திருப்பாவை - பாடல் 18

மதத்தை பெருக்கும் யானையைப்போன்று வலிமை

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

கண்ணபிரானை, பலதேவர் முன்னிட்டு எழுப்பலாம் என்று முந்தைய பாடலில் தீர்மானித்த ஆயர் குலத்து சிறுமிகள், பலதேவர் மூலம் கண்ணபிரான், தனது மனைவி நப்பின்னை பிராட்டியுடன் இருப்பதை அறிந்தனர் போலும். நப்பின்னை பிராட்டியின் மாளிகைக்கு சென்று நப்பின்னை பிராட்டியை எழுப்பிய பின்னர், அவள் மூலம் கண்ணபிரானை எழுப்பலாம் என்று முடிவு செய்கின்றனர். நப்பின்னை பிராட்டியை எழுப்பும் பாடல் இது.

பொழிப்புரை

மதத்தை பெருக்கும் யானையைப்போன்று வலிமை உடையவனும், போரினில் எதிரிகளுக்கு பயந்து புறமுதுகு காட்டி ஓடாமல் போர் செய்து அவர்களை வெல்லும் வல்லமைகொண்டவனும் ஆகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னை பிராட்டியே, நறுமணம் வீசும் கூந்தலை உடைய தேவியே, பொழுது விடிந்ததை உணர்த்தும்பொருட்டு கோழிகள் அனைத்து இடங்களிலும் கூவின; மாதவிக் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தல்கள் மீது அமர்ந்திருக்கும் பல வகையான குயில்கூட்டங்கள் கூவின: இவ்வாறு கோழிகள் கூவியதையும் குயில்கள் கூவியதையும் நீ உணரவில்லையா. பந்தாட்டத்தில் கண்ணனைத் தோற்கடித்து உனது விரல்களால் அந்த பந்தினைப் பற்றி இருப்பவளே, நீ கண்ணனை விளையாட்டாக பரிகாசம் செய்யும்போது நாங்களும் உன்னுடன் சேர வேண்டும் அல்லவா, எனவே நீ உனது செந்தாமரைக் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிப்ப, அந்த கைகளை அசைத்து, உனது மாளிகைக் கதவுகளை திறப்பாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com