பசும்பொன்னில் தேவர் குருபூஜை, ஜயந்தி விழா தொடக்கம்: பெண்கள் 1009 பால்குட ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உ.முத்துராமலிங்க தேவரின் 54-ஆவது குருபூஜையும், 109-ஆவது ஜயந்தி விழாவும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தேவர் குருபூஜையை முன்னிட்டு, முதுகுளத்தூரில் உள்ள தேவர் சிலைக்கு வெள்ளிக்கிழமை 1009 பால்குடம் எடுத்துவந்து பாலாபிஷேகம் செய்த பெண்கள்.
தேவர் குருபூஜையை முன்னிட்டு, முதுகுளத்தூரில் உள்ள தேவர் சிலைக்கு வெள்ளிக்கிழமை 1009 பால்குடம் எடுத்துவந்து பாலாபிஷேகம் செய்த பெண்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உ.முத்துராமலிங்க தேவரின் 54-ஆவது குருபூஜையும், 109-ஆவது ஜயந்தி விழாவும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆண்டுதோறும் 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குருபூஜை மற்றும் ஜயந்தி விழாவாகவும் நடைபெறும்.
ஆன்மிக விழாவான வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மங்கல மேளத்துடன் யாகங்கள் மற்றும் பூஜைகள் தொடங்கின. ஆன்மிகவாதிகள் வேதங்களை ஓதி, திருவாசகம் உள்ளிட்ட பாடல்களைப் பாடினர். இதில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்துவந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். பொதுமக்கள் நேர்த்திகடனாக மொட்டையடித்து முடிக் காணிக்கை செலுத்தினர். தேவரின் நினைவாலயத்தின் எதிரே அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்து சென்றனர்.
மாலையில், 1,108 திருவிளக்கு பூஜையும், இரவில் அலங்கரிக்கப்பட்ட தேவரின் ஐம்பொன் சிலை பசும்பொன் கிராமத்தை சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடந்து, ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.
தீபாவளி திருநாளான சனிக்கிழமை காலை லட்சார்ச்சனை பூஜையும், அரசியல் விழாவும் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேவர் குருபூஜை மற்றும் ஜயந்தி விழா நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.
முதுகுளத்தூரில் 1009 பால்குட ஊர்வலம்: முத்துராமலிங்க தேவரின் 109-ஆவது ஜயந்தி விழா மற்றும் 54-ஆவது குருபூஜையை முன்னிட்டு, முதுகுளத்தூரில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் இருந்து பேருந்து நிலையத்தில் உள்ள தேவாó சிலைக்கு பெண்கள் 1009 பால்குடம் எடுத்துவந்தனர். பின்னர், தேவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி என 19 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியை புதிய பார்வை இதழாசிரியர் ம. நடராஜன் தொடக்கிவைத்து, தேவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து தேவர் உருவப் படத்துடன் மேளதாளங்களுடன் வீதியில் ஊர்வலமாக வந்தனர்.
இதற்கு, ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் மயில்வேல் பாண்டியன் தலைமை வகித்தார். செயலர் கார்த்திகேயன், பொருளாளர் மாயகிருஷ்ணன், புனவாசல் பூசாரி செந்தூர்பாண்டி, வீரமாகாளி கோயில் பூசாரி சித்தர் சீனி, நேதாஜி அறக்கட்டளை தலைவர் திருமயில்வாகனன் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை, முதுகுளத்தூர் டி.எஸ்.பி. கணேசன் உள்பட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com