சோக்கிதானி போலாமா? : ராஜஸ்தானிய மாதிரி கிராமம்!

ஸ்ரீபெரும்புதூர் சாலையில் குயின்ஸ்லேண்ட் தீம் பார்க்கை அடுத்து தண்டலம் கிராமத்தை ஒட்டி உள்ளே பிரியும் சாலையில் பரந்து விரிந்து அமைந்திருக்கிறது, இந்த ராஜஸ்தானி மாதிரி கிராமம். 
சோக்கிதானி போலாமா? : ராஜஸ்தானிய மாதிரி கிராமம்!

வரவேற்பு:

சென்னையில் பொழுது போக்க பல இடங்கள் உள்ளன. ஆனால் இது அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உள்ளே நுழைந்ததும் நாம் ராஜஸ்தானுக்கே போய் விட்டதாகத் தான் ஒரு நினைப்பு வந்து போகிறது. உள்ளே நுழையும் முன்பு ராஜஸ்தானி வழக்கப்படி டோல் அடித்து சங்கீதத்துடன் ஆரத்தி எடுத்து மஞ்சள் அரிசிப் பொட்டு வைத்து உள்ளே அழைக்கிறார்கள். முகப்பில் டிக்கெட் வாங்க சற்று நேரம் செலவழிக்கையில் உட்கார்ந்து இளைப்பாற அழகழகான வண்ணக் குஷன்களுடன் கூடிய திண்டுகள், குழந்தைகளுக்கு அணிவித்துப் புகைப்படமெடுத்து மகிழத் தக்க ராஜஸ்தானிய பல வண்ணத் தலைப்பாகைகள், பல நிற சோழிகள் பதித்த அழகான பெட்டிகள் என்று முகப்பறை முழுதும் ஒரே கலைடாஸ்கோப் எஃபெக்ட்!

கட்டணம்:
பெரியவர்களுக்கு ஜங்கிள் சஃபாரி உட்பட ஒரு டிக்கெட் 750 ரூபாய்கள். குழந்தைகளுக்கு என்றால் 450 ரூபாய்களாம். உள்ளே நாம் குடும்பத்துடன் பார்த்து மகிழ, ரசித்து அனுபவிக்க ஏகப்பட்ட சாய்ஸ்கள் வைத்திருக்கிறார்கள். என்னென்ன தெரியுமா?

முதலில் ராஜஸ்தான் ரொட்டியும் வெல்லமும்:
உள்ளே நுழைந்ததும் உண்டாக்கப் பட்ட மாதிரி கிராமத்தின் ஓரிடத்தில் கணவனும், மனைவியுமாக ஒரு குடும்பம் சுடச் சுடப் ஃப்ரெஷ் ஆக ரொட்டி சுட்டுத் தருகிறார்கள், தொட்டுக் கொள்ள வெல்லம். ஒரு நபருக்கு ஒரு ரொட்டி தான் தருவார்கள். வித்தியாசமான சுவையுடன் சாப்பிடத் தகுந்த அளவில் இருக்கிறது. உட்கார்ந்து சாப்பிட கயிற்றுக் கட்டில் வேறு. மாலை நேரம்... இப்படி கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு சூடாக எதை உண்டாலும் பிடித்துத் தான் போகிறது.

ஜல்ஜீரா வெல்கம் ட்ரிங்:

ரொட்டி சாப்பிட்டு முடித்தால் அடுத்ததாக வெல்கம் டிரிங் என்ற பெயரில் ஜல்ஜீரா தருகிறார்கள். நீரில் மிளகுத் தூளும், வெல்லமும், சீரகமும் கலப்பார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் காரமாக இருந்தாலும் உடம்புக்கு நல்லதாம். அதைக் குடித்து முடித்தோமென்றால் கழைக்கூத்து பார்க்கலாம்.

கழைக்கூத்து:


பாட்டுப் பாடிக் கொண்டே இருவர் வாணி, ராணி படத்து வாணிஸ்ரீ போல கயிற்றின் மீது நடந்து காட்டுகிறார்கள். உட்கார்ந்து பார்க்க வசதியாக பிளாஸ்டிக் நாற்காலிகளும், கயிற்றுக் கட்டில்களும் கிட்டும்.

பானை செய்ய கற்றுத் தருகிறார்கள்:
குயவர்கள் சக்கரம் சுழற்றி பானை செய்வார்களே அதே போல குட்டிக் குட்டியாக மினியேச்சர் பானைகள், கார்த்திகை விளக்குகள் போன்றவற்றை நாமே நம் கைகளால் வனையக் கற்றுத் தருகிறார் ஒருவர்.  

போட்டிங்:
அங்கிருந்து நகர்ந்தால் ஒரு செயற்கை குளம் வருகிறது. சின்னக் குளம், நான்கைந்து சிறு போட்டுகளும் உண்டு, விரும்பினால் போட்டிங் போகலாம், நன்றாகத் தான் இருக்கிறது. அடுத்ததாக எங்கள் பாஷையில் சொல்வதென்றால்; 

குளக்கரை நடனம்:

டோலும், தபேலாவும் வைத்துக் கொண்டு நான்கைந்து ராஜஸ்தானி இளைஞர்கள் குளத்தின் மேலுள்ள மண்டபத் திண்டில் அமர்ந்து கொண்டு ராஜஸ்தானி கிராமியப் பாடல்கள் பாடுகிறார்கள், அவர்களில் ஒருவர் அந்தப் பாடலுக்கு ஏற்ப நடனமாடுகிறார். பார்வையாளர்களுக்கு விருப்பமெனில் நாமும் அந்த இளைஞரோடு சேர்ந்து அவரைப் போலவே நடனமாடலாம். வெறும் 10 வினாடிகள் தான். ஆனால் கலகலப்பானவர்களுக்கு, நடனமாட விரும்புபவர்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு. சொல்லப் போனால் ‘ஸ்ட்ரெஸ் ரிலீவர்’ என்றும் கூடச் சொல்லலாம். ஆடி முடித்து அந்த இளைஞர்களைப் பாராட்டி விட்டு அடுத்த இடத்தை நோக்கி நகரும் போது மனம் மிக லேசாகி விடுகிறது. இவை தவிர உள்ளே;

ராஜஸ்தானி பாட் டான்ஸ்:

(தலையில் அடுக்கடுக்காக பானைகளை அடுக்கி வைத்துக் கொண்டு; அவை கீழே விழாமல் இளம்பெண்கள் ஆடுகிறார்கள்)

மேஜிக் ஷோ: இது வழக்கமான மேஜிக் ஷோ போலத்தான் இருக்கும், குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

பரமபத விளையாட்டு:

இதில் பகடைக் காய்கள் நாம் தான். திறந்த வெளியில் சிமெண்ட் தளத்தில் சற்றுப் பெரிதான பரமபதப் பலகை வரையப் பட்டிருக்கிறது, பகடைகளாக நாமே பாம்பு கொத்தி இறங்கி ஏணியில் ஏறி மேலே போவதுமாய் ஒரு ரகளையான அனுபவம்.

பொம்மலாட்டம்:

ராஜபுத்திர ராஜாக்களின் கதைகளை மையமாக வைத்தும், அங்கே புழக்கத்தில் இருக்கும் கிராமியக் கதைகளை மையமாக வைத்தும் பொம்மலாட்டக் கச்சேரியும் நடைபெறுகிறது. இதுவும் குழந்தைகளுக்கு வித்யாசமான அனுபவமாகத் தான் இருக்கும். இன்றைய குழந்தைகள் பொம்மலாட்டம் பார்க்க இப்படியெல்லாம் வாய்ப்புக் கிடைத்தால் தான் உண்டு.

பலூன் ஷூட்டிங்: சென்னை மெரினா பீச் போல இங்கேயும் குழந்தைகள் பலூன் ஷூட் செய்ய வரிசை கட்டி நிற்கிறார்கள். எல்லா பலூன்களையும் துல்லியமாக குறிபார்த்து சுட்டு உடைக்க முடிந்தால் பெரியவர்களுக்கும் கூட சந்தோஷமாகத் தான் இருக்கிறது. 

மெகந்தி:

தலையில் முக்காடிட்டு அமர்ந்திருக்கும் ஒரு ராஜஸ்தானிப் பெண் தன்னிடம் கை நீட்டும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சலிக்காமல் மெகந்தி போட்டு விடுகிறார். போட்டு முடித்த ஐந்தே நிமிடத்தில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்கிறது.
இவை தவிர ஸ்பெஷல் சவாரிகள் வேறு உண்டு.
என்னென்ன தெரியுமா?
மாட்டு வண்டிச் சவாரி: பட்டிக்காடா, பட்டிணமா படத்தில் சிவாஜியும், ஜெயலலிதாவும் மாட்டு வண்டியில் ரேஸ் போவார்கள். அதெல்லாம் அந்தக் காலம், ஏதோ நம்மாலானது இங்கே குடும்பத்தோடு மாட்டு வண்டியில் உட்கார வைத்து ஒரு ரவுண்டு அழைத்துச் சென்று இறக்கி விடுகிறார்கள். மாடுகளின் சலங்கைச் சத்தம் காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கிறது. வண்டிச் சவாரியும் சோடையில்லை.

குதிரை வண்டிச் சவாரி:
மாட்டு வண்டியை விட இதில் கொஞ்சம் வேகம் ஜாஸ்தி. மற்றபடி ஜட்காவில் போனவர்களுக்கு இதுவும் ஒரு மலரும் நினைவுகளுக்கான வாய்ப்பு.

குதிரைச் சவாரி: (அதாவது தனிக் குதிரையில் நம்மை நாமே ராஜா  போலவும், ராணி போலவும் நினைத்துக் கொண்டு அவர்கள் அனுமதிக்கும் குறிப்பிட்ட எல்லை வரை தனியாக உல்லாசமாகச் சவாரி போய் வரலாம். சவாரி போய் கொண்டிருக்கையில்  பயத்தில் அடிவயிறு கலங்கினால் அதற்கு இந்தக் கட்டுரை பொறுப்பேற்காது :) எல்லாம் ஒரு சாகஷ அனுபவத்திற்காகத்   தான்.
ஒட்டகச் சவாரி:

ஒரு முறைக்கு மூன்று பேர் வரை போகலாம். அருமையான அனுபவம். ஆனால் சந்தோஷம் ஏறும் நபர்களின் எடையைப் பொறுத்தது. கூடுமானவரையில் ஒட்டகம் மூட் அவுட் ஆகாத நேரம் பார்த்து சவாரி போவது நல்லது. இல்லையேல் பயத்தில் ‘ஐயய்யோ பெருமாளே காப்பாத்து’ என்று கத்திக் கூப்பாடு போட்டு தனக்குத் தானே மானத்தைக் கப்பலேற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் நாமே உருவாக்கி விடவும் வாய்ப்புகளுடைய அதிசயமான அனுபவம். யானைச் சவாரி போலல்ல இது அதை விட வித்தியாசமாக இருக்கிறது.

கடைசியாக ராஜஸ்தானி தாளி டின்னர்:

ஆகா அபாரம்! கீழே போடப்பட்ட குஷன்களில் அமர்ந்து கொண்டு அழகான மனைகளில் தாம்பாளம் போன்ற பெரிய தட்டுகளில் விதம் விதமாக பரிமாறப் படும் ராஜஸ்தானி தாலி டின்னர் வகைகளை ருசித்து சாப்பிடலாம். தால் கச்சோரி, பூரி, பாஸந்தி, சோனே ஹல்வா, நாண், வெரைட்டி ரைஸ், கிச்சடி, ஸ்வீட் தகி, ஸ்வீட் பீடா என்று வெரைட்டியாகப் பரிமாறுகிறார்கள். சிலருக்கு இப்படி வித்தியாசமாகச் சாப்பிட ஆர்வமிருக்கும், சிலர் விரும்புவதில்லை. ஆர்வமுள்ளவர்களை இந்த மெனு நிச்சயம் ஏமாற்றாது.

உண்ட மயக்கத்தின் ஏகாந்தம்!

சாப்பிட்டு முடிந்ததும். வெளியே வந்தால் பெரிய முற்றத்தில் நிறைய கயிற்றுக் கட்டில்கள், நார் கட்டில்கள், பிரம்பு மோடாக்கள் என்று போட்டு வைத்திருக்கிறார்கள், ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்ற கதையாக கொஞ்ச நேரம் அப்படியே அதிலொன்றில் சாய்ந்து கொள்ளலாம். இயற்கைக் காற்றோ, ஃபேன் காற்றோ ஏதோ ஒன்று கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வருகிறது. பத்திருபது நிமிடங்கள் இப்படி ஓய்வெடுத்து விட்டு வெளியில் ஊஞ்சல் பலகை கூட இருக்கிறது, அதில் சற்று ஆடி விட்டு வீடு வந்து சேரலாம்.

சென்னையில் இருந்து சோக்கிதானி செல்லும் வழித்தடம்:
பூந்தமல்லி மேம்பாலத்தில் இருந்து - 9 கிமீ
கோயம் பேடு மேம்பாலத்தில் இருந்து- 19 கிமீ
கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து- 18 கி.மீ
ஜெமினி மேம்பாலத்திலிருந்து- 27 கிமீ

ஸ்ரீபெரும்புதூர் சாலையில் குயின்ஸ்லேண்ட் தீம் பார்க்கை அடுத்து தண்டலம் கிராமத்தை ஒட்டி உள்ளே பிரியும் சாலையில் பரந்து விரிந்து அமைந்திருக்கிறது, இந்த ராஜஸ்தானி மாதிரி கிராமம். 

பார்வையாளர்கள் நேரம்: மாலை 4 மணிக்கு மேல் தான் உள்ளே அனுமதிக்கப் படுகிறார்கள். 4 மணி முதல் 10 மணி வரை. பள்ளி அல்லது கல்லூரி மூலமாக பேக்கேஜ் டூர் என்றால் பகலிலும் உள்ளே அனுமதி உண்டு போலும்.

முன்பே அங்கு சென்று வந்தவர்கள் என்றாலும் சரி. இனிமேல் செல்லவிருப்பவர்கள் என்றாலும் சரி இந்த இடம் சார்ந்த உங்களது கருத்துகள் மற்றும் சந்தேகங்களை எங்களுக்கு கருத்துப் பெட்டியில் தெரிவிக்கலாம்.

பயணங்கள்  பயனுள்ள வகையில் சிறக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com