ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் நிறுத்தி வைக்கும் சக்தி எழுத்துக்கு உண்டு! வெ.இறையன்பு ஐஏஎஸ்!

ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் நிறுத்தி வைக்கும் சக்தி எழுத்துக்கு உண்டு! சாகித்ய அகாதெமியின் புதிய எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை!
ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் நிறுத்தி வைக்கும் சக்தி எழுத்துக்கு உண்டு! வெ.இறையன்பு ஐஏஎஸ்!

'ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் காப்பாற்றி நிற்க வைக்கும் ஆற்றல் எழுத்துக்கு உண்டு' என்று ஆராவாரக் கைதட்டல்களுக்கு நடுவே தொடர்ந்தது, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த வெ. இறையன்பு அவர்களின் பேச்சு.

டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சாகித்திய அகாடமியும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும் இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதை பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது. எனக்கும் அதில் கலந்துகொள்ளும் பெரும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய அனுபவங்களை உங்களுடன் தினமணி மூலம் பகிர்வதில் மகிழ்கிறேன். மேலும் இம்மாதிரி பயிற்சி முகாம் நடக்கும் பொழுது என் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளர்களும், எழுதும் ஆர்வம் இருப்பவர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இம்முகாமின் துவக்க விழாவில் முனைவர் அ.சு. இளங்கோவன் அவர்கள் (பொறுப்பு அலுவலர், சாகித்திய அகாதெமி) வரவேற்புரை ஆற்றினார். விழாவினை ஒருங்கிணைப்பு செய்து நடத்திய எழுத்தாளர் பாரதி பாலனின் (பேராசிரியர்-தலைவர், தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்) நோக்க உரை மற்றும் முனைவர். மு.பாஸ்கரன் அவர்களின் (துணை வேந்தர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்) தலைமை உரையோடு விழா இனிதே தொடங்கியது.

இதில் விசேஷச் செய்தி என்னவென்றால் துணை வேந்தரும் சிறப்பு விருந்தினரும் கல்லூரித் தோழர்கள். ஒரே அறைவாசிகள். வெ. இறையன்பு அவர்களுடனான கல்லூரி காலத்தின் அனுபவங்களை சுவையாக தன் பேச்சின் நடுவே சர்க்கரைத் தூரலாக சிதறவிட்டார். 'அப்போதெல்லாம் இறையன்பு கவிதைகள் நிறைய எழுதுவார். எழுதியவற்றை இரவு ஒரு மணியானாலும் எங்களுக்குப் படித்துக் காட்டி, எங்களது கருத்துக்களை கேட்பதில் ஆர்வமாக இருப்பார். கட்டுரைப் போட்டியோ பேச்சுப் போட்டியோ எதுவாக இருந்தாலும் இறையன்பு கலந்து கொள்கிறார் என்றால் முதல் பரிசு போச்சு போ என்று நாங்கள் செல்லமாக அங்கலாய்பது உண்டு. தழிழ் ஆர்வலர். திறம்பட பேசுபவர்' என்று அவருடனான தனது பால்ய காலத்து அனுபவங்களைக் கூறி எங்களையும் அந்த காலத்துக்கே இட்டுச் சென்றுவிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்தார் சிறப்பு விருந்தினரான முனைவர் வெ. இறையன்பு.  'முனைவர் பாஸ்கரன் குறிப்பிட்டது போல எழுத்தின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு தாங்கள் எழுதியதை அடுத்தவர்களிடம் படித்துக்காட்டும் பழக்கம் இருக்கும். எனக்கும் அது இருந்தது என்று கூறி சிரித்த இறையன்பு அவர்கள் மேலும் தொடர்ந்தார். 'ஒரு நாள் நான் எழுதியதை மேசையில் வைத்துவிட்டு வேறு வேலையாக வெளியில் சென்றுவிட்டேன். வந்து பார்க்கும் போது நான் எழுதிவைத்த காகிதத்தை காணோம். சுற்றுமுற்றும் தேடியபோது, அந்தக் காகிதம் எட்டாக மடிக்கப்பட்டு, ஆடிக் கொண்டிருந்த நாற்காலியின் காலுக்கு அடியில் முட்டு கொடுப்பதற்காக  வைக்கப் பட்டிருந்தது. அப்போது ஒரு உண்மையை புரிந்து கொண்டேன்' ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் நிறுத்தி வைக்கும் சக்தி எழுத்துக்கு உண்டு என்பதை' என்றவுடன் கரகோஷம் அரங்கை நிறைத்தது. 

அன்றைய தினம் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு மூன்று பிரபல எழுத்தாளர்கள் தங்களுடைய அனுபவங்களையும் பயிற்சி பெற வந்தவர்களின் கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கிச் சிறப்பித்தனர். முதல் அமர்வில் எழுத்தாளர் முகிலை. இராசபாண்டியன் அவர்கள் 'படைப்பும் பார்வையும்' என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். சிறுகதையின் முப்பிரிவுகளைப் பற்றியும் அதனுடைய உருவம், உள்ளடக்கம் நடை பற்றிய விரிவான விளக்கங்களையும் மிக அருமையாக எளிய முறையில் விளக்கினார்.

அடுத்து வந்த அமர்வு 'மொழியும் கதையும்' என்ற தலைப்பில் தனது படைப்பான 'விசாரணைக் கமிஷன்' என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் உரையோடு விரிந்தது. 'நிறைய படிப்பது மட்டுமே எழுதுவதற்கு உதவாது. இயல்பிலேயே கற்பனைத் திறனும், படைப்பாற்றாலும் க்ரியேட்டிவிடியும் இருக்க வேண்டும். நிறைய வாசிப்பது நிறைய அனுபவங்களை வேண்டுமானால் தரும். எழுத்து என்பது இதயத்தால் எழுதப்படுவது அறிவால் அல்ல' என்றார்.

மூன்றாவது அமர்வில் எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ் அவர்கள் சிறுகதை எழுதும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது, எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை ஒரு பெரிய பட்டியல் இட்டே விளக்கினார். ஒரு சிறுகதையை உதாரணமாக எடுத்துக் கொண்டு, அதை படிக்கச் சொல்லி அக்கதையில் உள்ள குறை நிறைகளை பாரபட்சமின்றி பிரித்து மேய்ந்து அலசி ஆராய்ந்து தள்ளிவிட்டார். மேலும் அவர் முக்கியமானதாக கூறியதாவது 'ஒருவர் தான் கூற வந்த கருத்தை கதை சொல்வதன் மூலமாக கூறாமல் உணர்த்துவதன் மூலமாக வாசகனுக்கு கடத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் கதை வெற்றி பெரும்' என்று அருமையான கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இரண்டாம் நாள் காலை முதல் அமர்வில் மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பும் பேச்சும் அபாரமாக இருந்தது. 'கற்றுத் தரும் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் அவரது உரை இருந்தது. கதை என்பது நாம் கேட்டது, பார்த்தது, அனுபவித்தது  அத்தோடு நமது கற்பனை போன்றவற்றின் கலவையால் தான் உருவாக்குகிறோம். அது அதற்கான சரியான விகிதத்தை கலந்து கட்டமைத்தால் கதையின் உயிரோட்டம் நன்றாக இருக்கும் என்றார். கற்பனையாகினும் நம்பகத்தன்மை மிக முக்கியம் என்பதையும் தெளிவு பெற உரைத்தார்.  ஒரு கதையில் கதாபாத்திரத்தை உருவாக்குவதுதான் முதன்மையான சவால். அடுத்து கதையின் முதல் வரி. அதுதான் அக்கதையைத் திறக்கும் சாவி. வாசகனை முதல் வரியிலேயெ ஈர்த்து உள்ளிழுத்துச் செல்ல வேண்டும் என்பது போன்ற முக்கிய ஆலோசனைகளையும் கூறினார்.

அடுத்து வந்த பிரபல எழுத்தாளர் மாலன் அவர்கள் 'கதையும் கருவும்' என்ற தலைப்பில் மிகச் சிறப்பானதொரு கலந்துரையாடலுடன் தனது அமர்வை தொடங்கி வைத்தார். முதல் நாளே எழுத்தாளர் ”கு.அழகிரிசாமி” அவர்களின் படைப்பான 'குமாரபுரம் ஸ்டேஷன்' சிறுகதையை பிரதி எடுத்துக் கொடுக்கச் சொல்லி எங்களை எல்லாம் அதை படித்துவரும் படி கூறி இருந்தார். இவரின் இத்தகைய அர்பணிப்பு மிகவும் வியப்பை அளித்தது. அது மட்டுமல்லாமல் இதில் இருந்து என்ன கேட்பாரோ என்ன பேசச் செய்வாரோ என்ற ஆர்வத்தையும் தூண்டிவிட்டது. அவர் உரையில் 'கதையில் நாம் சொல்ல வந்த கருத்தை நேரிடையாகக் கூறாமல் அதில் வாசகர்களின் பங்களிப்பையும் சேர்க்க வேண்டும்.

வாசகனை யோசிக்க வைத்து அவனது பார்வையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். மொழி ஆளுமை என்பது கதைக்கு மிக முக்கியமான அம்சமாகும்' என்றும் கூறினார். குமாரபுரம் ஸ்டேஷன் கதையையே உதாரணமாகக் கொண்டு அதில் இருந்த சிறப்பு அம்சங்களைக் கூறி கதையின் கோணம் பரிமாணம் முடிவு போன்றவற்றை அரங்கில் இருந்த அனைவருக்கும் கலந்துரையாடல் மூலமாகவே மிக எளிமையாகப் புரிய வைத்தார்.

பயிற்சியில் பங்கு கொண்ட அனைவரையும் ஒரு சிறுகதையை சமர்ப்பிக்கச் சொல்லி அத்தோடு இல்லாமல் அக்கதைகள் சாகித்திய அகாதமியின் தொகுப்பில் இடம் பெறும் என்ற இன்ப அதிர்ச்சியையும் அளித்தார் சாகித்திய அகாடமியின் செயற்குழு உறுப்பினர் திரு. இரா. காமராசு அவர்கள்.

நூறு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து நிற்கும் சிறுகதை இலக்கியத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழின் மூத்த எழுத்தாளர்களுடனும் பன்முகத் தன்மை கொண்ட சிறந்த ஆளுமைகளுடனும் நடந்த இந்த பயிற்சி முகாம் எங்களைப் போன்ற இளம்/ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com