குறைவிலா செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் அன்னை மகாலட்சுமி!

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் மார்பில் என்றும் உறைபவளாய்த் திகழ்கிறாள் ஸ்ரீமகாலட்சுமி.
குறைவிலா செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் அன்னை மகாலட்சுமி!

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் மார்பில் என்றும் உறைபவளாய்த் திகழ்கிறாள் ஸ்ரீமகாலட்சுமி. "பரந்தாமன் மார்பை விட்டு அகலமாட்டேன்' என்று அங்கே உறைபவர். தாமரை மலர் மேல் வாசம் செய்யும் ஸ்ரீமகாலட்சுமி.

இருப்பினும் திருவிளையாடல்கள் என்பது ஸ்ரீமந் நாராயணனின் விருப்பம் என்பதால் மகாலட்சுமியும் சில காலம் அவரைப் பிரிய நேர்ந்தது. ஒரு முறை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இந்தப் பூவுலகத்துக்கு வந்தார் லட்சுமி. அன்னை மகாலட்சுமியைக் காணாமல், ஸ்ரீமந் நாராயணனும் அவரைத் தேடிக் கொண்டு பூவுலகத்துக்கு வந்துவிட்டார். மகாலட்சுமியைக் காணாமல் தவித்த மஹாவிஷ்ணு, திருப்பதியில் கோயில் கொண்டார் என்றும், பூவுலகில் வந்திறங்கிய அன்னை மகாலட்சுமி கோலாப்பூரில் குடி கொண்டார் என்றும் கூறுகின்றனர். இந்தத் தலத்தில் கோயில்கொண்ட ஸ்ரீலட்சுமி, கோலாப்பூர் மகாலட்சுமி என்று அழைக்கப்படுகிறார்.

சக்தி தேவி பரிபூரணமாக நிறைந்திருக்கும் இடங்களாக 108 திருத்தலங்களை பல்வேறு புராணங்களும் சுட்டிக் காட்டுகின்றன. இவற்றில் கர்வீர் பகுதி (இப்போது கோலாப்பூர் இடத்தைச் சுற்றியுள்ள பகுதி) மிகவும் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. புக்தி, முக்தி ஆகிய இரண்டு இக பர சுகங்களையும் அளிக்கவல்ல ஆறு சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆகவே, முக்திக்காக வேண்டிக் கொள்ளும் வடகாசியைவிட இந்தத் தலம் மிகவும் உயர்ந்தது என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

இந்தக் கோயிலின் கட்டடக் கலையைப் பார்க்கும்போது, இது கி.பி. 600-700களில் வாழ்ந்த சாளுக்கிய அரசர்களால் கட்டப்பட்டது என்று தெரிய வருகிறது. இந்தக் கோயிலில் தேவியின் திருவுருவச் சிலை ஜெம்ஸ்டோன் வகை கற்களால் ஆனது.

அன்னையின் உருவச் சிலை 40 கிலோ எடை கொண்டதாம். திருவுருவத்தின் பின்புறம் தேவியின் வாகனமான சிங்கத்தின் சிலையும் உள்ளது. தேவி நான்கு கரங்களுடன் கம்பீரமாகத் திகழ்கிறார். அன்னையின் சிரசில் கிரீடம் பளபளக்கிறது. கல் பீடத்தின் மேல் அமைக்கப்பட்ட மகாலட்சுமி விக்ரஹத்தின் வலது கீழ்க் கரத்தில் மாதுலிங்கப் பழத்தையும் (எலுமிச்சையைப் போன்ற ஆனால் கொஞ்சம் பெரியதான ஒரு வகைப் பழத்தையும்), வலது மேல் கையில் கெளமேதகம் என்னும் கதையையும் ஏந்தி இருக்கிறார். கதையின் மேல்புறம் பூமியில் படிந்து உள்ளது. இடது மேல் கரத்தில் கேடயமும், இடது கீழ்க் கரத்தில் பாணபாத்திரம் என்னும் பாத்திரத்தையும் ஏந்தி இருக்கிறார்.

ஸ்ரீலட்சுமியின் கிரீடத்தில் சேஷ நாகம் படமெடுத்த கோலத்திலும், ஆவுடையாருடன் சேர்ந்த லிங்கமும் இருக்கிறது. மற்றெல்லாக் கோயில்களிலும் ஏறக்குறைய விக்கிரங்கள் வடக்கு முகமாகவோ கிழக்கு முகமாகவோ நோக்கியபடி இருக்கும். ஆனால், இங்கே தேவி மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

மேற்குச் சுவரில் ஒரு சிறு ஜன்னல் எப்போதும் திறந்த நிலையிலேயே உள்ளது. ஆனாலும் அந்தி சாயும் மாலை நேரத்தில், வருடத்தில் மார்ச் 21-ம் தேதியும், செப்டம்பர் 21-ம் தேதியும் மட்டும் சூரிய கிரணங்கள் தேவியின் திருமுகத்தில் படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு அவ்வாறு முகத்தில் கிரணங்கள் விழுமாம். தங்கம் போல தகதகக்கும் இந்த அற்புதக் காட்சியைக் காண ஒவ்வோரு ஆண்டும் பக்தர்கள் வெள்ளம் பெருகிக் கொண்டே வருகிறது.

பகவான் மகாவிஷ்ணுவும், என்றும் பிரியாத மகாலட்சுமித் தாயும் கர்வீர் பகுதியில் நிரந்தரமாக அருளை அள்ளி வழங்குகிறார்கள். மகாபிரளய காலத்தின்போதுகூட அவர்கள் இந்தத் திருத்தலத்தை விட்டு அகலுவதில்லையாம். ஆகவே இது ஒரு அவிமுக்தக்ஷேத்ரம் என்று கூறுகின்றனர்.

கர்வீர் பகுதி இறையருள் பெற்ற பகுதி என்பதால், இதற்கு அழிவில்லை உலகமாதா, ஸ்ரீஜகதம்பா தன் கையில் கர்வீரை ஏந்தியிருக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே எந்த அழிவும் நேராத வண்ணம் கர்வீர் காக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டத்தைவிட இந்தத் தலத்தில் தங்குவதையே பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு விரும்புகிறாராம். இது விஷ்ணுபத்னி மகாலட்சுமியின் உறைவிடம் என்பதால் பாற்கடலைவிட உயர்ந்த இடமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. பிரபு ஸ்ரீதத்தாத்ரேயர், பிட்சைக்காக நண்பகல் நேரங்களில் இங்கே வருகிறார் என்கிறது தல புராணம். குறைவிலா செல்வ வளத்தை கொடுக்கும் அன்னை ஸ்ரீ மகாலட்சுமியானவள், சாதாரண நிலையில் இருக்கும் ஒருவனையும் செல்வந்தர் ஆக்கிவிடுவாள் என்பது உண்மை. 

இருப்பிடம்: மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது இந்த ஊர். கர்நாடக எல்லையை ஒட்டிய பகுதி. பெல்ஹாம்-புனா வழித்தடத்தில் உள்ளது கோலாப்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com