'

'மன்னருக்கு, நாடுகள், சொத்துகள் ஆசையால் திருப்தி இருக்காது. அதனால்...'

'அதனால்...'

'என்னைப் போல், இருப்பதே போதும் என வாழ வேண்டும்'

'வாழ்ந்தால்'

'உங்கள் துக்கம் மறைந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்'

'நான் அப்படி நடப்பதால் உனக்கு என்ன மகிழ்ச்சி'

'மன்னர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்'

'ஆக, நாங்கள் மகிழ்ச்சியாக கிடைத்த வாழ்வை, நிம்மதியாக தொடர...'

'தொடர...'

'மன்னரும் போதுமென்ற மனநிலையுடன் வாழ வேண்டும்'

'சபாஷ், என்னை சுற்றி இருப்பவர்கள் நான் கூறுவதற்கு எல்லாம் ஆமாம் போடுபவர்கள். ஆனால் நீ, நான் கொடுத்த எதையும் மறுத்து, இருப்பதே போதும் என்பதுடன் என்னையும் மாற்றிவிட்டாய்' என முடித்தார் மன்னர்.

ராணியோ, மன்னனின் மனதை மாற்றியதற்கு நன்றியாக, மணிமாலையை எடுத்து, எருமை சொந்தக்காரனிடம் கொடுத்து, 'இதை என் அன்பளிப்பாக, உன் மனைவியிடம் கொடு' என்றார்.

எருமை சொந்தக்காரனும், தப்பித்தோம். பிழைத்தோம் என ஒட்டமும், நடையுமாய் அரண்மனையை விட்டு வெளியேறினான்.
- ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com