சிவாலயம் எழுப்பினால், குழந்தைபேறு நிச்சயம்!

அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு பிரஷன்னநாயகி...
சிவாலயம் எழுப்பினால், குழந்தைபேறு நிச்சயம்!

அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு பிரஷன்னநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் கோயிலில் ரூ. 3.75 கோடியில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழபேரரசின் ஒரு பகுதியாக செந்துறை இருந்தது. அப்போது மாமன்னர் ராஜராஜசோழனின் நண்பர்களில் ஒருவரான பழுவேட்டையர்களின் கட்டுபாட்டில் இந்தப் பகுதி இருந்தது. இது அடர்ந்த வனப்பகுதி என்பதால் நெய்வனம் எனவும் அழைக்கப்பட்டது. இந்த வனத்தில் இருந்த மகாசித்தரை சந்தித்த பழுவேட்டையர் தனக்கு வாரிசு இல்லாததை சொல்லி வருந்தினார். அவரிடம் சித்தர், இங்கு ஒரு சிவாலயம் எழுப்பினால், சிவன் அருளால் குழந்தைபேறு கிடைக்கும் என வரமளித்தார். 


அதன்படி, ராஜராஜசோழனிடம் உத்தரவு பெற்ற பழுவேட்டையர், சிவ ஆலயம் எழுப்பியதோடு இப்பகுதி மக்களுக்கு வரிவிலக்கும் அளித்தார். அதன்பிறகு அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

ராஜராஜசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியார் கோயில் கட்டுமானப் பணியை பார்வையிட்டு மூலவருக்கு மகாதேவர் என பெயர் சூட்டினார் என தலவரலாறு கூறுகிறது. இக்கோவிலில் வழிபட்ட மக்கள் இறைவனை தீர்க்கபுரிஸ்வரர் என்றும், சிவதாண்டேஸ்வரர் என்றும் காலபோக்கில் அழைக்கத்தொடங்கினர்.

இந்த சிவன் கோவிலின் தீவிர பக்தர்கள் பலர் தங்களது நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை கோயில் பெயரில் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளனர். தற்போதும் செந்துறை நகரின் பெரும்பகுதி சிவன்கோயில் சொத்துகளாகவே உள்ளன. 1000 ஆண்டுகள் பழைமையான இக்கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சிவன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு செய்து, சுமார் ரூ. 2.75 கோடி நிதி திரட்டினர்.

அந்த நிதி மூலம் மூன்றாண்டுகளுக்கு முன்பு ராஜகோபுரம் கட்டும் பணியை தருமபுரம் ஆதினம் முத்துகுமரசாமிகள் தம்பிரான் தொடக்கி வைத்தார். 
அறநிலையத் துறை வழிகாட்டுதல்படி, திருஞானசம்பந்தர் அறக்கட்டளை சிவனடியார்கள் மேற்பார்வையில், கோவை சிவபிரகாச சுவாமிகள், திருவடிக்குடில் சுவாமிகள், பக்தவச்சலம் சுவாமிகள், பிரம்மரிஷி மலை ராஜ்குமார் சுவாமிகள், உளுந்தூர்பேட்டை சுவாமிகள் அருளாசியோடு ராஜகோபுர பணிகள் சிறப்பாக நடைபெற்று 5 நிலைகளை கொண்ட 81 அடி உயரம் உள்ள ராஜகோபுரமும், 3 நிலைகளை கொண்ட மைய கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டது.

ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. சுப்ரமணிய சிவாச்சாரியர், உமாபதி குருக்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் 3 நாட்களாக ஆறுகால யாகபூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து, 27.08.17 ஞாயிற்றுக்கிழமை காலை ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனர். விழாவின் முடிவில், திருஞான சம்பந்தர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ரத்தினசபாபதி குடமுழுக்கு விழா மலரை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com