பாத்ரூம் கிளீன் செய்வதொன்றும் அவ்வளவு பெரிய அப்பா டக்கர் வேலையில்லை! 

அம்மாக்களுக்கோ, மனைவிகளுக்கோ, சகோதரிகளுக்கோ உடல் நிலை சரியில்லாத நாட்களில் மட்டுமேனும் ஆண்கள் இந்த துப்புரவுப் பணிகளை மேற்கொண்டால் வீடும் சுத்தமாகும், உறவுகளும் சுமுகமாகும். 
பாத்ரூம் கிளீன் செய்வதொன்றும் அவ்வளவு பெரிய அப்பா டக்கர் வேலையில்லை! 

 பாட்டி காலத்து சொல் வழக்கு ஒன்றுண்டு "ஒரு பெண்ணின் குணத்தை தெரிவு செய்ய முதலில் அவள் வீட்டு சமையலறை, குளியலறை சுத்தத்தைப் பார்க்க வேண்டும்" என்பார்கள். இரண்டுமே நமது உடல் நலன், மன நலன் இரண்டுடனும் தொடர்புடைய விசயங்கள் என்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம். அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” எனும் சிறுகதையில் வரும் பெண்களின்  நிலையெல்லாம் தாண்டி இன்று பெண்கள் வேலை நிமித்தம் எங்கெங்கோ உலகம் சுற்றும் வாய்ப்பு பெற்றவர்களான பின்னும் கூட இப்போதும் அவரவர் வீட்டு சமையலறையையும், குளியலறையையும் பெரும்பாலும் பெண்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் தான் நிலவுகிறது. வேண்டுமானால் வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். அவர்களும் பெண்களாகத் தான் இருப்பார்கள். 

நாங்களும் வார இறுதியில் எங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம் என்று ஆண்கள் யாரேனும் கிளம்பி வரக்கூடும். அவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவெனில்  வெறும்  ஃபேன் துடைப்பதாலும், ஒட்டடை அடிப்பதாலும், ஏ.சி சுத்தம் செய்தாலும் மட்டும் முழு வீடும் சுத்தமாகி விடாது. எல்லா நேரங்களிலும் கூடத் தேவை இல்லை, குறைந்த பட்சம் அம்மாக்களுக்கோ, மனைவிகளுக்கோ, சகோதரிகளுக்கோ உடல் நிலை சரியில்லாத நாட்களில் மட்டுமேனும் ஆண்கள் இந்த துப்புரவுப் பணிகளை மேற்கொண்டால் வீடும் சுத்தமாகும், உறவுகளும் சுமுகமாகும். 

அடடா! பெண்ணுரிமை, ஆணுரிமை ரேஞ்சுக்குப் பேசும் அளவுக்கு இதென்ன பெருமலையை சல்லியாக்கும் அத்தனை பெரிய அப்பா டக்கர் வேலையா? என்று சந்தேகமாக இருகிறதா? இல்லவே இல்லை மிக மிக எளிதான வேலைகள் தான் அதிலும் பள்ளி, கல்லூரிக் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்டங்களில் ஆண், பெண் பேதமின்றி நண்பர்கள் அனைவரும் இணைந்து ஜாலியாக துப்புரவுப் பணிகளை செய்து முடிப்போமே அப்படி நினைத்துக் கொண்டு நமது வீட்டு சமையலறை மற்றும் குளியலறைகளையும் வீட்டுப் பெண்களோடு இணைந்து சுத்தம் செய்யும் பழக்கத்தை தொடங்குவோமெனில் நமக்கடுத்த தலைமுறைக்கு அது ஒரு இனிமையான தொடக்கம். ஆமை வேகத்தில் நடந்தாலும் இந்த வகையான மாற்றங்கள் எல்லாம் குடும்பத்தின் நிம்மதிக்கு உத்திரவாதமளிப்பவை என்பதை மறக்கக் கூடாது. 

சரி இப்போது எளிமையாக குளியலறையை எப்படிச் சுத்தம் செய்வதென்று பார்க்கலாம்.

  • சுத்தம் செய்வதற்கு முதல் படி குளியலறையில் இருக்கும் அனாவசியமான பொருட்களை குப்பைத் தொட்டியில் தூக்கிக் கடாசுவது அதாவது ;
  • ஹேர் கிளிப்புகள், காலியான சோப்பு, ஷாம்பூ கவர் மற்றும் பாட்டில்கள்.
  • முந்தின நாள் கழட்டிப் போட்ட அழுக்குத் துணிகள்,
  • அம்மாக்கள் பத்திரப்படுத்திய சேஃப்டி பின்கள், சுவற்றில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.
  • அப்பாக்கள் தூக்கிப் போட மறந்த யூஸ் அண்ட் த்ரோ ஷேவிங் ரேஸர்கள் எல்லாவற்றையும் தான்.

இப்போது குளியலறையைப் பார்த்தீர்களென்றால் உள்ளே முழு அறையும் காலி செய்யப் பட்ட தோற்றம் தர வேண்டும்.

அடுத்து சுத்தம் செய்யத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டுமில்லையா? அவை என்னென்ன என்று ஒரு முறை சரி பார்த்து விடலாம்.

  • கைகளைப் பாதுகாக்க கையுறைகள்: ஹார்பிக், பிளீச்சிங் பவுடர், தரை அழுக்கு நீக்கும் திரவங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது கையுறைகள் அணிவது அவசியம். இதற்காக மட்டுமல்ல குளியலறையில் பெரும்பாலும் ஈரப்பதம் நீடிப்பதால் நுண்ணுயிர் கிருமிகள் வளர சாதகமுள்ள இடம் அது. அவை வெற்றுக் கைகள் மூலமாக எளிதில் உடலுக்குள் பரவும் வாய்ப்பைத் தரக்கூடாது ஆகவே கையுறைகள் அவசியம்.
  • பாதங்களைப் பாதுகாக்க வீட்டு உள் உபயோகத்துக்கென போட்டுக் கொள்ளும் செருப்புகளைப் பயன்படுத்தலாம்.
  • மூக்கு வழியே தூசு, அமிலங்களின் கார நெடி, துர்நாற்றம் முதலியவற்றால் ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க மூக்கை மறைக்கும் வகையிலான முகமூடிகளை அணிந்து கொள்ளலாம்.
  •  மீடியம் சைஸ் பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் மக் மற்றும் பேசின்.
  •  குளியலறைத் தரை மற்றும் சுவர்களைத் தேய்த்துக் கழுவ பெரிய சைஸ் பிரஸ், வாஷ் பேசின் சுத்தம் செய்ய நடுத்தர சைஸ் பிரஸ், பெருக்க தென்னந் துடைப்பம், ஒட்டடைக் கம்பு இத்யாதி...
  • வெஸ்டர்ன் டைப் டாய்லெட் லாவட்ரி எனில் இண்டு இடுக்கு அழுக்குகளை சுத்தமாகத் தேய்த்தெடுக்க பயன் தீர்ந்த பழைய டூத் பிரஸ்களை எடுத்துக் கொள்ளலாம். 
  • ஜன்னல் பக்கம் பொருத்தப்பட்டுள்ள ஸ்லைடிங் கண்ணாடிகளைத் துப்புறவாக சுத்தம் செய்ய சுத்தமான துணி மற்றும் ஸ்பிரே பாட்டில்கள். ஹேண்ட் ஷவர் இருந்தால் அதையும் கூட கண்ணாடி ஜன்னல்களைக் கழுவ பயன்படுத்திக் கொள்ளலாம்.

குளியலறைகளுக்கு பெரும்பாலும் பி.வி.சி கதவுகளே பொருத்தப்படுகின்றன. இவற்றை திரவ சோப் பயன்படுத்தியே எளிதில் சுத்தம் செய்து விடலாம். மாறாக மரக்கதவு அல்லது உலோகக் கதவு எனில் சுத்தம் செய்ததும் உடனடியாக கதவுகளை காற்றோட்டம் இருக்கும் வகையில் விரியத் திறந்து வைத்து அறையும் கதவுகளும் உலர்ந்ததும் மூடலாம். 

சுத்தம் செய்யும் முறை:

முதலில் குளியலறை முழுதும் ஒரு முறை வெறுமே தண்ணீர் விட்டு அலசவும். பின்னர் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹார்பிக் அல்லது ஏதாவதொரு தரமான குளியலறைத் திரவத்தை பயனாளர் குறிப்பில் சொல்லப்பட்டது போல குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டு நீரில் கரைத்து குளியலறை முழுதும் சுவர்கள், தரை, லாவட்ரி, வாஷ் பேசின் எல்லா இடங்களிலும் பரவுமாறு பெரிய பிரஸ் மூலம் பரவலாகத் தேய்த்து 10 லிருந்து 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். 

பொதுவாக இப்போதெல்லாம் லாவட்ரி சுத்தம் செய்ய தனி திரவம், சுவர்கள் மற்றும் தரை சுத்தம் செய்ய தனி திரவம், குளியலறை உலோகக் குழாய்களை பளிச்சென்று கழுவித் துடைக்க ஒரு திரவம், கண்ணாடி ஜன்னல்களைத் துடைக்க ஒரு திரவம் என்று தனித்தனியாக விளம்பரங்களில் காட்டுகிறார்கள். அவை நல்ல பலன் தந்தால் அவற்றையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் எந்த திரவமானாலும் அவற்றை நேரடியாகக் கைகளால் புழங்கக் கூடாது. கையுறை, காலுறை, முகமூடி உள்ளிட்ட இன்ன பிற கவசங்களைப் போட்டுக் கொண்ட பின்னரே குளியலறையைச் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்க வேண்டும்.

20 நிமிடங்கள் ஆனதும் மக்கில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக ஊற்றி மொத்த குளியலறையையும் நடுத்தர சைஸ் பிரஸ் வைத்து தேய்த்துக் கழுவினால் ஏற்கனவே ஹார்பிக்கில் ஊறி கரைந்த நிலையிலிருக்கும் மொத்த அழுக்கும் நீரோடு அடித்துக் கொண்டு விலகும். 

இதே உத்தியைப் பயன்படுத்தி கதவுகள், வாஷ் பேசின், ஜன்னல்கள், உலோகக் குழாய்கள் எல்லா இடங்களையும் இப்படியே சுத்தம் செய்யலாம்.

கழுவி முடிந்ததும் குளியலறையில் ஈரப்பதம் நீடிக்காது இருக்க கதவுகளை விரியத் திறந்து வெளிச்சமும், காற்றும் உள்ளே வரும் வகையில் உலர்வாக வைக்க வேண்டும்.

குளியலறையை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் சரி சுத்தப் படுத்தும் போதும் சரி ஈரப்பதம் இன்றி உலர்வாக வைத்திருப்பது முக்கியம். ஈரமான இடங்கள் நாளடைவில் கிருமிகளின் கூடாரமாக மாறி விட வாய்ப்புள்ளது. எனவே உலர வைப்பதன் பின் தான் துப்புரவாக்கும் வேலை முடிவு பெறும்.

இந்த முறையில் குறைந்த பட்சம் அரை மணி நேரத்தில் குளியலறையை புத்தம் புதிது போல பளீரிடும்படி படு சுத்தமாக ஜொலிக்க வைக்கலாம்.

இதில் ஆண், பெண் சமத்துவம் எங்கிருக்கிறதென்றால்?

இங்கே ஆண், பெண் சமத்துவம் எங்கே வருகிறது என்கிறீர்களா? வராவிட்டால் வரவழைத்து விட வேண்டியது தானே! முதலில் குளியலறையிலுள்ள பொருட்களை நீக்கி ஒட்டடை அடித்து பெருக்கும் வேலையை கணவர்கள் செய்யலாம். அடுத்து கழுவித் துடைக்கும் வேலையைப் மனைவிகள் செய்யலாம். உலர வைக்கும் வேலை எளிது ஆகவே அதை நமது குழந்தைகளிடம் ஒப்படைத்து விடலாம். அடுத்ததாக சரியாக சுத்தம் செய்திருக்கிறோமா! இல்லையா! என மேற்பார்வை பார்க்கும் வேலையை வயதில் மூத்தவர்களான மாமனார், மாமியார், அம்மா, அப்பா இப்படி யாரிடமாவது கையளிக்கலாம். இந்த முறை குளியலறைக்கு மட்டுமல்ல முழு வீட்டையும் சுத்தப்படுத்துதல், அவரவர் வாகனங்களைத் துடைத்துக் கழுவி காய வைத்தல், துணி துவைத்து உலர வைத்து அயர்ன் செய்து அடுக்குவது உட்பட எல்லா வேலைகளிலும் குடும்பமாக ஒரே நேரத்தில் ஈடுபாடு காட்டலாம்.

அவ்ளோ தாங்க... இதொன்றும் பெரிய அப்பா டக்கர் வேலையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com