இன்று ஆடிக் கிருத்திகை! முருகன் கோயில்களில் ஆரவாரக் கொண்டாட்டம்!

ஆடிக் கிருத்திகை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  
இன்று ஆடிக் கிருத்திகை! முருகன் கோயில்களில் ஆரவாரக் கொண்டாட்டம்!

ஆடிக் கிருத்திகை தமிழகம் முழுவதும் இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமையான இன்று ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுவதால் இன்று காலை முதல் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருத்தணி, பழநி, திருச்செந்தூர் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில்களில் குவிந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா என மனமுருக வழிப்பட்டனர்.

முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆடிக் கிருத்திகை, கந்தசஷ்டி விரதம், தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், போன்றவை முக்கியமான விஷேசங்கள். வழக்கமாக ஆடியில் ஒவ்வொரு கடவுளுக்கும் பண்டிகைகள் தொடர்ச்சியாக வரும். அதனால்தான் தை மாதக் கார்த்திகையை விட ஆடி மாதக் கார்த்திகை சிறப்பானதாக உள்ளது. இது தேவர்களின் மாலைக் காலம் என புராணங்கள் கூறுகின்றன. முருக பக்தர்கள் ஆடி மாதம் துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களுக்கு மக்கள் அதிகாலையில் வந்து குவிந்துள்ளனர். சென்னையில் பிரசித்திப் பெற்ற முருகன் கோவில்களான கந்த கோட்டம், வடபழநி, குன்றத்தூர், சிறுவாபுரி, திருப்போரூர் ஆகிய கோயில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை கண் குளிர தரிசனம் செய்தனர். வடபழனியில் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. அதன் பின் முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை குமரன் கோயிலில், கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகன் செவ்வாயின் அம்சம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் பலவற்றிலிருந்து விடுபடலாம். செவ்வாய் தோஷத் தடை, புத்திர தோஷம், திருமணத்தடை, சொத்துப் பிரச்னைகள், குடும்ப சண்டைகள் மனமுருகி கந்தனை வேண்டினால் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகனை வணங்கி வேண்டினால் மலை போல் வந்த பிரச்னைகளும் பனியாகக் கரைந்தோடிவிடும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலைகளில் பால் குடம் தூக்கியும்,  தோள்களில் காவடி சுமந்தும், உடலில் பல இடங்களில் அலகு குத்தியும் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்தனர். பக்தர்களின் அரோகரா முழக்கம் காற்றில் ஓங்கி ஒலித்து பக்தி பரவசப்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com