இரண்டு ஆற்றங்கரை நடுவே...!

அதை அறிந்த ஸ்ரீராமானுஜர் "ஐயோ அரிய பொக்கிஷம் கைக்குக் கிடைத்தும் பறி கொடுத்து விட்டோமே? இனி அந்நூல் கருத்துகளை எவ்வாறு அறிவது' என ஏங்கினாராம்
இரண்டு ஆற்றங்கரை நடுவே...!

உன்னோடு போட்டிபோடு! - 19

"அஷ்டாவதானிகள்', "ஏகசந்தக் கிரகிகள்' எனப் பலர் நம் நாட்டில் உண்டு என்று நான் சொல்லி முடிக்கவும் அந்தச் சொற்களுக்குப் பொருள் தெரியாத பலர் திகைத்து மயங்கினார்கள். அப்போது "எங்கள் சேது நாட்டை ஆண்ட மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைக்களத்தில் நீங்கள் சொன்ன அஷ்டாவதானிகளும், ஏகசந்தக் கிரகிகளும், சமப்பிரதான வித்வான்களும் பலர் இருந்தார்கள்'' என்று பெருமையோடு சொன்னார் திருக்குறளைக் "கூகுள்' வேகத்தில் சொன்ன தமிழாசிரியர்.

"சமப்பிரதான வித்வான்கள்' என்று அவர் பங்குக்கு அவர் ஒன்றைச் சொல்ல ஆகாஷ்வாணியில் இந்திச் செய்தியைக் கேட்டது போலானார்கள் அங்கிருந்த சிலர், நான் அவர்களைப் பார்த்து, "ஒன்றும் மயங்க வேண்டாம். நான் எல்லாவற்றிற்கும் குறுஞ்செய்திபோல் (மெசேஜ்) விளக்கம் சொல்கிறேன்.

"அவதானித்தல்' என்பது ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்தல். எட்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர் "அஷ்டாவதானி'. பத்து வேலைகளைச் செய்பவர் "தசாவதானி' பதினாறு வேலைகளைச் செய்பவர் "சோடச அவதானி'. நூறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவரைச் "சதாவதானி' என்று நம் நாட்டில் அழைப்பது வழக்கம்'' என்று முடித்தேன்.

"திஸ் இஸ் டூ மச்... ஹெள இஸ் இட் பாஸிபிள்?'' என்று பேத்தி வியப்போடு கேட்டவுடன், "ஸிம்பிள் பேபி'' என்று தொடங்கிய ஹெட்போன் பாட்டி, "உன் மம்மி காலையில உன்னை ஸ்கூலுக்கு அனுப்புறப்ப என்னென்ன வேலை செய்றா தெரியுமா?
ஒரு கையில உப்புமா கிண்டிக்கிட்டு, மறு கையில உனக்கு ரிப்பன் கட்டிக்கிட்டு, குளிக்கப்போன உங்க "டாட்' துண்ட மறந்துட்டு அங்கிருந்து கத்தினா, துண்டைச் சுருட்டி எறிஞ்சுகிட்டு, அப்பிடியே டி.வி.யில "விருச்சிக ராசி நேயர்களே' என்ற ராசிபலனைப் பார்த்துக்கிட்டு, வாசல்ல காலிங்பெல்லை யாராவது அடிச்சா, "இதோ வந்திட்டேன்' எனக் கத்திக்கிட்டு, உன்னோட ஸ்கூல் பேக்கையும் தூக்கிக்கிட்டு உன்னைக் கார்ல ஏத்த ஓடி வர்றா பாரு... அவதான்  சதாவதானி''  என்று சொல்லி முடித்தபோது நானே அசந்து போய்க் கைதட்ட, மற்றவர்களும் வியப்போடு "ஆகா', "ஓஹோ' என்றார்கள்.

"கேட்டீர்களா? நான் சொல்ல வந்த செய்தியும் இதுதான். மேலைநாட்டுக்காரர்களால் ஒருநேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும் என்பார்கள். ஆனால், நம் நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட திறமைசாலிகள் இருந்திருக்கிறார்கள்... இன்றும் இருக்கிறார்கள்'' என்று நான் பெருமையோடு சொன்னேன்.

"ஓ.கே. ஐ. அக்ரி. பட் ஹண்ட்ரட் வேலைய எப்பிடி ஒன் டைம்ல செய்ய முடியும்?'' என்று பேத்தி கேட்க, "சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்  என்றொரு மாமேதை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்திருக்கிறார். அவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்து சபையோரைத் திகைக்கவும் வைத்திருக்கிறார்'' என்று நான் சொன்னேன்.

"இன்றைக்கு வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் முதலில் தங்களின் நினைவாற்றலைப் பெருக்கும் வழியினைக் கண்டறிய வேண்டும். எல்லாவற்றையும் கூகுளில் தேடிக்கொண்டு வாட்ஸ்அப்பில் வாழ்ந்து கொண்டும் இருக்கக் கூடாது'' என்று ஒரு பெரியவர் கோபத்தோடு சொன்னார்.

"எல்லாம் சரிதான் அது என்ன? "ஏகசந்தக் கிரகி' என்று ஏதோ சொன்னீர்களே?'' என்று மீசைக்காரர் எப்போதும்போல கோபமாகவே கேட்டார்.

"ஒருமுறை  ஏதேனும் ஒன்றைப் படித்தாலோ, காதால் கேட்டாலோ அதை அப்படியே கிரகித்துக் கொண்டு, அதாவது உள்வாங்கிக் கொண்டு அதை மீண்டும் வெளிப்படுத்தும் ஒருவரை ஏக + சந்த + கிரகி - என அழைப்பார்கள். இதில் ஒரு பாடல், ஒரு செய்தி என்று இல்லை. ஒரு முழுப் புத்தகத்தையே அப்படியே உள்வாங்கிக் கிரகித்து வியக்க வைத்த மகான் யார் தெரியுமா?'' என்று நான் கேட்டேன்.

"சார் ஒரு க்ளு கொடுங்களேன்'' என்று தமிழ்மணி கேட்டார்.

"அவர் இந்தாண்டில் ஆயிரமாவது பிறந்த நாளைக் கொண்டாடும் உடையவராகிய ஸ்ரீராமானுஜரின் சீடர்களில் ஒருவர்'' என்றேன்.

"எந்த ஊர்? என்ன பேர்?'' என்று யார் யாரோ கேட்டார்கள்.

"சரி ஊரை முதலில் சொல்கிறேன். காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள "கூரம்' எனும் சிற்றூர். நீங்கள் எல்லோரும் அவரின் பெயரை யோசித்துக் கொண்டிருங்கள். அவர் என்ன சாதனை செய்தார் என்று கூறுகிறேன்'' என்று நான் தொடங்கினேன்.

அப்போது தமிழ்மணி அத்தனை பேர் கையிலும் பனைமரத்தின் ஓலையை மட்டையாக மடித்து எடுத்து அதில் பதநீரையும், இளநுங்குகளையும் கலந்து கொடுக்க, அதை இரண்டு கைகளிலும் வாங்கிய மீசைக்காரர் மிக அழகாக தன் தலைகுனிந்து ஓலை மட்டையில் வாயை வைத்து பதநீரை நுங்கோடு பருகி, உண்ணத் தொடங்கினார். அந்தப் பகுதிக்காரர்கள் மிக எளிமையாக அப்படிப் பதநீரை உறிஞ்சிக் குடித்தபோது ஹெட்போன் பாட்டியும், பேத்தியும் மற்றும் சிலரும் ஆச்சரியமாய்ப் பார்த்தபடி தாங்களும் அருந்தத் தொடங்கினார்கள்.

"விசிஷ்டாத்வைதம்  எனும் அரிய தத்துவத்தை உலகிற்கு வழங்கிய ஸ்ரீராமானுஜர் வியாச பகவான் அருளிய பிரம்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் (உரை) எழுத வேண்டும் என எண்ணினார். அதற்காக இந்தியாவில் தோன்றிய அத்தனை மதங்களின் கருத்துகளையும் கற்றாராய்ந்தார். காஷ்மீரத்திற்கும் சென்று "போதாயன விருத்தி' என்னும் அரிய நூலைப் பெற விரும்பினார். அங்கிருந்த மாயாவாதக் கொள்கைக்காரர்கள் அதைத் தர மறுத்தனர். ஆனால், அந்நாட்டு அரசன் ஸ்ரீராமானுஜரின் பெருமைகளை அறிந்து அவருக்கு அந்த நூலைத் தந்தருளினான்.

அந்நூலில், மகரிஷி போதாயனர் ஒரு லட்சம் கிரந்தங்களில் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் (உரை) செய்திருந்தாராம். அந்த அரிய நூலைப் பெற்ற இராமானுஜர் தம் சீடரிடம் கொடுத்து வைத்தாராம். ஆனால் அன்றிரவு முடிந்து விடிந்ததும் அந்த நூலைக் கொடுத்தவர்களே திருடிக் கொண்டு போய்விட்டார்களாம். அதை அறிந்த ஸ்ரீராமானுஜர் "ஐயோ அரிய பொக்கிஷம் கைக்குக் கிடைத்தும் பறி கொடுத்து விட்டோமே? இனி அந்நூல் கருத்துகளை எவ்வாறு அறிவது' என ஏங்கினாராம்.

அப்போது "ஐயன்மீர், நான் நேற்றிரவே அந்நூல் முழுவதையும் ஒரு தரம் படித்து முடித்து விட்டேன். அதை இப்போதே... இங்கேயே சொல்லிக்காட்டவா? அல்லது இரண்டு ஆற்றுக்கு நடுவே வந்து சொன்னால் போதுமா? எனக் கேட்டாராம் அந்த ஏகசந்தக் கிரகியான சீடர். அவர் யார் தெரியுமா?'' என நான் கேட்க...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com