திருப்பள்ளியெழுச்சி  - பாடல் 4

திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு
        தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால் தொழுகையர்
        அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்
                எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

இருக்கு = ரிக் முதலான நான்கு வேதங்கள். துன்னிய = நெருங்கிய. பிணைமலர் = தொடுக்கப்பட்ட மலர் மாலைகள். பெருமானின் அருட்கண்ணோக்கம் தங்கள் மீது பட வேண்டும் என்ற விருப்பத்துடன், அவரது சன்னதியில் காத்திருப்பவர்கள் யார் யார் என்று இந்த பாடலில் மணிவாசகர் பட்டியல் இடுகின்றார்.

பொருள்

திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, இனிய இன்னிசை எழுப்பும் வீணையை கையில் வைத்திருப்பவர்கள் ஒரு புறமும், யாழினை மீட்டுபவர்கள் ஒரு புறமும், இருக்கு முதலான நான்கு வேதங்களையும் தோத்திரங்களையும் பாடுவோர்கள் ஒரு புறமும், நெருக்கமாக தொடுக்கப்பட்ட மலர்மாலைகளை கையில் ஏந்தியவர்கள் ஒரு புறமும், தங்களது கைகளைக் கூப்பி தொழுகின்ற அடியார்கள் ஒரு புறமும், உன் மீது கொண்ட அன்புப் பெருக்கினால் தங்களின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வரும் நிலையில் உள்ள அடியார்கள் ஒரு புறமும், உன் மீது கொண்ட அன்பு மிகுதியால் தங்களது உடல்கள் துவளும் அடியார்கள் ஒரு புறமும், தங்களது தலைகளின் மீது கைகளைத் தூக்கி உன்னை வணங்கும் அடியார்கள் ஒருபுறமும், உனது சந்நிதானத்தில் உனது மலர்ந்த திருமுகத்தைக் காண காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அருள் புரியவும், அடியேனை ஆண்டு கொண்டு அருள் புரியவும் பெருமானே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com