உதவும் கரையா? உதவாக்கரையா?

"இனிமேல் எங்கள் குடும்பத்திற்குப் பதினைந்து ரூபாய் ஊதியம் கொடுத்தால் போதும்.  நாங்கள் உயிர் வாழ்வோம் என்று சொன்னவருடைய பெயர் தெரியுமா?'' என்று நான் கேட்டேன்.
உதவும் கரையா? உதவாக்கரையா?

உன்னோடு போட்டிபோடு! - 40

"இனிமேல் எங்கள் குடும்பத்திற்குப் பதினைந்து ரூபாய் ஊதியம் கொடுத்தால் போதும். நாங்கள் உயிர் வாழ்வோம் என்று சொன்னவருடைய பெயர் தெரியுமா?'' என்று நான் கேட்டேன்.

உடனே எல்லோரும் மெளனமாக இருக்க, "ஐயாகிட்ட ஒரு நல்ல பழக்கம் அவரே கேள்வியும் கேட்டு அவரே பதிலும் சொல்லிடுவாரு'' என்று கோமாளி கைதட்டிச் சிரிக்க, நானும் உடனே, "நம் கோமாளி சொல்வது உண்மைதான். என்னுடைய வகுப்பில நான் இதேதான் செய்வேன். நானே கேள்வி கேட்பேன். பிறகு நானே அதற்குப் பதில் சொல்லி விடுவேன். "ஒரு அப்பா கூட கேட்டாராம் ஒரு பையனிடம், "உங்க வகுப்பிலே நல்லா படிக்கிறது யாரு?' உடனே பையன், " எங்க வாத்தியாரு' என்றானாம். அதுபோல இந்தக் கேள்விக்கு நானே பதில் கூறுகிறேன்'' என்றேன்.

அதற்குள், "சரி ஐயா, நீங்கள் சொன்ன கேள்வியில யாரோ ஒருத்தரு எப்பவோ தன்னுடைய குடும்பச் செலவுக்கு 15 ரூபாய் மட்டும் போதும்னு சொன்னதாகச் சொன்னீங்க... சரி... நம்ம பெருந்தலைவர் காமராஜரு நேருவுக்குப் பிறகு யாரைப் பிரதம மந்திரி ஆக்குனாரு? அத நீங்க சொல்லலையே!'' என்று கேட்டார் மீசைக்காரர்.

உடனே ஒரு பெரியவர் மீசைக்காரரைப் பார்த்து, "சரிதான் போ விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன்னு சொன்ன கதையால இருக்கு. ஐயா சொன்ன கதையில் வர்ற அந்த ஏழைப் படிப்பாளியைத்தான் பிரதம மந்திரி ஆக்கணும்னு சொல்லியிருப்பாரு'' என்று மீசைக்காரரிடம் பேசிவிட்டு என்பக்கம் திரும்பி, "ஐயா, பெருந்தலைவர் நியமிச்சாரே அவர் பேரு என்ன?'' என்று என்னிடமே திரும்பி கேட்டார். அதற்குள் தமிழ்மணி "ஐயா இந்தக் கேள்வி தொடர்பா ஒரு "க்ளு' கொடுங்கள்'' என்று கேட்டார்.

நான் தொடங்குவதற்கு முன்பாக, தமிழையா அவர்கள், " நான் கொடுக்கிறேன் "க்ளு'. பிரதமர் நேரு காலத்தில் தமிழ்நாட்டில் அரியலூரில் ஒரு ரயில் விபத்து நடந்தது. அது பெரும் மழையினால் ஏற்பட்ட விபத்து. ஆனால் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த ஒருவர் தன் துறையில் ஏற்பட்ட விபத்திற்குத் தானே பொறுப்பேற்றுத் தன் பதவியை ராஜினாமா செய்தாராம். அந்த ஒருவர்தான் ஐயா சொன்ன ஒருவர். அவரைத்தான் பெருந்தலைவர் காமராஜர் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்கச் செய்தார்'' என்று முடித்தார்.

"அந்த ஒருவர், இந்த ஒருவர், அவர்தான் இவர், இவர் தான் அவர் அந்தத் தனி ஒருவர் யார்? யார்?'' என்று கோமாளி தன் தலையில் இருந்த குல்லாயை கழற்றிவிட்டு இரண்டு கொட்டு கொட்டிக் கொண்டான்.

"லால் பகதுர் சாஸ்திரி'' என்று மீசைக்காரரும் ஹெட்போன் பாட்டியும் போட்டி போட்டுக் கொண்டு சொல்ல, எல்லோரும் ஆச்சரியத்தோடு மீசைக்காரரைப் பார்த்தார்கள். உடனே மீசைக்காரர் பவ்யமாக எழுந்து சபையை வணங்கி விட்டு, "நான் எப்பவும் கேள்விதான் கேட்கிறேன் அப்டீன்னு நம்ம இளைஞர்கள் என்னைக் கேலி செய்தார்கள். நான் எல்லார் கிட்டேயும் கேள்வி கேட்கிறதோடு நிறுத்த மாட்டேங்க. அதுக்கான பதிலையும் பெரியவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதை இந்த மாதிரி என் டைரில குறிச்சு வச்சுக்கிடுவேன். அப்படி நான் குறிச்சதுல ஒன்னுதான் இப்பப் பதிலா சொன்னேன். அது மட்டுமில்ல, அந்தக் காலத்துல எந்த மகிழ்ச்சியான, சோகமான நிகழ்ச்சி நடந்தாலும் மக்கள் அதச் செய்தியா மட்டும் பார்க்காமல் சின்னதாப் பாட்டாப் பாடி வச்சுக்கிடுவாங்க அதுக்கு தெருமுனைச் சிந்து, லாவணிப் பாட்டு அப்டீன்னு பேரு வச்சு, ஊரு ஊரா பாடிட்டு வருவாங்க. நான் சிறு பிள்ளையா இருந்தபோது அரியலூர் ரயில் விபத்து பற்றி சோகப்பாட்டு கேட்டுருக்கேன். அதனாலதான் உடனே சொன்னேன்'' என்றார். இளைஞர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் விசிலடித்துக் கைதட்ட தமிழையாவும், தமிழ்மணியும் எழுந்து சென்று அவரைக் கட்டிக் கொண்டார்கள்.

"பார்த்தீர்களா, கல்வி நிலையங்களில் படிக்கிற மாணவர்களை, மாணவிகளை ஏதாவது கேள்வி கேளுங்கள் என்று சொன்னால் யாரும் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள். கேட்க தயக்கம். கேலி செய்து விடுவார்களோ என்ற பயம். ஆனால் இவரைப் பாருங்கள் தனக்கு படிக்க வாய்ப்பில்லாவிட்டாலும் தேடித் தேடிச் சென்று கற்போரிடம் கேட்டிருக்கிறார், தகுந்த பதில்களைப் பெற்றிருக்கிறார். அதைப் பதிவும் செய்திருக்கிறாரே'' என்று நானும் மீசைக்காரரைப் பாராட்டினேன்.

அதற்குள் தமிழ்மணி அவருடைய டைரியை வாங்கிப் புரட்டிப் பார்த்து, "இவர் வைத்திருக்கின்ற குறிப்புக்களை, கேள்வி – பதில்களை மாணவர்களுக்குப் பயன்படுமாறு கையடக்கப் புத்தகமாகவே வெளியிடலாம் அவ்வளவு குறிப்புகள் இருக்கின்றன. கையெழுத்தும் அழகாக இருக்கிறது'' என்று சொல்லிக் கொண்டு வந்தவர், "அடடே! பல பொன்மொழிகளும் இருக்கின்றனவே'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

"எங்கே ஒரு பொன்மொழியை வாசியுங்கள்'' என்று நான் ஆர்வமாய்க் கேட்டேன்.

"நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால் அப்படிப்பட்ட நண்பன் கிடைப்பது அரிது'
"உன் கையெழுத்து எப்போது ஆட்டோகிராஃபாக மாறுகிறதோ அப்போதுதான் நீ உலகத்தை ஜெயிக்கிறாய்'
என்று அவர் வாசிக்க வாசிக்க எல்லோரும் கை தட்டினோம். மீசைக்காரர் மட்டும் சற்றே வெட்கப்பட்டுத் தலை குனிந்தபடி கண்கலங்க நின்று கொண்டிருந்தார். உடனே ஹெட்போன் பாட்டி தன் பேத்தியின் பேக்கில் இருந்து ஓர் அழகான கைக்கடிகாரத்தை எடுத்து மீசைக்காரரிடம் கொடுத்து, "உங்களது அறிவுத் தேடுதலுக்கு என் அன்பளிப்பு. இந்தக் கடிகாரம் சுவிட்சர்லாந்தில் வாங்கியது. என் பேத்தி உங்களிடம் தரச் சொல்லி அப்போதே சொல்லிவிட்டாள்'' என்று சொல்லிவிட்டுப் பேத்தியும் பாட்டியுமாக அந்தப் பரிசைக் கொடுக்க அவர் தயக்கத்தோடு எல்லோரையும் பார்க்க, "வாங்குங்க... வாங்குங்க... வாங்கிக்கிட்டே இருங்க'' என்று எல்லோரும் கைதட்டி அவரைப் பாராட்டினார்கள்.

அப்போது ஒரு பெரியவர், "லால்பகதுர் சாஸ்திரி அவர்களை பிரதமராக்கியதற்குப் பின்னாடி இவ்வளவு கதைகள் இருக்கின்றனவா?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

"ஆமாம்'' என்று சொன்ன தமிழையா, "இது மட்டுமில்லை, ஐயா லால்பகதுர் சாஸ்திரி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். பள்ளிக்கூடத்தில் படித்தபோது அவர் இருந்த கிராமத்தில் இருந்து கங்கை நதியைக் கடந்துதான் பள்ளிக்கூடத்துக்குச் சென்று வர வேண்டுமாம். அதற்கு "காலணாக் காசு' வேண்டுமாம். அது இருந்தால் தான் படகில் ஏற்றி மறுகரையில் விடுவார்களாம். ஆனால் அந்தக் காசில்லாத ஏழைச் சிறுவனான லால்பகதுர் சாஸ்திரி தன் புத்தகங்களையும் சட்டையையும் படகில் போகிற தன் நண்பனிடம் கொடுத்துவிட்டு நடந்தும், நீந்தியும் சென்று அக்கரையை அடைவாராம். அப்படித்தான் அவர் படிப்பு தொடர்ந்தது'' என்று அவர் சொல்லி முடித்தார்.

"ஆஹா படிப்பில் அக்கறை வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவருடைய படிப்பே அக்கரையில் (மறுகரையில்) தான் இருந்திருக்கிறது. இப்படி படித்ததால்தான் அவர் உயர்ந்திருக்கிறார் இந்தியப் பிரதமராயிருக்கிறார்'' என்று நான் சொன்னேன்.

இக்கரை அக்கரை என்று சொன்ன கோமாளி, "ஐயா உதவாக்கரைன்னா என்ன?'' என்று தனக்கே உரிய கேலியோடு கேட்டான். எல்லோரும் சிரித்து விட்டார்கள்.
"ஒரு அறை விட்டா தெரியும் உதவாக்கரை யாருன்னு?'' என்று ஒருவர் கோபமாகச் சொன்னார். உடனே தமிழையா, "அப்படிக் கோபப்படாதீர்கள். தமிழில், தமிழ் மொழியில் எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு,

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூல் சொல்கிறது'' என்றார்.

"அது சொல்லிட்டு போது... உதவாக்கரைன்னா என்ன?'' என்றான் கோமாளி விடாமல். நான் உடனே கோமாளியைப் பார்த்து நீங்கள் "விருமாண்டி' படம் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன்.

"பத்துத் தரம் பார்த்திருக்கேன். இப்ப நம்ம ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு இரண்டு தடவை பார்த்தேன்'' என்று சொல்லிவிட்டு,
"கொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு...
விரு விரு மாண்டி விருமாண்டி'
என்று பாடி ஆடினார். இதற்குள் தமிழ்மணி, " இவர் கேட்ட உதவாக்கரைக்கும் விருமாண்டிக்கும் என்ன சம்பந்தம்?'' என்று என்னிடம் கேட்டார்.

"சம்பந்தம் இருக்கு'' என்று நான் சொல்ல, "என்ன சம்பந்தம்?
ஞான சம்பந்தமா?'' என்று கோமாளி விடாமல் கேட்டார். "நீங்கள் இப்போது பாடிய பாடலோடு இன்னொரு சோகப்பாட்டு அந்தப் படத்தில் உண்டு தெரியுமா?'' என்று நான் கேட்க, கோமாளி சற்றும் அசராமல்
"மாடவிளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா?
மல்லியப்பூவ யாரு இப்போ வேலியில சூட்டுனா?
கெழக்கே விடியையிலே மேற்கால தான் கருத்துருமா?''
என மிகச் சோகக் குரலில்
"வேலவெட்டி இல்லாத வெட்டிப்பய நானு
வாயக்கட்டி வளத்ததெல்லாம் ஆனதென்ன வீணு
ஆறாக நீ ஓட ஒதவாக்கர நானு ஈரமில்லா நெஞ்சானாலும்...'
பாடத் தொடங்கிய கோமாளி, "உதவாக்கரை நானு' என்று பாடி முடித்தபோது, "அப்படியே நிறுத்துங்கள்'' என்றேன். சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ரேடியோ போல அவர் பாடுவதை நிறுத்த எல்லோரும் என்னையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.

நான் உடனே "இவர் கேட்டாரே உதவாக்கரை இதற்குப் பொருள் இதுதான். நதியிருந்தால் கரை இருக்கும். கரையிருந்தால் நீர் பாதுகாக்கப்படும் ஆற்றின் இருபக்கமும் உள்ள கரை உதவும் போதுதான் நீர் நிலத்தில் பாய்ந்தால்தான் பயிர் வளரும் நெல் விளையும். உயிர்கள் செழிக்கும். அந்தக் கரைகள் உதவவில்லை என்றால் நீர் பயனற்றுப் போகும் ஒரு மனிதன் ஆற்றின் கரை போல அனைவருக்கும் உதவ வேண்டும். உதவாத கரையால் யாருக்கும் பயனில்லை. ஊருக்கும் பலனில்லை. அதுதான் உதவாக்கரை. இந்தப் பாடலை எழுதியவர்கள், பாடியவர், இசையமைத்தவர் இவர்களெல்லாம் யார் யார் தெரியுமா? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?'' என்று நான் கேட்க அத்தனை பேரும் ஆரவாரமாய் பதில் சொல்ல எழுந்தார்கள். அப்போது...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com