கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 3 

கோவை பட்டீசுவரர் திருக்கோயில் என்றாலே, எல்லோருக்கும் இறாவாப்பனை, பிறவாப்புளி என்று ஐம்பெரும்....
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 3 


கோவை பட்டீசுவரர் திருக்கோயில் என்றாலே, எல்லோருக்கும் இறாவாப்பனை, பிறவாப்புளி என்று ஐம்பெரும் அதிசயங்கள் மட்டும் தான் தெரியும். ஆனால், கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர் தலபுராணத்தில், முப்பத்தாறு படலங்கள் அதிசயமானவை.

இந்த தினமணி.காம்-ல், திருப்பேரூர் திருக்கோயில் தொடரை உங்களுக்குத் தருவது, திருப்பேரூர் தலபுராணத்தின் முப்பத்தாறு படலங்களைப் பற்றியே!

முப்பத்தாறு படலங்களும் நீண்ட நெடும் பதிவாக இருப்பதால், இப்படலத்தில் முக்கியமாக உள்ள படலங்களை உங்களுக்கு அளிக்கிறோம். திருப்பேரூர் புராணத்திலும், பண்டைச்சரித வரலாற்றிலும் இருக்கப்பெற்ற பற்பல பழஞ்சரித அடையாளங்களுக்குள்ளே இதுவரை மறைந்து போயினவை பல.

மறைத்து ஒழியச் செய்து சிதைக்கப்பட்டன சில. பாதுகாத்து வைத்திருந்த இடம் தெரியாது போயின பல. இவையெல்லாம் போக எஞ்சியுள்ள ஒரு சில கல்வெட்டுக்களும் கோயில்களின் அமைப்புகள் முதலியன சிலவற்றை மட்டுந்தான். அவற்றுள் இருக்கப்பெறும் மிகையானவொன்று......

ஆதி அரசமரம்
இந்த அரசமரம் இத்தலத்தில் தல விருட்சமாக இருந்தது. இவ்வரசமரம் காலவேசுவரத்தில் உள்ளது. இம்மரத்தடியினிலே சித்த மூர்த்திகளாக வந்த சிவபெருமான் சபை ஒன்றினை உண்டாக்கி அதில் கூத்தாடு தேவர் திருவுருவம் அமையும் வண்ணம் உண்டாக்கினார்.

"ஆதி லிங்கந் தனக்குவட கிழக்கி னெல்லை யடர்வினைகள்
காதி யிருந்த காலவனீச் சரத்துண் மூவ ருருவான
போதி நிழலிற் புக்கருளிப் பொருந்த மன்ற மெழுகவெனச்
சோதி மலர்ந்த திருவாயாற் சொன்னார் மன்ற மெழுந்ததே"
                        -(திருத்தப் படலம்.)

இதன்கீழ், பிரம்மா, விஷ்ணு, காலவர், துர்க்கை ஏனைத்தேவர்கள் முதலியோர் காணப் பங்குனி உத்திர நாளில் நடராசர் திருநடனம் செய்தருளினார். ஏனைய பல திருக்கோயில் தலங்களில் தலமரங்கள் இறந்துபட்டமை போலல்லாது நமது கோவை பேரூரிலே தல விருட்சத்தை இதுவரை உயிருடன் பார்க்கும் பேறு நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. கிடைத்த அற்புத பேற்றை பயன்பெறச் செய்யாமல் வீணே கழித்திருக்கிறோம்.

முன்பு மூன்று பெருங் கிளைகளுடன் இருந்த தல அரசமரம் பின்பு இரண்டு கிளைகள் முறிந்து போய்விட ஒரேயொரு கிளை மட்டுமே இருந்தன. இம்மரத்தடியில் ஸ்ரீ நடராசப் பெருமானைப் பங்குனி உத்திரத்தில் எழுந்தருளுவித்துத் திருநடனங் காணுதல் மிகப்பெரும் பயனைத் தரும் சிவ புண்ணியமாகும். இவ்விடத்தில் பெருமானை எழுந்தருளுவிக்க சிரமங் கருதிப் பிற்காலத்தவர் திருக்கோயிலுக்கு எதிரில் வேறு ஒரு அரசமரம் வைத்து, திருவிழாவை அங்கேயே இப்போதும் நடத்தி வருகிறார்கள்

வசிட்டலிங்கம்
காஞ்சி நதிக்கு வடபுறம் தனியாலயத்தில் வசிட்ட முனிவராற்றாபித்துப் பூசிக்கப் பெற்ற இம்மகாலிங்க மூர்த்தி மேற்படி ஆலயம் பழுதுபட்டிருந்தமையால், ஆற்றிற்கு இப்புறம் கொண்டு வரப்பெற்று அங்குள்ள அரசமரத்தடியில் ஸ்தாபிக்கப் பெற்றுள்ளது. இதற்கு முன்னிருந்த இடத்திலாதல் அது இயலாத போது பிரமகுண்டத்தின் (திருநீற்று மேட்டின்) அருகில் வேறிடத்திலாவது தனியாலயம் அமைத்துத் தாபித்திருந்தால் பெரும் சிவபுண்ணியம் ஆகியிருக்கும். ஆனால், அவ்வாறு இல்லாது விட்டுவிட்டனர்.

திருநீற்று மேடு
இதன் பெருமை பலவாறாகும். புராணத்திலே இத்திருநீற்று மேட்டைப் பற்றி கூறப்பட்டிருந்தும், யாரும் பாதுகாவல் செய்யாமல் விட்டிருந்தனர். இத்திருநீற்று மேட்டினை செப்பனிட்டுத் தூய இடமாய் வைத்திருந்தால் பெரும் புண்ணியம் பெற்றிருக்கும். ஆனால், யாரும் அவ்விதம் செய்யவில்லை.

இத்திருநீற்று மேட்டில் வெட்டி எடுக்கும் வெண்ணிறமான மண்ணே அப்போது திருப்பேரூர் திருக்கோயிலில் விபூதியாக வழங்கப்பட்டு வந்தது. இத்திருநீற்று மேட்டின் விபூதியை அப்போது வாங்கித் தரித்தவர்கள், பிரமராட்சசம், மலம், நோய்கள், பாவங்கள் நீங்கிப் பரிசுத்தம் பெற்றார்களெனப் புராணத்தில் இருக்கிறது.

மகாலிங்க மூர்த்தி
நாரதர், விசுவாமித்திரர், முசுகுந்தன், கரிகாற்சோழன் முதலியோர் ஸ்தாபித்து ஆன்மார்த்தமாகப் பூசித்தனவாகப் புராணத்திற் கூறப்படும் மகாலிங்க மூர்த்திகள் யாவையென சிலகாலமாய் தெரியவில்லை. பட்டி விநாயகர் கோயிலின் முன்புறம் அப்புறமாகக் கேட்பாரற்று ஒரு அரசமரத்தடியில் நடப்பட்டிருந்த இரண்டு மூர்த்திகளே இம்மகாலிங்க மூர்த்திகளென மனம் நினைக்கிறது. 

பன்னீர் மரம்
பட்டி நாயகராகிய மூலலிங்கப் பெருமானார் இக்கலியுக காலத்தில் பன்னீர் மரத்தடியில் வீற்றிருப்பதைக் காண்கிறோம். ஆதிலிங்க மூர்த்திக்குப் பின்புறம் பன்னீர் மரம் வளர்த்தி நிழல் தருகிறது.

மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்
பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க
காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க
கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க

படங்கள் - ச. பாலகிருஷ்ணன், கோவை

-கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com