மகிமை மிகு மஹா சிவராத்திரி

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும்.....
மகிமை மிகு மஹா சிவராத்திரி

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

'சிவ' என்ற சொல்லே 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப் பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு முறை கயிலையில் விளையாட்டாக, எம்பெருமானது திருவிழிகளைத் தம் திருக்கரங்கள் கொண்டு மூடினார் உமாதேவியார். அகில உலகமும் இருண்டது. இக்குற்றத்திற்குப் பிரயச்சித்தமாக, ஆகம விதிகளின் படி, சிவனாரை, உமாதேவியார் வழிபட்ட தினமே மஹா சிவராத்திரி.

தேவர்களும் அசுரர்க‌ளும், பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்க வேண்டி சிவனார் அருந்தினார். உடனே, அருகிருந்த உமாதேவியார், தம் திருக்கரத்தினால், சிவனாரின் கழுத்தை பிடித்து, விஷத்தை எம்பெருமானின் திருக்கழுத்திலேயே நிறுத்தினார். அகில உலகத்துக்கும் அன்னையான அம்பிகை, எம்பெருமானை மட்டும் காக்க வேண்டியா அவ்வாறு செய்தார்?, எம்பெருமான் இவ்வுலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர். ஈரேழு பதினாலு உலகங்களும் எம்பெருமானின் திருவுருவே. எம்பெருமானுக்குள்ளேயே அனைத்து ஜீவராசிகளும் வாசம் செய்கின்றன. ஆகவே ஆருயிர்களுக்கெல்லாம் அன்னையான அம்பிகை அவ்வாறு செய்தார். அதனாலேயே, எம்பெருமானுக்கு 'திருநீலகண்டன்' என்ற திருநாமம் உண்டாகியது. இந்த இறைலீலை நிகழ்ந்த தினமே சிவராத்திரி. அன்றைய தினத்தில் தேவாதி தேவர்களும் எம்பெருமானைப் பூஜித்து வழிபட்டனர்.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூசனையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.

தன்னை அறியாமல் செய்த பூசனைக்கு இவ்வளவு பலன் என்றால், நமக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று யோசித்து பாருங்கள்.....

ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com