இந்துமத அற்புதங்கள் 52 - வெப்பம் தணித்த வெண்ணீறு

மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் மன்னன் பராங்குச அரிகேசரியாகிய நின்றசீர் நெடுமாறன்.
இந்துமத அற்புதங்கள் 52 - வெப்பம் தணித்த வெண்ணீறு

மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் மன்னன் பராங்குச அரிகேசரியாகிய நின்றசீர் நெடுமாறன். அவனுடைய அரசமாதேவி வளவர்கோன் பாவையான மங்கையர்க்கரசியார். மதுரையின் அமைச்சர் குலச்சிறையார்.

இறைவன் - சோமசுந்தரக்கடவுள், சொக்கலிங்க நாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் 
இறைவி - மீனாட்சி, அங்கயற்கண்ணி.

பாண்டிமாதேவியின் அழைப்பின் பேரில் மதுரையம்பதிக்கு வருகை புரிந்திருந்தார் திருஞானசம்பந்தர். அப்போது, மன்னனுக்கு "வெதுப்பு' என்கிற உடல் வெப்பு நோய் கண்டது. உடல் முழுவதும் நெருப்பாய்க் கொதித்து வாட்டியது. அனலிடைப்பட்ட புழுவாக மன்னன் துடித்தான். பல்வேறு வழிகளில் நோய் தீர்க்க முயற்சிகள் மேற்கொண்டும் பயனில்லை.

பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்டுகோள் விடுக்க மன்னன் நோய் போக்க வந்தார் ஞானசம்பந்தப் பெருமான். மன்னன் உடலில் திருநீறு பூசி, ஆலவாய் அண்ணலாம் சொக்கநாதப் பெருமானை நினைத்து பதிகம் பாடினார். அனலும் கனலுமாய் வெந்த மேனி, திருநீறு பூசப்பூசக் குளிர்ந்து மென்மையாவதை உணர்ந்தான் மன்னன் நெடுமாற பாண்டியன்.

நான்மாடக் கூடலாம் மதுரையில் மன்னனின் நோய்தீர, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் (திருநீற்றுப் பதிகம்)

"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே.''

மதுரை தலத்தினைச் சென்றடையும் வழி:
புகை வண்டி நிலையம். தமிழகத்தின் தலைசிறந்த பெரிய நகரங்களுள் ஒன்று. தென்பாண்டி நாட்டின் தலைநகர். தமிழ் வளர்த்த தலம். வைகைக் கரையில் அமைந்த வளமிக்க பதி. மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் புகை வண்டிகள் மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் வருவதற்கு நிரம்ப வசதிகள் உள்ளன. இத்தலத்தின் சொக்கேசர் ஆலயத் திருநீற்றை மருந்தாக எண்ணிப் பயன்படுத்துகின்றனர் மக்கள். இன்றும் பல நோய்களுக்கு மருந்தாக, திருநீற்றை உடலில் பூசுவதையும் உள் அருந்துவதையும் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com