திருப்பாவை - பாடல் 26

தேவகிக்கு மகனாகப் பிறந்த அதே இரவினில்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

பறை தந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்வோம் என்று கூறிய ஆயர் குலத்துச் சிறுமிகளை நோக்கி, கண்ணபிரான், நான் மிகவும் நிச்சயமாக பறை தருகின்றேன்; உங்களுக்கு வேறு ஏதேனும் தேவை இருந்தால் அதனையும் தெரிவிக்கலாம் என்று சொன்னான் போலும். உடனே அந்த சிறுமிகள் தங்கள் முன்னோர்கள் நோன்புகள் நோற்றபோது பயன்படுத்திய பொருட்களை பட்டியல் இடும் பாடல். பாசுரத்தின் பல பாடல்களில் பறை இசைக்கருவியினை வேண்டிய ஆயர் சிறுமிகள், தங்களது நோன்பு எவ்வாறு முடிய வேண்டும் என்ற விருப்பத்தினை வெளிப்படுத்தி மேலும் பல வரங்களை கண்ணனிடத்தில் கேட்பதை உணரலாம்.

பொழிப்புரை

அடியார்களை உன் மீது மோகம் கொள்ளவைக்கும் பெருமானே, நீலமணி போன்ற நிறம் கொண்ட மேனியினை உடையவனே, மார்கழி மாதத்தில் நீராடி நோன்பு நோற்ற எங்களது முன்னோர்கள் செய்த செயல்களையும் நோன்பு முடிந்த பின்னர் அவர்கள் சமர்ப்பித்த வேண்டுகோளையும் உரைக்கின்றோம், கண்ணபிரானே நீ கேட்பாயாக. உலகில் உள்ளோர் அனைவரும் நடுங்கி அடங்குமாறு ஓசை எழுப்பும் வல்லமை உடையதும், பால் போன்ற நிறத்தினை உடையதும், உனது பாஞ்சசன்னியம் போன்றதும் ஆகிய பெரிய சங்கங்களை ஊதியும், மிகவும் பெரிய பறைகளைக் கொண்டும் இசைத்து, எங்களது முன்னோர்கள் பல்லாண்டு பாடினார்கள். எனவே அவ்வாறு நாங்களும் பல்லாண்டு இசைக்க, சங்குகளும், பறைகளும், மங்கல தீபங்களையும், கொடிகளையும், விதானங்களையும், ஊழிக்காலத்தில் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பெருமானே, நீ எங்களுக்கு தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com