கடல்புறத்திலே... கடவுளும் கந்தசாமியும்! 

"இந்தத் திருப்புல்லாணியில்தான் இராமபிரான், தர்ப்பைப் புல்லை விரித்து சமுத்திரராஜனை நோக்கித் தவம் செய்ததாக வரலாறுண்டு. எதற்காக என்றால், வானரப்படைகளோடு கடல்கடந்து இலங்கையிலுள்ள சீதையை மீட்க
கடல்புறத்திலே... கடவுளும் கந்தசாமியும்! 

உன்னோடு போட்டிபோடு! - 6

"ஆர்ப்பரிக்கும் கடலலையை அடக்க முடியுமா?'' என்று கல்லூரி மாணவி கேட்ட கேள்விக்கு, "அறிவியலால் முடியும்  இராமனின் அம்பினாலும் முடியும்'' என்று உடன் வந்த கடல்சார் பொறியியல் பேராசிரியர் சொல்ல, எப்படி என்று ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தோம். உடனே, "பார்த்தீர்களா? இராமன் கால்பட்ட இடத்துல நின்னு நாம பேசறதுனால, இராமாயணத்தைப்பத்தியே பேசறோம். இராமேஸ்வரத்துலகூட "இராமர் பாதம்' என்று ஓர் இடம் இருக்கிறது'' என்று குதூகலமாகச்சொன்னது அருகில் இருந்த ஹெட்போன் பாட்டி. 

அதற்குள் அந்தப் பேராசிரியர் தனது கையிலிருந்த ஐபேடில் எதையோ தேடத் தொடங்கினார்.

"மனதில் எழுகின்ற ஆசையை அடக்கினாலும் கடலலைகளை அடக்க முடியாது என்பார்களே? இராமன் எதற்காக அலைகளை அடக்கினான்?'' என்று ஒருவர் கவலையாகக் கேட்டார்.

"இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் வரும்வழியில் திருப்புல்லாணி என்று ஓர் ஊர் இருக்கிறது. தெரியுமா?'' என்று நான் கேட்டேன்.

"நன்னா தெரியும். அங்க பிரசாதமா பாயசம் கொடுப்பா?'' என்று ஹெட்போன் பாட்டி சொல்ல,
"அந்தக் காலத்துப் பாட்டியெல்லாம் கூன்விழுந்த பாட்டிகள். எங்க பாட்டி கூகுள் பாட்டியாக்கும்'' என்று பேத்தி பெருமையாகச் சொல்லியது.

"இந்தத் திருப்புல்லாணியில்தான் இராமபிரான், தர்ப்பைப் புல்லை விரித்து சமுத்திரராஜனை நோக்கித் தவம் செய்ததாக வரலாறுண்டு. எதற்காக என்றால், வானரப்படைகளோடு கடல்கடந்து இலங்கையிலுள்ள சீதையை மீட்க வேண்டும் என்பதற்காகப் பாலம் கட்ட நினைத்த இராமபிரான், கடலரசனாகிய சமுத்திரராஜனை நோக்கித் தவம் செய்தாராம்'' என்று நான் சொன்னதைக் கேட்ட ஒருவர், மீசையை முறுக்கியபடி கேலியாய்ச் சிரித்துக் கொண்டே, "கடவுள நோக்கித் தவமிருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். கடவுளே தவமிருக்குறதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?'' என்று கேட்டார்.

"தவமென்றால் என்ன தெரியுமா? ஆற்றலை ஒருங்கிணைப்பது. மனதை ஒருநிலைப்படுத்துவது. எதிரியைத் தாக்கும்போது உடல்பலம் முழுவதையும் ஒரு கைக்குக் கொண்டு வருவதைப்போல, தீப்பிடித்த வீட்டில் தோள்களால் முட்டிக் கதவை உடைப்பதுபோல, சிதறிக் கிடக்கும் வலிமையை ஒருங்கு திரட்டுவதுதான் தவம். கடவுளாக இருந்தாலும் கந்தசாமியாக இருந்தாலும், வெற்றி பெற இப்படி முயற்சியை ஒருங்கிணைக்கத்தான் செய்வார்கள்'' என்று நான் விரிவாகச் சொன்னேன்.

"அட இதுக்குப் போய் இவ்வளவு பேசிக்கிட்டு? சாதாரணமா சூரிய வெளிச்சத்துல பேப்பர் தீப்பிடிக்குமாய்யா? ஆனா, ஒரு லென்ஸ சூரிய வெளிச்சத்துக்கும் பேப்பருக்கும் நடுவுல நீட்டி ஒரு புள்ளியில வெளிச்சத்த புடிச்சு நிறுத்துனா, பேப்பர் குப்புன்னு பிடிக்கும். அப்படித்தானய்யா?'' என்று மீன் வலையைக் காய வைத்துக் கொண்டிருந்த அந்தக் கடல்புறத்து மனிதர் கேட்டபோது நான் அவரைப் பாராட்டிக் கைதட்டினேன்.

"அருமையாகச் சொன்னீர்கள். இராமன் திருப்புல்லாணியில் தன் எண்ணங்களை ஒருங்கிணைத்து சமுத்திரராஜனை வரவழைக்க எண்ணினான். வெகுநேரம் அவன் வராது போகவே, கோபம் கொண்ட இராமன், தன் வில்லை வளைத்துக் கடல் வற்றிப் போகட்டும் எனும் கோபத்தோடு அம்புவிடத் துணிந்தபோது சமுத்திரராஜன், தனது தலைமீது கரங்களைக் குவித்தபடி "சரணாகதி' என்று ஓடி வந்தானாம். உடனே இராமனும், தஞ்சமடைந்தவனை ஏற்றுக் கொண்டு, "கடல் மீது பாலங்கட்டி நான் என் வானரப்படைகளோடு இலங்கை செல்ல வேண்டும். உன் அதிகாரத்துக்குக் கீழுள்ள இந்த அலைகளைக் கொஞ்சம் அடக்கி வை' என்று சொன்னானாம்.

அக்கடலரசனும் இராமனின் ஆணையை ஏற்று அலைகடலை அமைதிப்படுத்தினான். வானரங்கள் மலைகளை, கற்களை உருட்டிவந்து கடலில் போட்டுப் பாலத்தை உருவாக்கத் தொடங்கினவாம் என்று நான் இராமாயணத்தின் யுத்தகாண்டப் பகுதியில் அமையப் பெற்ற "வருணனை வழிவேண்டு படல'த்துச் செய்திகளை எடுத்துச் சொன்னேன்.

"கடல் அலையை அமைதிப்படுத்துனதைக் கூட ஒத்துகிடலாம். ஆனா, கல்லு கடல்ல மிதக்கும்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியல்லையா?'' என்று அந்த மீசைக்காரர் திரும்பக் குறுக்கிட, "இப்பவே என்கூடத் திருப்புல்லாணி வாங்க. அங்க இராமன் பாலம் கட்டுனதா சொல்ற எடத்துக் கிட்ட கிடக்குற கல்ல தூக்கிக் கடல்ல போடுங்க. அது மட்டும் மிதக்கலைன்னா இனி நான் என் வாழ்நாளில் டிவியில சீரியலே பார்க்கமாட்டேன். இது என் ஹெட்போன் மேல சத்தியம்'' என்று அந்தப்பாட்டி அந்நியன் உருவமெடுத்து ஆவேசத்தோடு பேசியது.

"கடல் தாமரைங்குறீங்க.. அல அடங்குதுங்குறீங்க.. கல்லு மெதக்குதுங்குறீங்க.. இது என்ன முயல் தீவா? ஹாரிபார்ட்டர் கதையில வர்ற எடமா?'' என்று குழப்பத்தோடு புலம்பியபடி, "இந்த வாத்தியாரு வேற அறிவியல்ல அலைய அடக்கப் போறேன்னாரு. நம்மூர்ல காளைய அடக்கவே விடமாட்டேன்ங்கிறாங்க. என்னத்த சொல்றதுன்னே தெரியல. பேசாம சாயங்காலம் டெண்டுக் கொட்டகைல நம்ம இராமராஜன் படத்துக்குப் போயிடலாம்னு இருக்கேன். மனசுக்கும் நிம்மதி. எந்தக் கொழப்பமும் வராது'' என்று ஒருவர் ஏகாந்தமாக யாரையோ பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதற்குள் நம் கடல்சார் பொறியியல் பேராசிரியர் துள்ளிக் குதித்து, "கண்டேன் சீதையை' என்று மகிழ்ந்த அனுமன் போல, "இந்தா பாருங்க... இதத்தான் சொன்னேன். ஜப்பான்காரன்னா வெளையாட்டா நாலு குண்டுதான் கடல்ல போட்டான். ஆடிக்கிட்டிருந்த அலையெல்லாம் கப்புச்சிப்புன்னு அடங்கிப் போச்சு'' என்று அவர் தன் கையிலிருந்த ஐபேடைக் காட்டியபடி பரபரப்பாகச் சொல்ல, "இதென்ன கூத்தா இருக்கு? இரண்டாம் உலகப்போர்ல ஜப்பான் மேலதான குண்டு போட்டாய்ங்க? இவரு ஜப்பான்காரனே குண்டு போட்டான்னு சொல்றாரே, இன்னைக்கி ஒழுங்கா வீடு போய்ச் சேரமாட்டோம் போல இருக்கே?'' என்று சிலர் கவலையாகக் கேட்க,

அந்தப் பேராசிரியர் சொன்ன செய்திகள்... ஐபேடில் காட்டிய படங்கள்... அத்தனைபேரையும் வியப்படையச் செய்தன. அப்படி என்னதான் அந்தப்படத்தில் இருந்தது?
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com