சித்தர்களின் பீடமாக விளங்கும் ஊத்துமலை முருகன் கோயில்

சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, அருகில் ஊத்துமலை உள்ளது. 
சித்தர்களின் பீடமாக விளங்கும் ஊத்துமலை முருகன் கோயில்

சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, அருகில் ஊத்துமலை உள்ளது. ஊத்துமலை முருகன் கோவில் மற்றும் சித்தர்கள் திருத்தலமாக அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் உள்ளது  இந்த முருகன் கோயில் உள்ளது

இத்தலம் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. சித்தர்கள் வாழும் மலையாகவும் கருதப்படுகிறது. இம்மலையில் மூன்று நிலைகளில் மூன்று கோயில்கள் உள்ளன. சௌடேஸ்வரி அம்மன் கோயில், பாலமுருகன் கோயில், சத்யநாராயண சித்தர் கோயில். இம்மலையினை சுற்றியுள்ள நான்கு மலைகள் கை கால்களாக உள்ளன. ஸ்கந்த கிரி, நாமகிரி, குமரகிரி பத்மகிரி இம்மலை தலையாக விளங்குவதால் ஸ்தலமலை என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு சன்னதியில் உள்ள பாறையில் ஊற்றுபோல தண்ணீர் வருவதால் இம்மலை ஊத்துமலை எனப்படுகிறது.

பழமை வாய்ந்த ஸ்தலமலை ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் புனரமைப்பு நடைபெற்று வருகிறது. அகத்தியர், போகர் மற்றும் பல சித்தர்கள் தலைமை பீடமாக அமைந்ததால் ஸ்தலமலை என்ற பெயரும், தெய்வீக தன்மையான இடமுமான ஸ்தலமலையில் நம் தேவாங்கர் குல அன்னை சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலித்து வருகிறாள். வேண்டும் வரம் அருளிவரும் அன்னையின் கோயில் 40 ஆண்டுகள் பழமை வாய்த்தது. கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சௌடேஸ்வரி அம்மன் கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனின்று சற்று மேலேற பாலமுருகன் கோயில் சற்று பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இதற்கு சற்று மேலே உள்ளது சத்தியநாராயண சித்தர் கோயில். சற்றே செங்குத்தான வளைந்து நெளிந்து செல்லும் பாதை நம்மை மலைக்கு அழைத்து செல்கிறது. கார்களில் கூட மேலே செல்லமுடியும். பெரிய மலையினை வடபுற சரிவினை மட்டம் செய்யப்பட்டு இக்கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 

முதல் மட்டத்தில் காணப்படுவது சௌடேஸ்வரி கோயில் இக்கோயில் தெய்வமான சௌடேஸ்வரி (சாமுண்டீஸ்வரி) தேவாங்கர் மக்களது குல தெய்வமாக இருந்து வருகிறது, பல ஆண்டுகளாக சிறிய சன்னதியாக இருந்ததை தற்போது கருங்கல் கோயிலாக மாற்றியமைக்கும் பனி நடைபெற்று வருகிறது. இவ்வம்மை வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் இருந்து சற்று மேலேரும் இடத்தில் உள்ளது அகத்தியர் லோபமுத்திரையுடன் தவம் இயற்றிய அவர் தவக்கோலத்தில் உள்ளது போன்று புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த இடத்தில உள்ள பெரிய பாறை ஒன்றில் பெரிய ஸ்ரீசக்கரம் ஒன்று 43 முக்கோணம் உள்ளதாய் செதுக்கப்பட்டுள்ளது. இதனை கரடிசித்தர், சுகமுனி, கன்வர், அகத்தியர், போகர் முதலியோர் வழிபட்டு வந்துள்ளனர். இந்த ஸ்ரீ சக்கரம் செங்குத்து வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளதால் இதனை நேர் நின்று வழிபடுவோருக்கு சர்வ ரோக நிவாரணியாக இது விளங்குகிறது. 

இதய நோய், அதற்கு சிகிச்சை எடுத்தோர் இதனருகில் சில நிமிடங்கள் நின்று தியானித்து சென்றால் தங்களது நோய் விரைவில் நீங்கப் பெறுவார்கள் என்பது நிச்சயம். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் சப்த ரிஷிகளும் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். ஆதலால் அந்த தினத்தில் நாமும் வழிபட்டால் அவர்களது ஆசியும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அருகில் அகத்தியர்
வழிபட்டதனால் அகத்தீஸ்வரர் எனும்  லிங்கமும் உள்ளது. 

அருகில் உள்ள குகை ஒன்றில் கபிலமுனிவர் வசித்து வந்துள்ளார் அங்கு ஒரு புடைப்பு சிற்பம் காணப்படுகிறது அதில் கபிலர் என எழுதப்பட்டுள்ளது எழுத்தமைதியை பார்க்கும்போது நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தற்போது குகை வாயில் அடைக்கப்பட்டுள்ளது எனினும் சித்தர் தவம் செய்த இடத்தில் நாமும் நிற்கிறோம் என்ற எண்ணத்துடன் அவரை நினைவில் கொண்டு தியானிக்க ஏதுவாக ஓர் மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கே தியானிப்போருக்கு ரத்த அழுத்தம் சீராகிறது என்பது ஒரு கூடுதல் தகவல். இன்றைய காலகட்டத்தில் வியாதியே
பெரும்பாலோனோர்க்கு மனக்கஷ்டத்தினை அளிக்கிறது அதனை இங்கு வந்து செலவின்றி தீர்க்க அரும் பொக்கிஷத்தை சித்தர்கள் ஏற்படுத்தி உள்ளனர். 

சற்று மேலே பயணித்தால் பெரிய வளாகமாய் பாலமுருகன் கோயில் உள்ளது. கோயில் ஒரு திருச்சுற்று கூடியதாய் கிழக்கு நோக்கி உள்ளது. சன்னதியின் ஒரு புறம் விநாயகரும் மறுபுறம் சிறிய லிங்கமும் நந்தியும் உள்ளன. இங்குள்ள முருகன் பாலசுப்ரமணியர் என அழைக்கப்படுகிறார், இவர் வலது கையால் மயிலை அணைத்தவண்ணம் காட்சியளிக்கிறார். மயிலும் அதனை விரும்பி சற்றே வளைந்து கொடுப்பதை காணலாம். இங்குள்ள முருகனின் கை வேலுக்கு யோகா வேல் என பெயர், சிரித்த முகத்துடன் அமைதியாக மலைமேல் வருவோரின் துயர் தீர்க்க காத்திருக்கிறார்.

சற்று அடுத்த மலைமுகடில் விஜயலட்சுமி சத்தியநாராயணர் சித்தர் பீட திருக்கோயில் உள்ளது இவர் வைணவ சமயத்தினை சேர்ந்தவர். மலையின் சரிபாதி உயரத்தில் கார்த்திகை தீபமேற்றும் இடம் ஒன்றும் காணப்படுகிறது. ‌பாலமுருகன் கோயிலின் வடபுறம் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள காலபைரவர் சன்னதி உள்ளது. ஆளுயரத்தில் பெரிதாய் காட்சியளிக்கிறார். இங்குத் தைப்பூச விழா, தமிழ் புத்தாண்டு, கார்த்திகைத் திருவிழா போன்ற விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன. மேலும், மலைமேல் புதிதாய் தெற்கு நோக்கி காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை பௌர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

- கடம்பூர் விஜயன்

படங்கள் - மோகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com