நட்பால் உயர்வோம்!

சான்பிரான்சிஸ்கோவில் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் ஆலோசனை வழங்க அமைப்புகள் இருக்கின்றன. அதற்கு நட்புக்கோடு (Friendship line) என்று பெயர். அந்த எண்ணில் தொலைபேசி செய்து ஆலோசனைகள் பெறலாம். 
நட்பால் உயர்வோம்!

கல்லூரியிலோ, அலுவலகத்திலோ எப்போதும் சோர்வுடன் இருப்பவர்களை உற்றுக் கவனித்தால் அவர்களுக்கு நண்பர்களே இல்லை என்பது தெரியும். அவர்களால் பிரச்னைகளை வெளியே சொல்லவோ, அவற்றிற்குத் தீர்வு தேடவோ முடியாமல் போய்விடும். 

எல்லா உறவுகளின் உச்சமும் நட்புதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை மிகவும் அன்புடன் நடந்தால், என் தந்தை நண்பரைப்போல. அவரிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கூறுகிற இளைஞர்களைப் பார்க்கலாம். உடன்பிறந்தவர்கள் இருவர் நண்பர்களைப் போலப் பழகுவதைக் காணலாம்.

சில வீடுகளில் பெண்களிடம் அனைத்தையும் கொட்டித் தீர்க்கிற அம்மாக்கள் உண்டு. எனக்குத் தெரிந்த வீட்டில் மருமகளும், மாமியாரும் தோழிகளைப் போலப் பழகுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருவர் மிகவும் நெருக்கமாக இருந்தால் அவரை நண்பர் என்று அழைப்பதே நாம் அளிக்கிற மிகப் பெரிய கவுரமாக இருக்கும். 

நட்புக்காக உயிரைக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். தமிழில் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் இருவரும் பார்க்காமலேயே உயிருக்குயிராய் இருந்தவர்கள். அந்தக் கருவே "காதல்கோட்டை' திரைப்படத்தின் முடிச்சு. 

நண்பனின் உயர்வில் மகிழ்கிறவர்கள் மட்டுமே எப்போதும் துணையாக இருக்க முடியும். பொறாமையற்ற உள்ளமும், போட்டியற்ற மனமும், பெருந்தன்மையான குணமும், பூரித்துப் போகும் சுபாவமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அப்படிப்பட்ட நண்பர்களை எல்லா இடங்களிலும் சிலர் பெறுகிறார்கள். அவர்களே உண்மையான செல்வந்தர்கள். 

பொதுவாக வணிகமயமாக நட்பு இருப்பதைப் பார்க்கிறோம். நாம் ஒன்று செய்தால் அவர்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி நட்பு பாராட்டினால் அது உண்மையான தோழமையாக இருக்க முடியாது. 

ரோமாபுரியில் ஹாட்ரியன் என்கிற மன்னர் இருந்தார். மிகச் சிறந்த மன்னரான அவர் எல்லையைப் பாதுகாக்க உயரமான சுவர் ஒன்றைக் கட்டினார். சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் என்று நாட்டின் கட்டமைப்புகளை வலிமைப்படுத்தினார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இரண்டு விரிவான திக்விஜயங்களை மேற்கொண்டார். கி.பி. 123-ஆம் ஆண்டு பயணம் செய்யும்போது ஒல்லியாக, மனநிலை மாறும் ஒரு சிறுவனைச் சந்தித்தார். அவன் பெயர் ஆண்டினஸ். அடுத்த ஏழு ஆண்டுகள் இணை பிரியாமல் இருவரும் இருந்தார்கள். அவர்கள் எகிப்தில் இருக்கும்போது, அந்தச் சிறுவன் நைல் நதியில் மர்மமான சூழலில் மூழ்கிப் போனான். 

பலர் மன்னருடன் அவனுக்கிருந்த நெருக்கத்தினால் யாரோ பொறாமை கொண்டு கொன்றிருப்பார்கள் என நினைத்தார்கள். இன்னும் சிலரோ மன்னருக்கு வெற்றியே கிடைக்க வேண்டும் என அவன் பலி கொடுத்துக் கொண்டதாகக் கருதினார்கள். 

மன்னரோ அம்மரணத்தால் மனமுடைந்தார். எண்ணற்ற உயிர்களைப் போரில் வீழ்த்தி ரத்தக் காட்சிகளைக் கண்ணெதிரே பார்த்திருந்தாலும், உயிருக்கு உயிராக நேசித்த நண்பன் இழப்பை ஏற்றுக்கொள்வது மன்னர்களுக்கும் கடினம். ஆண்டினசை தேவனாக அறிவித்து அவன் பெயரில் ஆண்டினோபோலிஸ் என்கிற நகரத்தைத் தோற்றுவித்தார். ஆண்டுதோறும் அவன் நினைவாக சிறப்பு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அங்கு அவனையொட்டிய மரபு பரவ ஆரம்பித்தது. அவன் வடிவத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிலைகள் இன்றும் இருக்கின்றன. 

மன்னர் ஹாட்ரியன் நண்பனின் பிரிவைத் தாங்க முடியாமல் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றான். அடிமையிடம் தன்னைக் கொல்லும்படி வாளைத் தந்தார். அடிமையோ ஓடிவிட்டான். மருத்துவரிடம் நஞ்சு செலுத்தும்படி வேண்டினார். பிறகு தானே குத்திக்கொள்ள முயன்றார். மெய்க்காப்பாளர்கள் தடுத்துவிட்டார்கள். இப்படி பல முறை முயன்ற அவர்  விவரம் தெரியாத சூழலில் உயிர் நீத்தார்.  நட்புக்காக தன்னையே அழிக்கிற ஒரு சிலர் இருந்தாலும் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுவது நட்பு மட்டுமே. 

மனவியல்ரீதியாக யார் வாழ்க்கையை முடித்துக் கொள்வது என முடிவு செய்கிறார்களோ, அவர்கள் நெருங்கிய நண்பர்களையும் விலக்க ஆரம்பித்து
விடுவார்கள். அல்லது நண்பர்களே வெறுக்குமளவு நடந்து கொள்வார்கள். இதையே ஓர் அறிகுறியாகக் கருதி அவர்களை மீட்க வேண்டியது நம் கடமை. 

நட்பு பாராட்டுவது பல நேரங்களில் வழிவழியாக வருகிறது. பெற்றோர்கள் நிறைய நண்பர்களைப் பெற்றிருந்தால், குழந்தைகளும் நண்பர்களைச் சம்பாதிக்க முனைவார்கள். அடிக்கடி வீட்டிற்கு நண்பர்கள் வருவதும், அவர்களை உபசரிப்பதும் மறைமுகமாக குழந்தைகளுக்கு நட்பைப் பற்றி புரிய வைக்கிறது. தேர்வுக்குப் படிப்பதே முக்கியம் என்று நண்பர்கள் வீட்டுத் திருமணத்திற்கோ, சொந்தக்காரர்கள் வீட்டு விசேஷங்களுக்கோ அழைத்துச் செல்லாமல் இருந்தால் பழகுகிற தன்மையையே அவர்கள் இழந்துவிடுவார்கள். 

பெருந்தன்மை பிறவியில் வர வேண்டும் எனப் பெரியவர்கள் சொன்னாலும், அதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. கஞ்சர்களாக இருக்கிற பெற்றோர்களின் பிள்ளைகள் படுகஞ்சர்களாக இருப்பதைப் பார்க்கலாம். வருகிறவர்களுக்கெல்லாம் குறைந்தது தேநீராவது கொடுத்து அனுப்ப வேண்டும் என்கிற மரபைக் கடைப்பிடிப்பவர்களின் வாரிசுகளுக்கு அது மனத்தில் பதிந்துவிடுகிறது. கிராமங்களில், முன்கை நீண்டால்தான் முழங்கை நீளும் என்று சொல்வார்கள். நாம் பெருந்தன்மையாக இருந்தால் மட்டுமே நல்ல நண்பர்கள் வாய்ப்பார்கள்.

பெற்றோர்கள் அவர்களாகவே போட்டி யுகம் ஒன்றை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அதில் அவர்களுடைய குழந்தைக்கு அகில உலகமே எதிராக இருப்பதைப் போலக் கற்பனை செய்துகொள்கிறார்கள். வாழ்க்கையை மல்யுத்தமாகக் கருதுகிறவர்கள் சகல நேரமும் கையுறை மாட்டிக்கொண்டு கஷ்டப்பட வேண்டியதுதான்.

இந்த சுயநலப் பெற்றோர்கள், அவர்கள் குழந்தைகளிடம், "உன் நோட்டுப் புத்தகத்தை யாருக்கும் கொடுத்துவிடாதே. அவர்கள் உன்னைவிட அதிக மதிப்பெண் பெற்றுவிடுவார்கள், நீ எங்கே கோச்சிங் போகிறாய் என்பதை யாருக்கும் சொல்லாதே'' என்றெல்லாம் பாடமெடுப்பதிலேயே பாதி ஆற்றலை இழந்துவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகள் எச்சில் கையால் காகம் ஓட்டாத தற்குறிகளாக வளர்ந்து உயரத்தை அடைந்தாலும் உன்னதத்தை அடையாமல் வாடுகிறார்கள்.

இவர்களோடு சேர்ந்து சிரிக்கவும் ஆளில்லை, இவர்கள் தடுக்கி விழும்போது எடுத்து நிறுத்தவும் நட்பில்லை. 

பெற்றோர்கள் நண்பர்களைச் சம்பாதிக்கக் கற்றுத் தருவதும் வாழ்க்கையின் ஒரு பகுதி. இன்று பல பெற்றோர்கள் குழந்தையின் பிறந்தநாளுக்கு அவர்கள் வகுப்புத் தோழர்களை அழைப்பது மட்டுமே நட்பை ஏற்படுத்தித் தரும் நற்செயல் என்று கருதுகிறார்கள். நாங்கள் எல்லாம் எண்ணற்ற நண்பர்களைப் பள்ளியில் பெற்றிருந்தோம். எந்தப் பிறந்தநாளுக்கும் யாரையும் அழைத்ததில்லை. வீட்டிலேயே அதை யாரும் பெரிதாகக் கருதியதில்லை. இன்று பிறந்தநாள் கொண்டாட்டங்கள், ரிடர்ன் கிஃப்ட் என்ன வருகின்றன என்கிற வரவு-செலவுக் கணக்கு கேட்பதிலேயே சென்று விடுகின்றன. 

உண்மையான நட்பு விளையாடும்போது, ஒருவர் விழுந்துவிட்டால் இன்னொருவர் காயம்படுகிற இடத்தை கையால் துடைத்துவிடுவதிலும் தொடங்குகிறது. பக்கத்து மாணவனுக்குப் புரியாத கணக்கை சொல்லித் தருவதில் மலர்கிறது. தெரியாத வீட்டுப் பாடத்தை பகிர்ந்து கொள்வதில் மணம்விடுகிறது.

இவற்றையெல்லாம் செய்யாமல் சொற்பத்தொகை கொடுத்துப்  பெறும் அற்பப் பொருள்களால் நட்பு வட்டத்தை ஏற்படுத்த முடியும் என நினைப்பது மாபெரும் தவறு. கொண்டாட்டங்களில் கூடுவதில் நட்பு தோன்றாது. சிரமங்களில் சேருவதில் மட்டுமே அது நிகழும்.

இன்று பதின்மப் பருவத்தில் பல குழந்தைகளுக்கு உடல்ரீதியான மாற்றங்களில் சந்தேகங்கள் உதயமாகின்றன. அவற்றை யாரிடம் கேட்பது எனப் புலப்படாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள். பெற்றோர்களிடம் சிலர் கேட்டு அவர்களையும் பயப்பட வைக்கிறார்கள். நம் ஊரில் வேறு சில இடங்களில் இருப்பதைப்போல ஆலோசனை கொடுப்பதற்கு மையங்கள் இல்லை.

சான்பிரான்சிஸ்கோவில் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் ஆலோசனை வழங்க அமைப்புகள் இருக்கின்றன. அதற்கு நட்புக்கோடு (Friendship line) என்று பெயர். அந்த எண்ணில் தொலைபேசி செய்து ஆலோசனைகள் பெறலாம். 

நண்பர்கள் அந்தக் காலத்தில் இந்தச் சந்தேகங்களைத் தீர்ப்பார்கள். பெற்றோர்களுக்குப் பிரச்னை இல்லை. எல்லா வகைகளிலும் நட்பு என்பது உன்னதமான உறவு. அது பறப்பதற்குச் சிறகையும், நடப்பதற்குக் கால்களையும் ஒருசேரத் தருகிற இணைப்பு.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com