சுந்தரர் திருப்பதிகம் பாடி "பொன் புளியங்காய்" பெற்ற திருத்தலம்

சுந்தரர் காஞ்சியின் பல தலங்களை பாடிய பின் திருவோணகாந்தன்தளியில் எழுந்தருளும் பெருமானை வணங்கி உரிமையோடு தோழமைத்திறம்...
சுந்தரர் திருப்பதிகம் பாடி "பொன் புளியங்காய்" பெற்ற திருத்தலம்

சுந்தரர் காஞ்சியின் பல தலங்களை பாடிய பின் திருவோணகாந்தன்தளியில் எழுந்தருளும் பெருமானை வணங்கி உரிமையோடு தோழமைத்திறம் பேசி, பொன்வேண்டிப் பாடிய தலம் இதுவாகும்.

ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு மேற்கில், சர்வ தீர்த்தத்திற்கு வடமேற்கில் பஞ்சுப் பேட்டை அருகில் உள்ளது திருக்கோயில். சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம். சிறிய ஆலயம்தான். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. முகமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய அழகிய கருவறை.   

ஓணன் - காந்தன் வழிபட்டது. வாணாசுரனின் சேனைத் தலைவர்களான ஓணன், காந்தன் ஆகிய இருவரும் வழிபட்ட திருத்தலம். இவ்விருவரும் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள், அடுத்தடுத்த சந்நதிகளில் உள்ளன. ஓணன் வழிபட்ட ஓணேசுவரர், காந்தன் வழிபட்ட காந்தேசுவரரோடு, ஜலந்தரன் என்ற அசுரன் வழிபட்ட ஜலந்தரேசுவரருக்கும் தனிச் சந்நதி உள்ளது.

“பொன் தரும் பதிகம்’
“நெய்யும் பாலும் தயிரும் கொண்டு’ என்று துவங்கும் பாடலைப் பாடி சுந்தரமூர்த்தி நாயனார் பொன்பெற்றார் என்பது வரலாறு.

ஐந்தாவது பாடலை சுந்தரர் பாடத் துவங்கியபோது இறைவன் அருகில் உள்ள புளியமரத்தில் சென்று ஒளிந்து கொண்டார். அதனைக் கண்டு கொண்ட சுந்தரர் மரத்தின் கீழ் நின்று பதிகத்தைத் தொடர்ந்து பாடினார். சுந்தரரின் பாடலில் மனமுருகிய ஈசன், புளியமரத்தின் காய்களை உதிர்க்க, அவை "பொன் புளியங்காய்களாக" கீழே விழுந்தனவாம். அந்தப் பொன்னைக் கொண்டே ஈசனுக்கு அழகிய ஆலயம் எழுப்பி வழிபட்டார் சுந்தரர்.   

“வயிறு தாரிப் பிள்ளையார்’ என்று தனிச் சந்நதியும் உள்ளது. சுந்தரர் பாடலில் இடம் பெற்றுள்ளார் இந்த அதிசய விநாயகர். ஆலயத்திற்கு வெளியே வலப்புறம் அமைந்துள்ளது தான்தோன்றி தீர்த்தம். தலமரம் - புளியமரம் சிறியதாய் உள்ளது. வயிறு தாரி பிள்ளையாரின் இடது புறம் சப்த நாகர் சன்னதியும், முருகன் சன்னதியும் உள்ளன.

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com