உன்னோடு போட்டிபோடு!

"அஞ்சாமல் பேசத் தெரிந்தவனை, சுறுசுறுப்பானவனை இந்த உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது' எனத் துணிந்து கூறுகிறார் என்றால், பேச்சு ஒருவரது வெற்றிக்கு எப்போதும் துணை நிற்கும்.
 உன்னோடு போட்டிபோடு!

இளையோரே எழுக!-1

ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் அறுபதாம் கலை வாக்குத் தம்பம் என்பது. இது, வாக்கினை, பேச்சினைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மையைக் குறிப்பதாகும். வடமொழியில் சொல்லப்பட்ட இக்கலையைப் பேசும் கலையாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இன்றையச் சூழலில் மாநில அளவில் முதல்மதிப்பெண் பெற்ற, தங்கப்பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர் கூட நேர்முகத் தேர்வுகளிலோ, வாய்மொழித் தேர்வுகளிலோ தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் திக்கித் திணறி மயங்குகிறார்கள். காரணம், பேசும் கலையை நாம் பள்ளிப்பருவம் முதலேயே கற்பிப்பதில்லை. நம் பாடத்திட்டங்களிலும் அது இல்லை. தற்போது, சில பள்ளிகளில் இதற்கான முயற்சி எடுத்து வருவது, பாராட்டத்தக்கது.

பேச்சினால் எதையும் சாதித்துவிட முடியுமா? என்று கேட்போரும் உண்டு.

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் "

- என்பது, ஒளவையின் வாக்கு. இப்பாடலில், பழக்கத்தால் வருபவை சித்திரம், செந்தமிழ், மனனம், ஒழுக்கம் (நடை) என நான்கு என்றும், பாரம்பரியத்தால் வருபவை நட்பு, தயை, கொடை என மூன்றென்றும் கூறும் ஒளவையார், நாப்பழக்கத்தாலே செந்தமிழ்ப்பேச்சு வளரும் எனக் குறிப்பிடுகிறார்.


"அப்படியென்றால், நான் விடாமல் என் செல்போனில் பேசுகிறேனே... எனக்குப் பேச்சு வருமா?'' என்று கேட்டால், அதிகமான பில் தான் வரும்.


"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது "

- என்று சொல்லும் திருவள்ளுவர், "அஞ்சாமல் பேசத் தெரிந்தவனை, சுறுசுறுப்பானவனை இந்த உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது' எனத் துணிந்து கூறுகிறார் என்றால், பேச்சு ஒருவரது வெற்றிக்கு எப்போதும் துணை நிற்கும். பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும்.  பேசுவதற்குத் துணிவும் வேண்டும்.
நான் கல்லூரியில் பணிபுரியும் காலத்தில், அனைத்துக் கல்லூரிக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராக இருக்கும்போது ஒவ்வொரு வகுப்பிலும் சென்று கலைநிகழ்ச்சிகளில் பங்குகொள்பவர்களுடைய பெயர்களைக் கூறுமாறு கேட்பேன். அப்போது நடந்த உரையாடல்களைப் பாருங்கள்.
"பேச்சுப் போட்டி''
"அந்தப் பையன் லீவு, சார்''
"பாட்டுப் போட்டி''
"அந்தப் பொண்ணுக்குக் காய்ச்சல், ஐயா''
"கவிதைப் போட்டி''
"அந்தப் பையன் மெடிக்கல் காலேஜுக்குப் போயிட்டான், சார்''
எனக்கு வந்த கோபத்தில், "அப்படியென்றால், நீங்கள் யார்? பேசத் தெரியாது, பாடத் தெரியாது, நடிப்பு வராது, விளையாடப் போவதில்லை, தேர்வில் தங்கப்பதக்கமா என்றால், அதுவுமில்லை'' என்று கூறிவிட்டு,

"போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் போட்டியில் கலந்து கொள்ளப் பெயர் கொடுங்கள். பின்னர், போட்டிக்குத் தயாராகுங்கள். பரிசு கிடைப்பதும், கிடைக்காததும் கடைசிக் கட்டம். ஆனால், அதுவரை தயாரிப்பது, ஒத்திகை பார்ப்பது, பல கல்லூரிகளை நோக்கிப் பயணப்படுவது என்ற அனுபவங்களை இந்த வயதில் பெற்றுக் கொள்ளுங்கள்.  Alchemy  என்றால் என்ன என்று தெரியுமா? Alchemist என்றால் யாரென்று கேள்விப்பட்டதுண்டா? என்று நான் கேட்டவுடன்,

"ஐயா, நாங்க செத்துக்கூடப் போறோம். இங்கிலீஸ்ல கேள்வி கேக்காதீங்க'' என்று ஒருவன் சோகமாகச் சொல்ல,
"ஏ, மக்கு! அது கெமிஸ்ட்ரிடா'' என்று ஒரு மாணவி கோபிக்க,
"சரி சண்டை போட வேண்டாம். Alchemy என்றால் ரசவாதம். Alchemist என்றால் ரசவாதி. இந்தப் பெயரில் உலகப்புகழ் பெற்ற ஒரு புத்தகம் வெளிவந்து கோடிக்கணக்கில் விற்பனையாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தை யாராவது படித்தது உண்டா?'' என்று நான் கேட்க,

"நாளைக்குப் பரீட்சைக்கே இன்னும் படிக்கலை, சார்'' என்று சிலர் வருத்தமாய்ச் சொல்ல,
"அப்படியானால் சரி. அந்தப் புத்தகம் குறித்து நாம் பிறகு பேசுவோம். இந்த முறை பெயர் கொடுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன், போட்டியில் கலந்து கொள்வோம் ஜெயித்துக் காட்டுவோம்'' என்று சொன்னதோடு, அவர்களைப் பேசத் தயார்படுத்தி, முதல் பரிசையும் அவர்களைப் பெற வைத்தேன்.

மேடையில் பேசும்போது, என்ன பேசவேண்டும் என்பதைக் காட்டிலும், என்ன பேசக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டு அப்படிப் பேசுபவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

திருமண வீட்டில், பள்ளி-கல்லூரிவிழாக்களில், நினைவஞ்சலிக் கூட்டங்களில், கோவில் விழாக்களில் என்று பேச்சுக்களம் விரிகிறபோது, பேச்சாளர்கள் படும்பாட்டையும், மக்கள் படும்பாட்டையும் நான் பார்த்திருக்கிறேன்.

திருச்சியில் ஒருமுறை ஒரு புகழ்பெற்ற மனிதருடைய பிறந்தநாள் விழா. ஆயிரக்கணக்கான மக்கள்.. அரங்கம் நிரம்பி வழிந்தது. அதில் பேச வந்த ஒருவர் போட்ட போடு இருக்கிறதே.. இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியாய் இருக்கிறது. அவர் தன் பேச்சை எப்படித் தொடங்கினார் தெரியுமா?

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com