மனக்குழப்பம் அகல யாரை வணங்க வேண்டும்?

ஏதேனும் ஒரு காரியத்தில் இறங்கினால் செய்யலாமா...வேண்டாமா. அப்படிச் செய்தால் சரியாக வருமா....
மனக்குழப்பம் அகல யாரை வணங்க வேண்டும்?

ஏதேனும் ஒரு காரியத்தில் இறங்கினால் செய்யலாமா...வேண்டாமா. அப்படிச் செய்தால் சரியாக வருமா என்று யோசித்து யோசித்து கடைசி வரை முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்? அப்படியானால் கட்டாயம் இதை படிங்க...

மனோகாரகன் என்று அழைக்கப்படுபவர் சந்திரன். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் காட்சி கொடுப்பவர்.

பாற்கடல் கடையும் போது சந்திரனின் பிரகாசம் தேவர்களின் கண்களைக் கூச வைத்ததாம். அன்று முதல் சந்திரனை ஒரு கிரகமாக அறிவித்து, அதனை சிவபெருமான் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரன் என்று பெயர் பெற்றார். சந்திரன் மிகவும் இளமையானவரும், அழகானவரும் கூட.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பலன் குறைந்திருந்தால் அல்லது பகை கிரகத்துடன் இருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். சந்திரன் கோட்சார ரீதியாக 1, 3, 6, 7, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும்.

சந்திரன் ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதையே நாம் சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் (மனம் தொடர்புடையவர்) என்பதால் இந்த நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். சந்திரனின் இந்த கோட்சார சஞ்சாரத்தைக் கொண்டு தான் ஜோதிடர்கள் தினப்பலன் கணிக்கிறார்கள்.

ஒருவருக்கு சந்திர திசை என்பது 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தைச் சுற்றிவர 27 நாட்கள் ஆகும். சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் நாளை அமாவாசை என்றும், சூரியனுக்கு 7-ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளை பௌர்ணமி என்றும் கூறப்படுகிறது.

சந்திரனால் உண்டாகும் நோய்கள்
தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை பாதிப்பு, காமாலை, உணவு செரிக்காத நிலை, குடல் புண், தைரியம் குறைவு, ஜலதோஷம், காய்ச்சல், தண்ணீர் மூலம் கண்டம் ஏற்படுதல் போன்ற நோய்கள் சந்திரனால் வரக்கூடியவையாகும். வளர்பிறை சந்திரன் வளமான யோகத்தைத் தருவது போல தேய்பிறை சந்திரன் தருவதில்லை. ஜாதகருக்கு வளர்பிறை சந்திரன் யோகத்தையும், தேய்பிறை சந்திரன் கஷ்டத்தையும் கொடுக்கிறார்.

சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை
பெண் பார்த்தல், நகைகள் செய்தல், உறவினரைக் காண செல்லுதல், பசு, கன்று வாங்குதல், இசை பயில, கல்வி கற்க, ஜலத்தில் பிரயாணம் மேற்கொள்ளுதல், வியாபாரம் செய்வது உத்தமம்.

சந்திரனுக்குரிய இரண்டு திருத்தலங்கள்
1. திங்களூர்  2. திருப்பதி
சந்திரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகப் பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

சரி, பரிகாரம் என்ன செய்யலாம்?
• பௌர்ணமி விரதம் சிறப்பான பலன் தரும்.

•  சத்யநாராயண பூஜை செய்வது நன்மை பயக்கும்.

• அம்மன் கோயில்களில் மாலை நேர வழிபாடு செய்வது உத்தமம்.

• பக்தர்களுக்கு, ஏழைகளுக்கு நெய்சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம், பழங்கள் கலந்த சாதம் ஆகியவை வழங்கலாம்.

• சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிடச் சொல்வது நல்லது. இதைத் திங்கட்கிழமை தோறும் செய்யலாம்.

கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் அருளும், மனச்சாந்தியும் கிட்டும்!

ஓம் ஷிர்புத்ராய வித்மஹே
அம்ரித் தத்வாய தீமஹி
தந்நோ சந்த்ர பிரசோதயாத்

என்ற சந்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். 'ஓம் உம் சிவாய நம சந்திர தேவாய நம' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com