நன்கொடை திட்டத்தின் கீழ் வாடகை அறைகள்

திருப்பதியில் உள்ள வாடகை அறைகளை காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
அறங்காவலர் குழு கூட்டத்தில் பங்கேற்ற குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்.
அறங்காவலர் குழு கூட்டத்தில் பங்கேற்ற குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்.

திருப்பதியில் உள்ள வாடகை அறைகளை காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
திருமலை அறங்காவலர் குழுவின் இறுதிக் கூட்டம் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அன்னமய்ய பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
வரும் மே மாதம் 20 முதல் 26-ஆம் தேதி வரை ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மாவட்டத்துக்கு ஆயிரம் மாணாக்கர்களை தேர்ந்தெடுத்து தேவஸ்தானம் சார்பில் சுபப்ரதம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதில் பங்கு கொள்ளும் மாணாக்கர்களுக்கு ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் வகுப்புகள், தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் புதிய காத்திருப்பு வளாகம் கட்ட ரூ. 2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் நடத்திய தலைமுடி விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ. 5.27 கோடி வருமானம் கிடைத்தது.
தேவஸ்தான காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ், திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வறையில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 15 லட்சமும், விஷ்ணு நிவாசத்தில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 10 லட்சமும், சூட் அறைகளுக்கு ரூ. 18 லட்சமும் என நன்கொடை பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு பக்தர்கள் தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய அரசு உதவியுடன் திருப்பதியில் அறிவியல் அருங்காட்சியகம் ஏற்படுத்த 19 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது.
திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு வெள்ளியினால் ஆன புதிய சிம்ம வாகனம் தயாரிக்க ரூ. 72 லட்சமும், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பொன்விழா வளைவு அருகில் ஏழுமலையான் கோயில் கட்ட ரூ. 29 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியை அடுத்த அப்பளாய்குண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் மாதத்தில் இரண்டு புதன்கிழமைகளில் அஷ்டோத்ர சதகலசாபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சித்தூரில் உள்ள மலையப்ப பெருமாள் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 46.35 லட்சமும், அதே ஊரில் உள்ள காமாட்சி சமேத மூலஸ்தானேஸ்வர சுவாமி கோயில் ராஜகோபுரம் கட்ட ரூ. 28.12 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சித்தூர் அருகில் குந்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபட்டாபிராம பக்தஜன மடத்தை புதுப்பிக்க ரூ. 13.5 லட்சமும், நிஜாமாபாதில் உள்ள ஸ்ரீஷீதல வெங்கடேஸ்வர சுவாமி கோயிலை புதுப்பிக்க ரூ. 25 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பந்திபூர் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி மற்றும் ராஜராஜேஸ்வரி கோயில் கட்ட ரூ. 25 லட்சமும், கம்மம் மாவட்டத்தில் உள்ள சீதாராம சுவாமி கோயில் கட்ட ரூ. 23.85 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமலை மடப்பள்ளியில் பணிபுரியும் 492 ஊழியர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை, சுபதம் வழியில் ஏழுமலையான் தரிசனம், குடும்பத்தினருக்கு தேவஸ்தான மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம் கோயிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. நெல்லூரில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கட்ட ரூ. 50 லட்சமும், கம்மம் மாவட்டத்தில் சிவாலயம் கட்ட ரூ. 46.35 லட்சமும், அங்குள்ள சத்திரத்தை செப்பனிடும் பணிக்கு ரூ. 28.75 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஸ்ரீகூர்மத்தில் உள்ள கூர்மநாத சுவாமி கோயிலில் சத்திரத்தை செப்பனிடும் பணிக்கு ரூ. 13 லட்சமும், விஜயநகரத்தில் ஸ்ரீராமர் கோயில் கட்ட ரூ. 24.50 லட்சமும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஸ்ரீபூர்ணாம்பிகேஸ்வர சுவாமி கோயில் கட்ட ரூ. 37 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com