இந்துமத அற்புதங்கள் 52: ஏங்கிய பாட்டும் நீங்கிய நஞ்சும்

திங்களூரில் வாழ்ந்த திருத்தொண்டர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது மிகுந்த மதிப்பும் பக்தியும் கொண்டு
இந்துமத அற்புதங்கள் 52: ஏங்கிய பாட்டும் நீங்கிய நஞ்சும்

திங்களூரில் வாழ்ந்த திருத்தொண்டர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது மிகுந்த மதிப்பும் பக்தியும் கொண்டு தன் மகன்களுக்கும், தான் வைத்த தண்ணீர்ப் பந்தல், கேணி போன்றவற்றுக்கு திருநாவுக்கரசர் பெயரே வைத்துப் பேணி அறங்கள் செய்து வந்தார். திங்களூருக்கு வந்த நாவுக்கரசர், அப்பூதி அடிகளின் அன்பு கண்டு அகமகிழ்ந்து அவர் இல்லத்துக்கும் சென்றார்.

இறைவன் - கைலாசநாதர்
இறைவி - பெரிய நாயகி

மிகவும் மகிழ்ந்த அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை வரவேற்று உபசரித்தார். பெருந்தவசீலராம் நாவுக்கரசருக்கு உணவு படைக்க விரும்பி, அதற்கான ஆயத்தங்கள் செய்தார். சோறும் அமுது வகைகளும் தயாரானபின், பெருமகனார்க்கு உணவிட வேண்டி, தன் மூத்தமகனாம் மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் தோட்டத்திலிருந்து வாழையிலை பறித்து வரச் சொன்னார்.

வாழையிலை பறிக்கையில் அச்சிறுவனைப் பாம்பு தீண்டியது. ஓடி வந்து வாழையிலையைத் தாயிடம் தந்த அந்தப் பிள்ளை, விஷம் ஏற ஏற கீழே விழுந்து இறந்தான்.

அடியார் உணவருந்தத் தடை வரக் கூடாது என்று நினைத்து, மகன் இறந்த செய்தியைச் சொல்லாது, அடியவரை உணவுக்கு அழைத்தனர். "மூத்த திருநாவுக்கரசு எங்கே?' என விசாரித்து உண்மையை உணர்ந்து கொண்ட நாவுக்கரசர், இறந்த பாலகனின் சடலத்தைத் தூக்கிக் கொண்டு சிவபெருமான் திருக்கோயிலுக்குச் சென்றார். திருச்சந்நிதி முன் மூத்த திருநாவுக்கரசு சடலத்தைக் கிடத்தி பதிகம் பாடினார். அவர் பாடப் பாட விஷம் குறைந்தது. துள்ளும் பிள்ளையாய்ப் பாலகன் விழித்தெழுந்தான்.

திங்களூர் தலத்தில் பாம்பின் விஷமிறக்க வேண்டி நாவுக்கரசர் பாடிய பதிகம்
"ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர்
  ஒன்று கொலாம் இடுவெண்டலை கையது
  ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே''

இத்தலத்தினைச் சென்றடையும் வழி:
திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துச் சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் திங்களூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் இறங்க வேண்டும். கை காட்டும் பாதையில் (இடப்புறமாக) உள்ளே சென்றால்  திங்களூரை அடையலாம். கோயில் ஊர்க் கோடியில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com