ஆரூரா தியாகேசா பக்தி கோஷத்துடன் அசைந்தாடி வீதி வலம் வந்த திருவாரூர் ஆழித்தேர்!

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் காமராஜ்.....
ஆரூரா தியாகேசா பக்தி கோஷத்துடன் அசைந்தாடி வீதி வலம் வந்த திருவாரூர் ஆழித்தேர்!

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித் தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேரோட்டத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்றார்.

ஆரூரா தியாகேசா என்ற பக்தி கோஷத்துடன் அசைந்தாடி வீதிவலம் வந்தது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர்.

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற சங்க கால நூல்களில் தேர் பற்றிய தகவல்கள் உள்ளன. அக்காலத்தில் கோயில் தேர்களுடன் மன்னா்களின் தேர்களும் புழக்கத்தில் இருந்தது. தற்போது திருவிழா காலங்களில் இறைவன் வீதியுலா வரும் தேர்கள் மட்டுமே உள்ளது.

அழகிய கலைநயம்மிக்க கோயில்களைக் கட்டிய மன்னர்கள் இறைவன் பவனிவர அழகிய தேர்களையும், சப்பரங்களையும் உருவாக்கினார்கள்.

பின்னர் தேரோடுவதற்கு வசதியாக அகலமான தெருக்களையும் அமைத்தனர். இத்தெருக்கள் கீழ ரதவீதி, மேல ரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி என்றே அழைக்கப்படுகிறது. கி.பி. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சேக்கிழார் பெரியபுராணத்தில் ஓரிடத்தில் தேரோடும் நெடுவீதி திருவாரூர் வாழ்வாரும் என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து அப்போதே நீண்ட அகலமான தேரோடும் வீதிகள் இருந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

உலக பிரசித்திபெற்ற பிரமாண்டமான தமிழகத்தில் ஆழித்தேர்கள் என கூறப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேர்களில் முதலிடத்தை பிடித்திருப்பது திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேராகும். சிவன் கோயிலுக்குரிய உத்தமதாளம் எனப்படும் 10 தாள அளவில் வடிவமைக்கப்பட்டது இந்த ஆழித்தேர்.

3 நிலைகளை தாண்டி சுவாமி அமரும் பீடம்,அதற்கு மேலே 4 புறவாசலில் வாசனை மாலை கள், விதானத்தில் சுவாமியின் கதைகளை கூறும் புராண கலங்காரி (துணி) ஓவியங்கள், 4 புறமும் தொம்பைகள், அதற்கு மேல் 8 புறமும் துணியால் ஆன பட்டங்கள் மேலே சிகரமாக கும்பம், 8 திசைகளிலும் சிவன் கொடிகளான ரிஷபகொடிகள் என பிரமாண்டமான தோற்றம் கொண்டது ஆழித்தேர்.

தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதியார், இயற்பகையார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் போன்ற 63 நாயன்மார்களின் புராண சிற்பங்களும், பெரியபுராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராண காட்சிகள் மரத்தில் புடைப்பு சிற்பங்களாக தேரின் 3 நிலை கொண்ட அடிப்பாகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அழகியத்தேரும் கோயிலும் குளமும் கொண்டத் திருத்தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தலையாய சிறப்புகளில் ஒன்று ஆழித்தேர் விழா. வீதிவிடங்கனாம் தியாகராஜர் திருவீதிகளில் தேர்மேல் எழுந்தருளும் திருவிழாவே அப்பெருவிழா. தொன்மைத் தமிழர்கள் நிகழ்த்திய, ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேர் என்ற பெருமையை பெற்ற அந்த ஆழித்தேர் விழாதான் தற்போது நடைபெற்று வருகிறது.

தேரோட்டத்துக்காக கடந்த ஒரு மாதமாக தேர்க்கட்டும் பணியான மூங்கில், பனஞ்சப்பைகள் செருகி கட்டும் பணி நடைபெற்றது. தேரில் அமைக்கப்படும் குதிரைகள், ரிஷபவாகனம், யாளம், பாம்புயாளம், துவாரபாலகர், பெரியகத்திகேடயம், பூக்குடம், ராஜா ராணி, கிழவன் கிழவி உள்ளிட்டப் பொம்மைகள் தயார் செய்யப்பட்டு தேர்களில் பொம்மைகள் பூட்டுவது, குதிரைகள் பூட்டுவது, தேரின் மேற்பகுதியில் கலசங்கள், தேர்ச்சீலைகள், தொம்பைகள், அலங்காரத் தட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

கடந்த காலங்களில் ஆழித்தேர் புறப்படும்போது விநாயகர், சுப்பிரமணயர், அம்மன், சண்டிகேசுவரர் ஆகிய 4 தேர்களாக புறப்படும் வழக்கமாம். கடந்த 2016-ம் ஆண்டு ஆழித்தேருக்கு முதல் நாள் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. அதேபோல் நிகழாண்டும் ஞாயிற்றுக்கிழமை விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது.

முக்கிய விழாவான ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு வாணவெடிகள் வெடிக்க இசை வாத்தியங்கள் இசை முழக்கத்துடன் ஆரூரா தியாகேசா என்ற பக்தி கோஷத்துடன் தேரோட்டம் தொடங்கியது. 400 அடி கொண்ட 4 வடக்கயிற்றை பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட 96 அடி உயரத்திலான பிரமாண்டமான ஆழித்தேரை வடக்கயிற்றால் இழுத்து வந்த அழகே பேரழகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com