இதயத்தில் கோயில் அமைத்த மகானுக்கு இன்று குருபூஜை!

ஈசனின் மீதுள்ள பக்தியின் வெளிப்பாடாக மனதிலேயே கோயில் அமைத்து வழிபட்டவர் பூசலார் நாயனார்.
இதயத்தில் கோயில் அமைத்த மகானுக்கு இன்று குருபூஜை!

ஈசனின் மீதுள்ள பக்தியின் வெளிப்பாடாக மனதிலேயே கோயில் அமைத்து வழிபட்டவர் பூசலார் நாயனார். அந்த மகான் ஐப்பசி மாத அனுஷ நட்சத்திரத்தில் தான் முக்தியடைந்தார். அவரின் குருபூஜை இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரில் உள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்து வருவதைப் பார்த்த பூசலாருக்கு சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை எழுந்ததாம். 

பரம ஏழையான இவர் தன்னை ஒரு பணம் படைத்தவர் போல் கற்பனை செய்து மனதில் கோயில் கட்ட ஆரம்பித்தார். மனம் நினைத்தால் ஒரே நாளில் கோயிலை எழுப்பி விடலாம். ஆனால் பூசலார் அதைச் செய்யவில்லை. உண்மையிலேயே ஒரு கோயில் கட்ட எத்தனை அண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் இந்தக் கோயிலை நுணுக்கமாகக் கட்டி முடித்துள்ளார். 

இந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டிக்கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும், பூசலார் மனக்கோயில் கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். 

மன்னன் கனவில் வந்த சிவபெருமான், அந்த நாளில் வேறொரு கும்பாபிஷேகத்திற்கு நான் செல்ல வேண்டும். நீ வேறொரு தேதியை மாற்றிக்கொள் என்று கூறி மறைந்தார். 

அதிர்ச்சியடைந்த மன்னன் கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு, திருநின்றவூருக்கு புறப்பட்டு பூசலார் கட்டின கோயிலை பற்றி விசாரித்தார். ஆனால் யாருக்கும் அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. பின்னர், அவரை நேரில் சந்தித்து, நேற்றிரவு ஈசன் என் கனவில் திருநின்றவூரில் பூசலார் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்திற்கு நான் செல்ல வேண்டும் என்று கூறியதாக அவரிடம் கூறினார். அந்தக் கோயில் எங்கு என்று கேட்க, மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியடைந்த பூசலார், கோயில் கட்டும் அளவுக்கு என்னிடம் வசதியில்லை. எனது உள்ளத்திற்குள் ஒரு சிவாலயம் கட்டி இன்று கும்பாபிஷேகம் நடத்துவதாகக் கற்பனை செய்துகொண்டேன் என்றார். அதிர்ச்சி அடைந்தான் மன்னன். பின்னர், அதே இடத்தில் நிஜக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. அந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு இருதயாலீஸ்வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. 

பக்தியுடன் ஆண்டவனை நோக்கி ஒருபடி முன்னே வைத்தால், ஆண்டவன் நம்மை நோக்கி பல படிகள் முன்னே வருவான் என்பதற்கு பூசலார் நாயனார் சரிதம் உதாரணம். திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோயிலில் பூசலாருக்கு கருவறையிலேயே சிவனுடன் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com