சொந்த வீட்டில் சுகமாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

முண்டாசுக் கவிஞன் பாரதியின் அழகான வரிகளை தமிழராக பிறந்த ஒருவரும் மறக்க முடியாது. ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்ற பராசக்தியிடம் அவர் வேண்டுவது
சொந்த வீட்டில் சுகமாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

முண்டாசுக் கவிஞன் பாரதியின் அழகான வரிகளை தமிழராக பிறந்த ஒருவரும் மறக்க முடியாது. ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்’ என்ற பராசக்தியிடம் அவர் வேண்டுவது போல நாமும் அனுதினமும் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் காணி நிலம் கூட வேண்டாம், ஒரு சிறிய ப்ளாட் போதும் என்ற அளவில் வேறுபாடு உள்ளது.

வீட்டை கட்டிப் பார் கல்யாணத்தை முடித்து பார் என்று முன்பெல்லாம் சொல்வார்கள். பிரம்ம பிரயத்தனம் செய்துதான் அப்போது வீடு கட்ட வேண்டியிருக்கும். ஆனால் தற்போது எல்லாம் சுலபமாகவே நடந்து விடுகின்றது. வங்கிக் கடன், அந்தக் கடன் இந்தக் கடன் என பலவகையான கடன்களை வாங்கி பில்டர்களிடம் பணத்தைக் கொடுத்தால் போதும். மீதி விஷயத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். தனி வீடு என்பது குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில், நகரத்துக்கு உள்ளே அல்லது புறநகர்ப் பகுதியென்று அவரவர் வசதிக்கு ஏற்ப ஒரு ப்ளாட்டினை வாங்கிய பின் அதனை எப்படி அலங்கரிக்கலாம் என்று திட்டமிட வேண்டும்.

எலி வளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும் எனும் சொலவடைக்கு ஏற்ப நமக்கே நமக்கான ஒரு புத்தம் புது வீடு தயாராகிவிட்டது. இதில் நம்முடைய ரசனைகளுக்கு உயிர் கொடுத்து பார்த்து பார்த்து ஒவ்வொரு இடத்தையும் செதுக்கி உருவாக்கிக் கொள்ளலாம். அழகியலுடன் நம் முழுத் திறமையைக் கொட்டி அலங்கரிக்கப்படும் வீடு நமக்கு பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும்.

வீட்டை ரசனையுடன் அலங்கரித்தால் உள்ளே நுழையும் போதே நம்முடைய சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். ஏனோ தானோவென்று அலங்கரித்தால் வீட்டினுள் வரும்போதே நமக்கும் அந்த மனப்பான்மை தொற்றிக் கொள்ளும். எளிமையாக நமக்குத் தகுந்த வகையில் அலங்கரித்தல் நல்லது. ஒவ்வொறு பொருளையும் அதிக விலை கொடுத்து ஆங்காங்கே நிறுத்தி பொருட்களின் கூடாராமாக்கிவிட்டால் அது வீடல்லாமல் பொருள்காட்சியகமாக மாறிவிடும். நமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் சில அழகுப் பொருட்களையும் இணைத்து வீட்டை ரம்யமாக வடிவமைக்கலாம். வாழ்வின் பெரும்பகுதி அந்த வீட்டில்தான் நாம் கழிக்கப் போகிறோம். உழைத்துக் களைத்து வரும் போது அந்த வீடு தான் நம்மை மடியாகத் தாங்கிக் கொள்ளும். எனவே சிரத்தையுடன் வீட்டை அலங்கரித்தால் அது மனத்துக்கு சந்தோஷம் தரக்கூடியதாக மாறும். நமக்கேயான தேர்வுகள், பிரத்யேக ரசனைகள் மற்றும் ஆசைப்பட்ட விஷயங்களை செயல்படுத்தும் ஆற்றல்தான் இதற்கு முக்கியமாகத் தேவை.

வீட்டில் வளர் பருவத்தில் குழந்தைகள் இருந்தால், புது வீட்டின் சூழலை மேலும் மகிழ்ச்சி பெருகும் நந்தனவனமாக மாற்றிக் கொள்ளலாம். நம்முடைய அறையை பொறுமையாக அலங்கரித்துக் கொள்ளலாம். முதலில் பிள்ளைகளின் அறையை ஒழுங்குப்படுத்திவிட வேண்டும். குழந்தைகளின் அறையில் அழகியல் என்பது இரண்டாம்பட்சமாக இருக்கட்டும். முதலில் பாதுகாப்பு தான் முக்கியம். கண்ணாடி கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் என முழுக்க முழுக்க கண்ணாடியில் ஆன அறையை குழந்தைகளின் பயன்பாட்டுக்கு அமைத்துத் தர வேண்டாம். விளையாடும் போதோ அல்லது கோபத்திலோ அவர்கள் அதை உடைத்துவிடக் கூடும். அது எதிர்பாராத ஆபத்தை கொண்டுவந்துவிடலாம். மரக் கதவுகள், கைக்கு எட்டாத உயரத்தில் ஜன்னல்கள் இருக்கும்படியான அறை குழந்தைகளுக்கு ஏற்றது.

குழந்தைகளின் அறையில் உள்ள சுவர்களில் பளிச்சென்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிக்க வேண்டும். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி தந்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். அனேக குழந்தைகள் சுவற்றில் க்ரேயான்கள் கொண்டு வரைந்து தள்ளுவார்கள். அது அவர்களின் அறை. எனவே எதுவும் சொல்லவேண்டாம். அல்லது எளிதில் துடைக்கும் லெடெக்ஸ் வகைப் பெயிண்ட்களை உபயோகப்படுத்துங்கள். குழந்தைகள் பென்சிலால் கிறுக்கி வைத்திருந்தாலோ, அழுக்குக் கைகளை சுவற்றில் பதித்திருந்தாலோ எளிதில் அதனை துணி கொண்டு துடைத்து எடுத்துவிடலாம்

தரையைப் பொறுத்தவரை எளிதில் சுத்தப்படுத்தக்கூடிய வகையில் லாமினேட். டைல்ஸ், மரம் அல்லது லினோலியம் என எது ஏற்றதாகத் அந்த அறைக்கு உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுங்கள்.  

குழந்தைகளின் பாட புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள் போன்றவற்றை பத்திரப்படுத்த போதுமான அலமாரிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிள்ளைகள் அறையின் ஓரத்தில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு செல்வார்கள். அறையின் இடவசதி குறைவதோடு இல்லாமல் அழகையும் கெடுக்கும். எனவே அவர்களின் உடை, புத்தகம், மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்குத் தனித் தனியாக கப்போர்டுகள் தந்துவிடுங்கள்.

பர்னிச்சர்களும் அவர்களின் உயரத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் அமைத்துத் தாருங்கள். சிறிய சேர், எழுதப் படிக்க பயன்படும் மேஜை, புத்தக அலமாரி தேவைப்பட்டால் ஒரு சிறிய சோபா என்று சுட்டிகளின் விருப்பப்படி வாங்கிப் போடுங்கள். அவர்களது அறையை அவர்களே பராமரிக்க கற்றுக் தந்துவிடுங்கள். அவர்களின் பாடப் புத்தகங்களை மற்றும் விளையாட்டுப் பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்கக் கற்றுக் கொடுங்கள்.. எனக்கே டைம் இல்லை, என்னைப் போய் இதையெல்லாம் செய்ய சொல்றீங்க என்று உங்கள் பிள்ளைகள் அடம்பிடித்தால் அதை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். சில சமயம் ஒழுக்கம் போன்ற விஷயங்களைக் கற்றுத் தரும் போது ராணுவ விதிகளைத் தான் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்கள் நல்ல பிள்ளைகளாக மட்டுமில்லாமல் குடிமக்களாகவும் இருப்பார்கள்.

குழந்தைகளின் படுக்கை செளரியமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதிக வேலைப்பாடுகள் உள்ள பொருட்கள் எல்லாம் அவர்களுக்கு ஒருபோதும் தேவையில்லை. அடிப்படை வசதிதான் முக்கியம். அவர்களின் அறையில் ஒரு பாத்ரூம் இருக்க வேண்டும். அவர்கள் வளரும் வரை இரவில் பெற்றோர் அல்லது வீட்டுப் பெரியவர்கள் யாராவது அவர்களின் அறையில் இருக்க வேண்டும். காரணம் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டால் பயப்படுவார்கள். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான பிணைப்பு இல்லாமல் போகும். நாம் இத்தனை பாடுபட்டு உழைத்து ஒரு வீட்டினை கட்டி குழந்தைகளுக்கும் சுதந்திரமான ஒரு இடத்தை அமைத்துக் கொடுப்பது அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் உறவுகளுக்கும் பாசப் பிணைப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். வீட்டின் வெளிப்புறம் வெஸ்டர்னாக இருக்கலாம். நீங்கள் உண்ணும் உணவு கூட பாஸ்தா பர்கர் பீட்ஸா போன்ற வகையில் இருக்கலாம். ஆனால் நம் மனங்கள் இந்தியத் தன்மையுடன் எப்போதும் இருக்க வேண்டும். இப்படித்தான் சாப்பிட வேண்டும், இவ்வகையில் தான் உட்கார வேண்டும்,  இப்படித்தான் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர். நம்முடைய வேர்கள் ஆழமானவை. அந்நிய விஷயங்களில் கவரப்பட்டு சுகமான வெளிப்புற விஷயங்களில் ஈர்க்கப்படலாம். ஆனால் நம்முடைய நாட்டில் காலகாலமாக நமக்குச் சொல்லித் தரப்பட்ட விஷயங்களைப் புறக்கணிக்கக் கூடாது. எனவே குழந்தைகளை அரவணைத்து அவர்களின் இளம் மனத்தில் நம்முடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுங்கள். மாற்றம் வளர்ச்சி எல்லாமும் தேவை தான். அவை எதில் தேவை என்பதில் முதலில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அடுத்து வீட்டின் ஹால். வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைவாக வைத்திருப்பது அழகாகவும் பளிச்சென்றும் இருக்கும். தவிர ஹாலை விசாலமாகக் காட்ட உதவும்.

படுக்கை அறை, சமையல் அறை, பூஜை அறை போன்ற அறைகளை உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பொதுவான சில டிப்ஸ் :

  • பொருட்களின் விலை குறைவாக கிடைக்கிறது என்று தேவையற்றப் பொருட்களால் வீட்டை நிரப்பாதீர்கள். தேவை கருதியும், வீட்டின் அளவையும் நினைவில் நிறுத்தி பொருட்களை வாங்குங்கள்.
  • காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளுக்குள் அதிகம் உள்ளே வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 
  • எந்த சாமானை எங்கே வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படை தேர்வுமுறை உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் இல்லத்தை நீங்கள் அற்புதமாக்கிவிடுவீர்கள்.
  • அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு தேவைப்பட்டால் வீட்டு அலங்காரப் பொருட்களையும் வைத்து மெருகூட்டலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது வீட்டினுள் காற்று வெளிச்சம் வர வேண்டும்.

வீட்டை பிடித்த வகையில் அலங்கரித்தபின் சற்று சிரமமான விஷயம் அதைப் பராமரிப்பது. சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான் எனவே, வீட்டை சுத்தம் செய்ய நேரம் ஒதுக்குங்கள். சிலர் ஆரம்பத்தில் பார்த்து பார்த்து அலங்கரிப்பார்கள், நாளாக ஆக சலித்துப் போவார்கள். வீட்டுப் பராமரிப்பு என்பது நம்மையே பராமரித்துக் கொள்வது போலத்தான். சோம்பல் நிலை, அல்லது அலுப்பு வேலைக்காகாது. மேலும் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் அதற்கான நேரம் ஒதுக்குதல் என்பதும் சிரமம். நேரம் கிடைக்கும் போது இருவரும் சேர்ந்து வீட்டினை ஒழுங்குப்படுத்தலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சின்ன சின்ன மாற்றங்களை வீட்டினுள் செய்து பாருங்கள். பீரோ, சோஃபா, புத்தக அலமாரி ஆகியவற்றின் இடத்தை மாற்றிப் பாருங்கள். புதிய கர்டன்கள் வாங்கிப் போடுங்கள்.  சின்ன மாற்றம் கூட பளிச்சென்று தோன்றச் செய்யும்.

நம்முடைய வீடு ஒரு கோவிலாக இருக்க நம்முடைய எண்ணங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். நல்லதையே நினைத்து நல்ல சூழலை உருவாக்கினால் வீட்டில் சுபிட்சம் பெறுகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com